ஆந்திரா மாநிலம் மகாநந்தி கோவில்

By News Room

நந்தீஸ்வராய நமோ நமஹ....

சிவத்தலங்கள் அனைத்திலும் சன்னிதிக்கு முன்பாக, காவலாக அமர்ந்துள்ள நந்திக்கு, இறைவன் பிரத்யேகமாக அருள்பாலித்த இடம் ஆந்திரா மாநிலம் நந்தியால் அருகே உள்ள மகாநந்தி தலம் ஆகும்.

நந்தி என்றால் ‘பிறரை மகிழ்விப்பவர்’ என்று அர்த்தம். அந்தப் பெயர் இறைவனின் வாகனமாக விளங்கும் நந்தி தேவருக்கு சிறப்பாக பொருந்தும். பிரபஞ்சத்தின் நாயகனான சிவபெருமான், நந்திக்கு நிறைய அதிகாரங்களை வழங்கியுள்ள காரணத்தால், அவருக்கு ‘அதிகார நந்தி’ என்ற பெயரும் உண்டு. உலகின் முதல் குருவான நந்தியிடம், அனங்கன், இந்திரன், சோமன், கந்தர்வர்கள் உள்ளிட்ட பல தேவர்கள் வேதங்களைக் கற்றதாக ஐதீகம்.

சிவபெருமானின் வாகனம் மற்றும் கொடி ஆகியவற்றில் உள்ள நந்திதேவர், வெண்மை நிறம் கொண்டவர். அறம், தூய்மை மற்றும் ஆண்மை ஆகியவற்றின் அடையாளமான தர்ம தேவனின் வடிவத்தில், சிவனுடைய வாகனமாக விளங்குபவர். சிவன், பார்வதி ஆகிய இருவர் முன்பாக ஆனந்த வடிவாகவும் அமர்ந்திருக்க கூடியவர் நந்தியம்பெருமான்.

 சிவபெருமானின் நெற்றிக்கண் பார்வைக்கு, நேர் எதிரில் நிற்க நந்திதேவரைத் தவிர வேறு யாராலும் முடியாது. அப்படியொரு வரத்தை சிவபெருமானே நந்திக்கு வழங்கியுள்ளார். அதன் அடிப்படையில், சிவத்தலங்கள் அனைத்திலும் சன்னிதிக்கு முன்பாக, காவலாக அமர்ந்துள்ள நந்திக்கு, இறைவன் பிரத்யேகமாக அருள்பாலித்த இடம் ஆந்திரா மாநிலம் நந்தியால் அருகே உள்ள மகாநந்தி தலம் ஆகும்.

பல யுகங்களுக்கு முன்னர் சிலாத மகரிஷி, நல்லமலை தொடர் பகுதியில் இருந்த வில்வ மரக்காடுகளின் இடையே ஆசிரமம் அமைத்து தங்கியிருந்தார். அவருக்கு தனக்குப் பின்னர் ஈசனை வழிபட ஒரு மகன் வேண்டும் என்ற ஆவல் இருந்தது. மகேஸ்வரனிடம் குழந்தைப் பேறு அருளுமாறு சிலாத மகரிஷி வேண்டினார்.

அதன்படி இறைவன் அருளால், மல்லிகார்ஜூனன், நந்தனன் என்று இரண்டு மகன்கள் பிறந்தார்கள். பெரிய மகன் மல்லிகார்ஜூனன், ஸ்ரீசைலத்தில் இருக்கும் மல்லிகார்ஜுனரை நினைத்து தவம் செய்தான். அதன் மூலம், ஈசனைத் தன் இதயத்தில் குடிகொள்ளும் வரம் பெற்றான். இளைய மகன் நந்தனன், தனது தந்தையிடம் வேதங்களையும், உபநிடதங் களையும் கற்றுத் தேர்ந்து, கயிலைநாதனை நோக்கித் தவம் புரிந்தான். அவனுக்கு காட்சியளித்த சிவபெருமான், “என்ன வரம் வேண்டும்?” என்றார்.

