அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில், ஈரோடு

By News Room

கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றதும், முதலை விழுங்கிய சிறுவனை சுந்தரர் நாயனார் தேவார பதிகம் பாடி உயிருடன் மீண்டும் உயிர்ப்பித்து எழச் செய்த திருத்தலமாகவும் பிரசித்தி பெற்ற கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் விளங்குகிறது

 

இறைவர் திருப்பெயர்  : அவிநாசி லிங்கேஸ்வரர், அவிநாசிஈஸ்வரர்,

                               அவிநாசிநாதர், பெருங்கேடிலியப்பர்.

இறைவியார் திருப்பெயர் : கருணாம்பிகை, பெருங்கருணை நாயகி.

தல மரம்                   : பாதிரி (ஆதியில் மாமரம்)

தீர்த்தம்            : காசிக்கிணறு, நாகக்கன்னிகைத் தீர்த்தம்,                                                                               ஐராவதத்தீர்த்தம்.

தேவாரப் பாடல்கள்  : சுந்தரர் - எற்றான் மறக்கேன்.

 

சைவ சமயக் குரவர்களால் பாடல் பெற்ற, கொங்கு நாட்டுத் தேவாரத் தலங்களில் சிறப்பு பெற்றது தட்சிண வாரணாசி என்னும் அவிநாசி. கோயம்புத்தூர் மாநகரில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ளது அவிநாசி. இங்கு வீற்றிருக்கும் அவிநாசியப்பர் ஆலயம் பக்தர்களின் குறைகளைப் போக்கும் ஒப்பற்ற தலமாக திகழ்கிறது.

  

 

ஆலயத்தின் வெளியில் இருந்து பார்த்தால் கம்பீரமான இரட்டைக் கோபுரங்கள் அருகருகே உள்ளன. ஏழு கலசங்களுடன் கூடிய ஏழுநிலை ராஜகோபுரம் சுவாமி சன்னிதிக்கு எதிரிலும், அதை ஒட்டி தென்புறமாக ஐந்து நிலை ராஜகோபுரம் அம்பாள் சன்னிதிக்கு எதிரிலும் அமைந்திருப்பது நெடுஞ்சாலையில் பயணிக்கும் போதே கண்கொள்ளாக் காட்சியாக தென்படுகிறது.

 

ராஜகோபுரத்துக்கு முன்பு உள்ள பெரிய விளக்குத் தூணில், சுவாமியைப் பார்த்தபடி நந்தி சிலை ஒன்று உள்ளது. அதன் அருகே வாயைப் பிளந்தபடி ஒரு முதலையும், அதன் வாயில் இருந்து ஒரு சிறுவன் வெளியே வரும் காட்சியும் அமைந்துள்ளது அனைவரையும் கவருவதாக விளங்குகிறது. சிவனுக்கு எதிரே நந்தி, சரி! அது என்ன முதலை? அதற்கு புராண வரலாற்று நிகழ்வு ஒன்று சான்றுகளுடன் சொல்லப்படுகிறது.

 

மீண்ட பாலகன் :

 

சுந்தர மூர்த்தி நாயனார் சிவத்தலங்களைத் தரிசித்துக் கொண்டு ஒவ்வொரு தலமாக சென்று கொண்டிருந்தார். அப்போது குறிப்பிட்ட இந்த தலத்தின் வழியாகவும் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த ஊரின் தெருவொன்றில், ஒரு வீட்டில் சிறுவனுக்கு முப்புரிநூல் (உபநயனம்) அணிவிக்கும் மங்கல விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது.

 

இன்னொரு வீட்டில் இறப்பு நிகழ்ந்ததற்கான அழுகை ஓலம் கேட்டுக் கொண்டிருந்தது. சுந்தரர் அத்தெருவில் இருந்தோரிடம் அதற்கான காரணத்தைக் கேட்டறிந்தார். அதற்கு அங்கிருந்தவர்கள், ‘பூணூல் அணிவிக்கும் எதிர்வீட்டுச் சிறுவனின் வயதினை ஒத்த குழந்தையை, முதலை ஒன்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பு விழுங்கி விட்டது.

