வீசிய இடக்கை ‘கஜஹஸ்தம்.’ அதன் ஒரு விரல் தூக்கிய திருவடியைக் காட்டிக்கொண்டிருக்கும். எடுத்த திருவடி பிறவிக் கடலில் தத்தளிக்கும் உயிர்களை மீட்டு அருளும். ஊன்றிய திருவடி ஆணவம், கன்மம், மாயை என்னும் நம்முள் இருக்கும் மாயைகளின் உருவகமான முயலகனை அழித்து மறைத்தல் தொழிலைச் செய்யும்.
திருவாதிரை:
ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதியான சிவபெருமானின் திருவடிவங்களில் இன்றியமையாதது நடராஜர் திருக்கோலம். இந்தப் பிரபஞ்சத்தின் இயங்கியலை நடனத் திருக்கோலத்தின் வழியே வெளிப்படுத்தும் அற்புதக் கோலம் நடராஜப் பெருமானுடையது. ஆதிரைப் பெருநாளில் அபிஷேகம் கொள்ளும் அந்த நடராஜப் பெருமான் குறித்த அற்புதத் தகவல்கள் சிலவற்றை தியானிப்போம்.
நடராஜர்:
நடராஜப் பெருமானின் தோற்றம் உணர்த்தும் தத்துவங்கள் நடராஜரின் திருமுகம் இந்தப் பிரபஞ்சத்தின் எல்லையில்லா அழகை விளக்குவது. சிவந்த சடை, தவ ஒழுக்கத்தையும் சடையில் உள்ள கங்கை அவனின் பெருங்கருணையையும் குறிப்பது.
அவன் முடியில் சூடிய சந்திரன், சரணாகதி அடைந்தவர்கள் அடையும் உயர்நிலையை விளக்குகிறது. வளைந்த புருவம் அடியார்களின் விண்ணப்பங்களைக் கூர்ந்து நோக்கும் கருணையையும், குமிண் சிரிப்பு தன் அடியவர்களை அருளுடன் வரவேற்கும் பண்பையும் பிரதிபலிப்பது.
அவன் அக்னி வடிவானவன் என்பதைப் பவள மேனியையும், பால் வெண்நீறு மனித வாழ்க்கை இறுதியில் பஸ்பமாகவே மாறும் என்பதையும் குறிக்கின்றன.
நீலகண்டமும், நெற்றிக்கண்ணும் பரமனின் தனித்துவமான அடையாளம். உடுக்கை ஒலி இந்த உலகைப் படைத்தலை உணர்த்தும். பிறவிப் பிணி தீர்க்கும் அக்னிச் சுடர் அவன் இடக்கையில் உள்ளது. அமைந்த கை அபயகரம் என்பர். `நீவிர் அஞ்சற்க. யாம் உம்மைக் காக்கிறோம்’ எனத் தன் அடியவர்களுக்கு ஆறுதல் கூறித் தேற்றும் நிலை. காத்தல் தொழிலைக் காட்டும். வீசிய இடக்கை `கஜஹஸ்தம்.’ அதன் ஒரு விரல் தூக்கிய திருவடியைக் காட்டிக்கொண்டிருக்கும். எடுத்த திருவடி பிறவிக் கடலில் தத்தளிக்கும் உயிர்களை மீட்டு அருளும். ஊன்றிய திருவடி ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று விதமாக நம்முள் இருக்கும் மாயைகளின் உருவகமான முயலகனை அழித்து மறைத்தல் தொழிலைச் செய்யும்.
அல்லல்கள் அகற்றும் ஆறு அபிஷேகங்கள்:
சிவபெருமான் அபிஷேகப் பிரியர். பல ஆலயக் கருவறைகளில் சிவலிங்கத்தின் மீது எப்போதும் ஜலதாரை பொழியக் காணலாம். ஆனால், நடராஜ ரூபத்துக்கோ ஓர் ஆண்டில் ஆறுதினங்களே அபிஷேகங்கள். ஆறும் ஆறு அற்புத தினங்கள்.1. மாசி சதுர்த்தசி, 2. சித்திரை திருவோணம், 3. ஆனி உத்திரம், 4. ஆவணி சதுர்த்தசி, 5. புரட்டாசி சதுர்த்தசி, 6. மார்கழி திருவாதிரை இந்தத் தினங்களில் அபிஷேகம் கண்டு அந்த அண்ணாமலையானை வேண்டிக்கொள்ள அனைத்துத் துன்பங்களும் தீரும் என்பது ஐதிகம்.
5 சபைகள், ஐந்தொழில் தாண்டவங்கள்:
நடராஜர் திருநடனம் புரியும் சபைகள் ஐந்து. ரத்தின சபை – திருவாலங்காடு, கனகசபை – சிதம்பரம்,
ரஜதசபை – (வெள்ளி சபை) – மதுரை, தாமிரசபை – திருநெல்வேலி, சித்திரசபை – திருக்குற்றாலம் ஆகியன.
இறைவன் தன் ஆனந்தத் தாண்டவத்தின் மூலம் ஐந்தொழில்களைப் புரிகிறான் என்கின்றன சாஸ்திரங்கள். படைத்தல் - காளிகாதாண்டவம், காத்தல் - கவுரிதாண்டவம், அழித்தல் - சங்கார தாண்டவம், மறைத்தல் - திரிபுர தாண்டவம், அருளல் - ஊர்த்துவ தாண்டவம் ஆகிய ஐந்தொழில்களையும் ஐந்து நடனத்தின் மூலம் நிகழ்த்துவதாக ஐதிகம்.
