அனுமன் வாலில் நெருப்பிட்டும் ஏன் உஷ்ணமே இல்லை?

By News Room

"ராவணா! எங்கள் ராமனைப் பற்றி நீ தெரிந்து கொள். நான் அவருடைய தொண்டன்; அவரே எனக்கு உயிர் என்பதால், இப்போது நான் சொல்லும் அனைத்தும் நிஜம். அவர் சத்தியத்தின் வடிவம். தர்மத்தின் சொரூபம். அவரை வெல்வதற்கு உலகில் யாரும் பிறக்கவில்லை. எனவே, அவருக்கு துரோகம் செய்துவிட்டு, நீ பிழைத்திருக்கலாம் என்று நினைக்காதே! நீ சிவபக்தனானாலும், அடுத்தவன் மனைவியை அபகரித்ததால், சிவனும் பிரம்மனும் உன்னைக் காப்பாற்ற முன்வரமாட்டார்கள். எங்கள் ராமனைச் சரணடைந்து உன்னைக் காப்பாற்றிக்கொள்", என்றார். மாருதியின் இந்தச் சொற்கள் ராவணனை மிகுந்த ஆத்திரமடையச் செய்தன. கோபத்தில் அந்த அசுரன், "இந்தக் குரங்கைக் கொன்று விடுங்கள்", என்று ஒரேயடியாக உத்தரவு போட்டுவிட்டான். அப்போது விபீஷணன் எழுந்தான். "அண்ணா! இது முறையல்ல. தனது எஜமானன் சொல்லியனுப்பியதை தூதனாகிய இவன் வந்து சொன்னான். அது ஒன்றும் தவறல்ல, அதற்காக, இவனைக் கொல்வது என்பது தங்களது புகழுக்கு இழுக்கைத் தரும். நியாயத்தைக் கடைபிடிக்கும் எந்த அரசனும் தூதர்களைக் கொல்வதில்லை. தங்களை வெல்வதற்கு இந்த உலகில் யாரும் பிறக்கவில்லை என்பது ஊரறிந்த விஷயம். எனவே, இந்தக் குரங்கு இப்படி சொல்லிவிட்டதே என்பதற்காக கலங்க வேண்டாம். தாங்கள் இந்த தூதனை விடுவித்து விடுங்கள், என்றான்.

 

ராவணனோ ஆத்திரம் அடங்காமல், "விபீஷணா! இவன் பாவி. பாவிகளைக் கொல்வது தவறல்ல", என்றதும், இடைமறித்த விபீஷணன், "அண்ணா! வேண்டாம்! இவன் நமது படையினரைக் கொன்றிருக்கிறான் என்பது நிஜமே. இருப்பினும், தூதன் என்ற நிலையில் வந்திருப்பதால், தூதர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்பதற்கு பெரியோர்கள் வகுத்து வைத்துள்ள விதிகளின்படி, அங்கஹீனம் செய்தல், சாட்டையடி கொடுத்தல், மொட்டையடித்தல் போன்ற தண்டனைகளைக் கொடுக்கலாம். இது எதிரிகளை அவமானப் படுத்தியதற்கு சமம். நம் பராக்கிரமத்தை அவர்கள் உணர்வதற்குரிய சந்தர்ப்பமாகவும் அமையும். இதில் எந்த தண்டனையைக் கொடுப்பது என்ற முடிவைத் தாங்கள் எடுத்துக் கொள்ளலாம்", என்று யோசனை சொன்னான். ராவணன் இதை ஏற்றுக் கொண்டான். "விபீஷணா! தக்க சமயத்தில் சரியான யோசனை சொன்னாய். இந்த தூதனுக்கு மறக்க முடியாத தண்டனை ஒன்றைக் கொடுக்க வேண்டும்.