அதற்கு நந்தனன், “நான் எப்போதும் உங்களுக்கு சேவை செய்யும் பெரும் பேற்றை தந்தருள வேண்டும்” என்று வேண்டினார்.

நந்தனின் உள்ளத்தில் இருந்த அன்பை உணர்ந்த சிவன், அவரைத் தன் வாகனமாக விளங்குமாறு அருள் செய்ததுடன், தனது பூத கணங்களுக்கு தலைவராகும் தகுதியையும் அளித்தார். அப்படிப்பட்ட வரத்தை நந்தி பெற்ற திருத்தலம் என்பதால், நந்திக்கு உரிய தலமாக மகாநந்தி தலம் அறியப்படுகிறது. நந்தனன் தவம் செய்யும்போது உருவான புற்றே, இந்த தலத்தில் லிங்க வடிவில் வழிபடப்படுகிறது. இந்த தலத்து இறைவன் மகாநந்தீஸ்வரராக காட்சி தருகிறார். இங்கு சிவபெருமானுக்கு சுக்கு, சர்க்கரை, வெண்ணெய் மூன்றும் கலந்து நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.

கலியுகத்தில் நந்த சக்ரவர்த்தியால் கட்டமைக்கப்பட்ட இந்த திருத்தலம், பல்வேறு காலகட்டங்களில் பல மன்னர்களால் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 7-ம் நூற்றாண்டில் சாளுக்கிய மன்னர்களும், 11-ம் நூற்றாண்டில் அப்பகுதியை ஆண்ட நந்த வம்சத்து அரசர்களும் கோவிலை பெரிதாக அமைத்துள்ளார்கள். விஜயநகர மன்னர்களில் கிருஷ்ணதேவராயரின் சகோதரர் சிம்மதேவராயர், இந்த ஆலயத்தின் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி இருக்கிறார். 17-ம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட கர்நூல் நவாப், மகாநந்தி சிவராத்திரி திருவிழாவுக்கு ஆண்டுதோறும் நன்கொடைகள் அளித்து வந்துள்ளார்.

கருவறையில்....

 மகாநந்தீஸ்வரர் மேற்குத் திசை நோக்கி உள்ளார். சுயம்பு லிங்கம் என்பதால், பக்தர்கள் அவர்களாகவே லிங்கத்துக்கு அபிஷேகம் செய்யலாம். நந்தீஸ்வரர் முழுமையான லிங்க வடிவில் இல்லாமல், பசுவின் கால் பட்டு உடைந்த புற்று வடிவில் இருக்கிறார். அதன் நடுவில் இருந்து நீர், தீர்த்தமாக பெருகி வெளிவருகிறது. அதன் பீடம் தரையின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ளது. நந்தீஸ்வரர் சன்னிதிக்கு முன்புறமாக, தலத்துக்குப் பெருமை சேர்க்கும் நந்தி, பிரமாண்டமான வடிவில் இறைவனை எப்போதும் தரிசித்தவாறு காட்சி தருகிறார். தலத்தின் மூலவர் ஸ்ரீமகாநந்தீஸ்வரர் மற்றும் அம்பிகை ஸ்ரீகாமேஸ்வரி.

கோவில் தீர்த்தக் குளம்....

ஆச்சரியம் நிறைந்த அற்புத தீர்த்தம் கங்கையைத் தலையில் அணிந்த கங்காதரரின் காலடியில் இருந்து, இத்தலத்தின் புஷ்கரணி தோன்றுகிறது. சுயம்பு லிங்கத்தின் கீழே எங்கிருந்து நீர் வருகிறது என்பது இன்றுவரை அறியப்படாத புதிராகவே உள்ளது. கருவறையில் தோன்றும் புனித நீர், சன்னிதிக்கு அடுத்த முக மண்டபத்துக்கு எதிரே உள்ள ருத்ர குண்டத்தில் சென்று சேருகிறது. ஈசன் சன்னிதியில் இருந்து பெருகும் நீர், ருத்ர குண்டத்துக்குள் ஒரு நந்தியின் வாயில் இருந்து கொட்டுவது போல அமைக்கப்பட்டுள்ளது. பளிங்கு போல சுத்தமாக உள்ள இந்த நீர், கோடையிலும், கொட்டும் மழையிலும் ஒரே அளவாக சுரப்பது ருத்ர குண்டத்தின் சிறப்பாக பக்தர்களால் குறிப்பிடப்படுகிறது.