 

அக்குழந்தை இருந்திருந்தால் அதற்கும் இதுபோல பூணூல் அணிவிக்கும் விழா நடைபெற்றிருக்குமே என்று எண்ணி பிள்ளையை இழந்த சோகத்தை பெற்றோர் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்’ என்று தெரிவித்தனர். அந்தசமயம் சுந்தரர் அங்கு வருகை தந்ததை அறிந்து, இறந்த குழந்தையின் பெற்றோர் தங்கள் கண்ணீரைத் துடைத்து சோகத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல், சுந்தரரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி அவரை வரவேற்றனர்.

 

உண்மையை உள்ளத்தால் உணர்ந்து கொண்ட சுந்தரர், அந்தத் தாய் – தந்தையரின் துன்பத்தைத் துடைக்கத் திருவுள்ளம் கொண்டார். குழந்தையை பறிகொடுத்தவர்களிடம், ‘இறைவன் கருணை மிக்கவன். அவன் பேரருளால் எல்லா அற்புதங்களும் நடக்கும். கவலையை விடுங்கள்’ என்று கனிவுடன் கூறி, முன்பு சிறுவனை, முதலை விழுங்கிய குளக்கரைக்கு அழைத்துச் சென்றார்.

 

‘கரைக்கால் முதலையைப் பிள்ளைதரச் சொல்லு காலனையே’ என்று சிவனிடம் உருகி வேண்டினார். பத்து பதிகங்களைப் பக்திப் பரவசத்துடன் அவர் பாடி முடித்ததும், அங்கு ஓர் அதிசயம் நிகழ்ந்தது. சிவனருளால் வறண்டிருந்த குளத்தில் நீர் நிரம்பியது. நீருக்குள்ளிருந்து முதலை வெளிப்பட்டது. முதலை வாயைத் திறக்க அதனுள்ளிருந்து மூன்றாண்டுகட்கு முன்பு விழுங்கிய சிறுவன், இளைய வயது கொண்ட வளர்ச்சியுடன் வெளிப்பட்டான்.

 

பிள்ளையின் பெற்றோரும், மற்றோரும் அளவிலா ஆனந்தம் கொண்டனர். அவர்கள் இறைவனின் கருணையையும், சுந்தரரின் பக்தியையும் எண்ணி மெய்சிலிர்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்து, கை தொழுதனர். பின்னர், அச்சிறுவனை அவனது பெற்றோர் வீட்டுக்கு அழைத்துச் சென்று உபயநயனம் செய்து வைத்தனர்.

 

அவிநாசியப்பர் :

தினம் ஒரு இடம்:அவிநாசிலிங்கேஸ்வரர் ஆலயம் (Avinashi Temple)

 

கொங்கு சோழர்களும், பிற்காலப் பாண்டியர்களும் கட்டிய மண்டபங்களைக் கடந்து சன்னிதிக்குச் சென்றால் அற்புதம் நிகழ்த்திய இறைவன் சுயம்பு லிங்கமாக அருளை அள்ளி வழங்குகிறார். அவர், அவநாசியப்பர் என்றும், பெருங்கேடிலியப்பர் என்றும் போற்றப்படுகிறார். விநாசம் என்றால் அழிவு, அவிநாசி என்றால் அழிவில்லாதவர் என்று பொருள்.

 

அவரது பெயராலேயே ஊரும், ஊரின் பெயராலேயே இறைவனும் வழங்கப்படுவது அற்புதம். உள்பிரகாரத்தை வலம் வரும்போது, அறுபத்து மூன்று நாயன்மார்களும் தெற்குச் சுவரோரம் நிற்கின்றனர்.

 

தட்சிணாமூர்த்தி சுவாமி, விநாயகர், ஐம்பூதங்களின் வடிவாக ஐந்து சிவலிங்கங்கள், முருகப்பெருமான், மகாலட்சுமி ஆகிய தெய்வங்களை வணங்கி வரும் போது, வடதிசை நோக்கி துர்க்கை அம்மனும் சண்டிகேசுவரரும், ஈசானிய மூலையில் நவக்கிரங்களும் வேத ஆகம முறைப்படி அமைந்த சிவாலயத்தை அடையாளப்படுத்துகின்றன.