ஆருத்ரா நாளில் அற்புத தரிசனம்
அனைத்து சிவன் கோயில்களிலும் இருக்கும் நடராஜர் திருமேனிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அந்த நாளில் முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவன் சந்நிதியில் எழுந்தருளி நடராஜப் பெருமானுக்கு ஆராதனைகள் செய்வதாக ஐதிகம். சிதம்பரத்தில் இந்தத் திருவிழா 10 நாள் உற்சவமாக நடைபெறும். இந்த நாளில் சிவதரிசனமும், நடராஜர் அபிஷேக தரிசனமும் காண்பது மிகவும் புண்ணியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. அபிஷேகத்தைக் கண்ணாரக் கண்டு தரிசிக்க வாழ்வில் அனைத்துப் பிணிகளும் தீரும். வறுமை அகலும். செல்வம் சேரும். பிறவிப் பிணி என்னும் பெரு நோயும் அகலும் என்று பாடுகின்றன திருமறைகள்.
திருவாதிரை களியும், திருப்பல்லாண்டும்:
திருவாதிரை என்றதும் நம் நினைவுக்கு வருவன திருவாதிரைக் களியும் திருப்பல்லாண்டும். சிவ வழிபாட்டில் பஞ்சபுராணங்கள் பாடுவது மரபு. பஞ்சபுராணங்களில் ஒன்று திருப்பல்லாண்டு. இந்தத் திருப்பல்லாண்டைப் பாடியவர் சேந்தனார் என்னும் நாயனார். இவர் சிதம்பரத்தில் வாழ்ந்த அடியார். விறகுவெட்டி வாழும் எளிய வாழ்க்கை கொண்டவர் என்றபோதும் தினமும் சிவனடியார்க்கு அமுது செய்விக்கும் வழக்கம் உடையவராய் இருந்தார். சிவபெருமான் இவரின் பக்தியை சோதிக்கும் பொருட்டு பெருமழை நாள் ஒன்றில் சிவனடியாராக மாறி இவரின் இல்லம் சென்று உணவு வேண்டினார். வீட்டில் விருந்து சமைக்கப் பொருள்கள் இல்லை.
இருந்தாலும் இருக்கும் பொருள்களைக் கொண்டு களி செய்து படைத்தார். அந்தக் களியமுதை ருசித்த இறைவன் மறுநாள் சேந்தனின் புகழை உலகுக்கு உணர்த்தத் திருவுளம் கொண்டார். அப்போது நாட்டை ஆண்ட மன்னன் கண்டராதித்த சோழன். தினமும் இரவு பூஜைக்குப் பின் நடராஜர் நடமிடும் சிலம்போசையைக் கேட்கும் பாக்கியம் பெற்றவர். இறைவன் சேந்தனாரின் இல்லத்துக்கு உண்ணச் சென்ற காரணத்தால் அன்று சிலம்பொலிக்கவில்லை. இதனால் வருத்தம் கொண்டிருந்தான் சோழன். அவன் வருத்தம் தீர்க்குமாறு அசரீரியாய் ஈசன் சேந்தன் இல்லம் சென்று களி உண்ட நிகழ்வைச் சொல்லி விளக்கினார்.
சிவனே வேண்டி உண்டார் என்றால் அந்தச் சேந்தன் எத்தனை பெரிய பாக்கியவானாக இருப்பார் என்று வியந்தான். மறுநாள் தில்லையில் தேரோட்டம். தேர் ஓடத்தொடங்கி ஓரிடத்தில் நின்றுவிட்டது. என்ன செய்தும் தேர் நகரவில்லை. அப்போது சிவபெருமான் அசரீரியாய், "சேந்தனே திருப்பல்லாண்டு பாடு, தேர் நகரும்" என்றார். அப்போது எளியவர்க்கு எளியவராய் ஒதுங்கி நின்ற சேந்தன் தேர் முன்னே வந்து நின்று பாடத்தொடங்கினார். 'மன்னுக தில்லை...' என்று தொடங்கும் இந்தப் பல்லாண்டில் மொத்தம் 13 பாடல்கள். சேந்தனார் பல்லாண்டு பாடினார். என்ன ஆச்சர்யம். தேர் நகர்ந்தது. சேந்தன் புகழ் உலகெங்கும் பரவியது.
இப்படிக் கிடைத்ததுதான் திருப்பல்லாண்டு. இந்தப் பாடல்களைப் பாட நமக்குக் கிடைக்கும் பலன்கள் பலகோடி. திருவாதிரைக்கு சேந்தனின் நினைவாகத்தான் களி செய்து சமர்ப்பிக்கிறோம். இன்று திருவாதிரை. இன்று தவறாமல் சிவாலயம் சென்று நடராஜப் பெருமானை வழிபட்டு நம்மைப் பீடித்திருக்கும் கவலைகளிலிருந்தும் பிணிகளிலிருந்தும் வறுமையிலிருந்தும் விடுபடுவோம். சிவனருள் நம்மை வழிநடத்தட்டும்.
தென் தில்லை மன்றினுள் ஆடி போற்றி! இன்று எனக்கு ஆரமுது ஆனாய் போற்றி!!