60 அடி அகலமும், 5 அடி ஆழமும் கொண்ட ருத்ர குண்டத்தில் நீராடினால், பல பிறவிகளில் சேர்த்த பாவங்களைப் போக்கலாம் என்பது ஐதீகம். மேலும் இந்த நீர், தீராத நோய்களையும் தீர்க்கும் மருத்துவ குணம் நிறைந்தது. அந்த தண்ணீர் ஆலயத்துக்கு வெளியே உள்ள இரட்டைக் குளங்களை அடைவதால், ஆலயம் மூடி இருந்தாலும் இந்த நீரில் நீராடலாம். அந்த குளங்களில் இருந்து வெளியேறும் நீர், கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்திற்கு பாசன நீராகவும் பயன்படுகிறது.

வைகாசி மாதம், சுத்த சப்தமி அன்று எல்லா நதிகளும், சமுத்திரங்களும், இங்குள்ள ருத்ர குண்டத்தில் வந்து சேர்வதாக புராணங்கள் சொல்கின்றன. அன்றைய தினம் இங்கு நீராடினால் அத்தனை புனித தீர்த்தங்களிலும் நீராடிய பலன் கிடைக்கும். அந்த நாளில் இங்கு கும்பமேளா போல மக்கள் கூடி நீராடுகிறார்கள்.

நவநந்தி தலங்கள்....

மகாநந்தி தலத்தைச் சுற்றி சுமார் 15 கிலோமீட்டர் சுற்றளவில், விநாயக நந்தி, கருட நந்தி, சூரிய நந்தி, சோம நந்தி, சிவ நந்தி, விஷ்ணு நந்தி, பிரம்ம நந்தி, நாக நந்தி ஆகிய நந்தி களுடன் இந்த தல நந்தியையும் சேர்த்து மொத்தம் ஒன்பது நந்தி தலங்கள் அமைந்துள்ளன. இந்த ஒன்பது தலங்களும் ‘நந்தி மண்டலம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நந்திகளுக்கு நாயகனாக, மகாநந்தியில் உள்ள சிவன் மகாநந்தீஸ்வரர் திகழ்கிறார். பிரம்ம நந்தி தலம், நந்தியால் ரெயில் நிலையம் அருகே உள்ளது.

நந்தியாலுக்கு மேற்கே உள்ள ஆஞ்சநேயர் ஆலயத்தில் நாக நந்தி உள்ளது. சூரிய நந்தியானது, நந்தியாலுக்கு கிழக்கே இருக்கிறது. சிவ நந்தி என்பது நந்தியாலில் இருந்து 14 கி.மீ தொலைவிலுள்ள காதமாலா ஏரி அருகே உள்ளது. கருட நந்தியானது மகாநந்திக்கு மேற்கேயும், விஷ்ணு நந்தியானது மகாநந்திக்கு இரண்டு கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளன. சோம நந்தி என்பது நந்தியாலுக்கு மேற்கே ஆத்மகூர் அருகிலும், விநாயக நந்தி என்பது மகா நந்தியிலும் அமைந்துள்ளது. காலையில் தொடங்கி, மாலைக்குள் நவ நந்திகளையும் தரிசனம் செய்பவர்கள் இந்த பூமியையே வலம் வந்த பலனை பெறுகிறார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

அமைவிடம்

இந்தத்தலம் ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள நந்தியாலில் இருந்து 16 கி.மீ தூரத்தில் மகாநந்தி தலம் அமைந்துள்ளது..

.
மேலும்