 

கருணாம்பிகை :

தினம் ஒரு இடம்:அவிநாசிலிங்கேஸ்வரர் ஆலயம் (Avinashi Temple)

 

அம்பாள் சன்னிதி, சுவாமி சன்னிதிக்கு வலது புறம் தனிக்கோவிலாக உள்ளது. அங்கே செல்லும் போதே இடையில் அருணகிரியாரால் பாடல் பெற்று முருகப்பெருமான் அருளாசி வழங்கிக் கொண்டிருக்கிறார். அப்பனுக்கும், அம்மைக்கும் இடையே செல்லப் பிள்ளையாக ‘சோமாஸ் கந்தராக’ காட்சிதருவது மிகவும் சிறப்பு. அம்பாள், சுவாமிக்கு வலது புறம் தனிக் கோவிலில் கிழக்கு திசை நோக்கி கருணையே வடிவாக காட்சி தருகிறாள்.

 

ஆம்! அம்பிகையின் பெயரும் கருணாம்பிகை தான். எந்தக் கோவிலில் இறைவி, இறைவனுக்கு வலதுபுறம் இருக்கிறாளோ அது மங்களச் சிறப்பு உடையதாக கருதப்படுகிறது. ஆம்! இங்கும் பார்வதி தேவி, பாதிரி மரத்தின் கீழ் தவம் செய்து, இறைவனின் வலதுபுறப் பேற்றினைப் பெற்றாள் என்று புராணம் புகழ்கிறது.

 

இத்திருக்கோவிலின் வெளிச் சுற்றில் தலவிருட்சமாக ஒரு பாதிரி மரம் இருக்கிறது. சித்திரை மாதம் பிரம்மோற்சவம் நடக்கும் காலத்தில் மட்டுமே பூத்துக் குலுங்கும் பெருமை பெற்றது. அவிநாசி என்னும் பெயருடைய இத்திருத்தலத்திற்கு இன்னொரு இலக்கியப் பெயருமுண்டு.

 

அது ‘திருப்புக் கொளியூர்’ என்பதாகும். சிவபிரானின் அக்கினி தாண்டவத்தின் வெம்மை தாங்காமல், தேவர்கள் இத்தலத்தில் புகுந்து ஒளிந்து கொண்டதால் அந்தப் பெயர் வந்தது (புக்கு – ஒளி – ஊர்).

 

தீர்த்தங்கள் :

தினம் ஒரு இடம்:அவிநாசிலிங்கேஸ்வரர் ஆலயம்  

 

கோவிலில் உள்ள சதுரக் கிணற்று நீரை, சுவாமி அபிஷேகத்துக்குப் பயன்படுத்துகிறார்கள். கங்கைக்குச் சமமான புனிதநீர் திருவிழாக் காலங்களில் கலசங்களில் நிரப்பப்பட்டு, பிற ஊர்களுக்கு கொண்டு சென்று வழிபடப்படுகிறது. அருகே இருக்கும் தெப்பக்குளம் கயிலை தீர்த்தம் என்றும், சிவ தீர்த்தம் என்றும், நாக கன்னி தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது.

 

ஆனால் சுந்தரர், முதலையுண்ட மதலையை மீட்ட திருக்குளமும் தலபுராணத்தில் கூறப்படும் சங்க தீர்த்தமும் இன்று காணப்படவில்லை. ராஜகோபுர வாயிலில் வடதிசை நோக்கி இருக்கும் செல்வ கணபதியும், காசிக்கு நிகராக இங்கே இருக்கும் கால பைரவரும், வசிஷ்டருக்கு சனிதோஷம் நீக்கிய அனுக்கிரக சனிபகவானும் இங்கே சிறப்பானவர்களாக வணங்கப்படுகிறார்கள்.