குரங்குகளுக்கு அழகும் ஆபரணமுமாக இருப்பது வால் தான். இந்தக் குரங்கின் வாலில் நெருப்பு வைத்து இந்த பட்டணம் முழுவதும் இழுத்துச் செல்லுங்கள்", என்றான். வால் என்றதும் கர்ண பரம்பரைக் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. ராவணனிடம் இருந்து சீதை மீட்கப்பட்டதும், கிஷ்கிந்தையில் அவர்கள் இறங்கிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கிருந்த வானரப் பெண்களுக்கு, இந்த யுத்தத்துக்கு காரணமான சீதையைப் பார்க்க வேண்டுமென்று ஆசை. சுக்ரீவனின் வேண்டுகோளுக்கு இணங்க, புஷ்பக விமானத்தில் வந்த ராமனும், சீதையும் தரையிறங்கினர்; அப்போது, ஒரு வானரப் பெண், 'இந்த சீதாவின் அழகில் மயங்கி தான் ராவணேஸ்வரன் இவளைக் கடத்திப் போனான் என்றார்கள். இவள் அழகாகத்தான் இருக்கிறாள். ஆனால், அதிலும் ஒரு குறை. இவளுக்கு நம்மைப் போல் வால் இல்லையே!' என்றாளாம். அவரவருக்கு அவரவர் இயல்பு அழகு. அதிலும் குரங்குகளுக்கு நீண்ட வால்தான் அழகு. அதனால் தான் வாலுக்கு தீ வைக்கச் சொன்னான் ராவணன்.நாம் கூட குழந்தைகள் சேஷ்டை செய்தால், இவன் சரியான வாலு என்போம்; காரணம், அந்த வால் எத்தகைய சேஷ்டைகளைச் செய்யப் போகிறது என்பதை இனிமேல் தானே பார்க்கப் போகிறோம்.

 

 அசுரர்களுக்கு மிகுந்த சந்தோஷம்.

"அடேய்! சரியான சந்தர்ப்பம். இந்தக் குரங்கு நம் உறவினர்களில் பலரைக் கொன்று விட்டது. அதற்கு பழிவாங்க சரியான சந்தர்ப்பம். இதன் வாலில் துணிகளைச் சுற்றுங்கள். எண்ணெய்யை ஊற்றுங்கள். நெருப்பு வையுங்கள்", என்று கூச்சலிட்டனர். அப்போது மாருதி தன் மனதில், 'இவர்களை மட்டுமல்ல! இங்கிருக்கும் ராவணனையும் என்னால் கொல்ல முடியும். ஆனால், ராவணனைக் கொல்வதாக ராமபிரான் சபதம் எடுத்திருப்பதால், நான் அவரை மீறியதாக ஆகிவிடும். எனவே, இவர்களுக்கு உயிர் பிராணன் தருவது என் கடமையாகிறது. இப்போது, இவர்கள் என்னைக் கட்டி இழுத்துச் செல்வதும் நன்மைக்குத் தான்! இலங்கையை அணு அணுவாகப் பார்த்து விடலாம். போருக்கு வரும் போது, எந்த இடத்திற்குச் செல்வது என்று முடிவு செய்ய வசதியாயிருக்கும்', என்று நினைத்தார். ராட்சஸர்கள் அவரது வாலுக்கு தீ வைத்தனர். அந்த வெப்பத்தைத் தாங்கிக் கொண்டு அவர்களுடன் நகர்வலம் வந்தார். இந்த விஷயத்தை ராட்சஸகள் சிலர் சீதையிடம் சென்று தெரிவித்தார்கள். அவள் உயிரே போனது போல துடித்துப் போனாள். சீதாதேவி போன்ற தாயை உலகில் பார்க்க முடியாது. நமக்கு ஒரு கஷ்டம் வந்து சீதையை பிரார்த்தித்தால் அவள் நம்மைக் காப்பாற்ற ஓடோடி வந்து விடுவாள். நமக்காக கண்ணீர் வடிக்கும் கருணை தெய்வம் அவள். 'எனக்காக இங்கு வந்தவனுக்கு இந்தக் கதியா!' என்றவள், அக்னி பகவானிடம், 'பகவானே! நான் என் கணவருக்கு செய்த பணிவிடைகள் அனைத்தும் உண்மையானால், நான் கற்புக்கரசி என்பது நிஜமானால், மாருதிக்கு நீ எந்த துன்பத்தையும் தரக்கூடாது. வெம்மைக்கு பதிலாக குளிர்ச்சியைத் தர வேண்டும்', என்று பிரார்த்தித்தாள். மாருதிக்கு ஆச்சரியம். 'வாலில் நெருப்பு எரிகிறது. ஆனால், உஷ்ணமே இல்லை. இது எப்படி சாத்தியம்?' என்று ஆச்சரியப்பட்டார்.....

.
மேலும்