 

எற்றான் மறக்கேன் எழுமைக்கும்

  எம்பெரு மானையே 

உற்றாய் என்றுன்னையே உள்குகின்

  றேன்உணர்ந் துள்ளத்தால் 

புற்றா டரவா புக்கொளி

  யூரவி நாசியே 

பற்றாக வாழ்வேன் பசுபதி

  யேபர மேட்டியே.  1  வழிபோவார் தம்மோடும் வந்துடன்

  கூடிய மாணிநீ 

ஒழிவ தழகோ சொல்லாய்

  அருளோங்கு சடையானே 

பொழிலாருஞ் சோலைப் புக்கொளி

  யூரிற் குளத்திடை 

இழியாக் குளித்த மாணிஎன்

  னைக்கிறி செய்ததே.  2  எங்கேனும் போகினும் எம்பெரு

  மானை நினைந்தக்கால் 

கொங்கே புகினுங் கூறைகொண்

  டாறலைப் பார்இலை 

பொங்கா டரவா புக்கொளி

  யூரவி நாசியே 

எங்கோ னேஉனை வேண்டிக்கொள்

  வேன்பிற வாமையே.  3  உரைப்பார் உரைஉகந் துள்கவல்

  லார்தங்கள் உச்சியாய் 

அரைக்கா டரவா ஆதியும்

  அந்தமும் ஆயினாய் 

புரைக்காடு சோலைப் புக்கொளி

  யூரவி நாசியே 

கரைக்கால் முதலையைப் பிள்ளை

  தரச்சொல்லு காலனையே.  4  அரங்காவ தெல்லா மாயிடு

  காடது அன்றியும் 

சரங்கோலை வாங்கி வரிசிலை

  நாணியிற் சந்தித்துப் 

புரங்கோட எய்தாய் புக்கொளி

  யூரவி நாசியே 

குரங்காடு சோலைக் கோயில்கொண்

  டகுழைக் காதனே.  5  நாத்தா னும்உனைப் பாடல்அன்

  றிநவி லாதெனாச் 

சோத்தென்று தேவர் தொழநின்ற

  சுந்தரச் சோதியாய் 

பூத்தாழ் சடையாய் புக்கொளி

  யூரவி நாசியே 

கூத்தா உனக்குநான் ஆட்பட்ட

  குற்றமுங் குற்றமே.  6  மந்தி கடுவனுக் குண்பழம்

  நாடி மலைப்புறம் 

சந்திகள் தோறுஞ்சலபுட்பம்

  இட்டு வழிபடப் 

புந்தி உறைவாய் புக்கொளி

  யூரவி நாசியே 

நந்தி உனைவேண்டிக் கொள்வேன்

  நரகம் புகாமையே.  7  பேணா தொழிந்தேன் உன்னைஅல்

  லாற்பிற தேவரைக் 

காணா தொழிந்தேன் காட்டுதி

  யேலின்னங் காண்பன்நான் 

பூணாண் அரவா புக்கொளி

  யூரவி நாசியே 

காணாத கண்கள் காட்டவல்

  லகறைக் கண்டனே.  8  நள்ளாறு தெள்ளா றரத்துறை

  வாய்எங்கள் நம்பனே 

வெள்ளாடை வேண்டாய் வேங்கையின்

  தோலை விரும்பினாய் 

புள்ளேறு சோலைப் புக்கொளி

  யூரிற் குளத்திடை 

உள்ளாடப் புக்க மாணியென்

  னைக்கிறி செய்ததே.  9  நீரேற ஏறுநிமிர் புன்சடை

  நின்மல மூர்த்தியைப் 

போரேற தேறியைப் புக்கொளி

  யூரவி நாசியைக் 

காரேறு கண்டனைத் தொண்டன்

  ஆரூரன் கருதிய 

சீரேறு பாடல்கள் செப்பவல்

  லார்க்கில்லை துன்பமே.

 

சுவாமி : அவிநாசிநாதர்; அம்பாள் : கருணாம்பிகை.  10 

 

கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்தில் செல்லலாம்.

கோவைக்கு கிழக்காக 42 கி.மீ தொலைவிலும்,திருப்பூரிலிருந்து வடமேற்காக 12 கி.மீ தூரத்திலும்,

மற்றொரு தேவாரத் தலமான திருமுருகன் பூண்டிக்கு 5 கி. மீ அருகாமையிலும்,கோவை - ஈரோடு நெடுஞ்சாலையில் இத்தலம் உள்ளது.

.
மேலும்