திருச்செந்தூரின் மகிமையை முனிவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
வசிஷ்டர்: இந்த பூமியில் போக மோட்சங்களைத் தரும் பல தலங்கள் இருந்தாலும் அவை யாவும் சந்தேகமின்றி திருச்செந்தூர் தலத்திற்கு அடுத்தவையே.
வாமதேவர்: பிரம்மஹத்தி செய்தவனும், வேதங்களை பழித்தவனும்கூட திருச்செந்தூரில் ஒருநாள் வசித்தால் பரிசுத்தவானாகிறான்.
ஜாபாலி: இத்தல தீர்த்த மகிமைக்கு ஈடானது எதுவுமில்லை.
விசுவாமித்திரர்: நூறு அஸ்வமேத யாகங்களின் பலனை திருச்செந்தூர் வாசத்தால் கோடி பங்கு அதிகமாகப் பெறலாம்.
காச்யபர்: ஒருவன் பிரயாகையில் வாழ்நாள் முழுவதும் நீராடும் பலனை கார்த்திகை நட்சத்திரத்தன்று ஒருமுறை இந்த தலத்தில் நீராடினால் அடைந்துவிடுகிறான்.
மார்க்கண்டேயர்: ரிஷிகள் காசியில் ஒரு வருடம் தவம்செய்து பெறும் புண்ணியத்தை திருச்செந்தூரில் ஒரே நாளில் அடைந்து விடலாம்.
மௌத்கல்யர்: பல நாட்கள் செய்துவரும் தவத்தை திருச்செந்தூர் தரிசனம் ஒன்றினாலேயே அடைந்துவிடலாம்.
குரு மகாதசை அல்லது குரு புக்தி குரூரமாக இருந்தால் அவர்கள் திருச்செந்தூர் வந்து ஆறுமுகனை தரிசித்து, ஸ்ரீஆதிசங்கரரின் சுப்ரமண்ய புஜங்கத்தையோ, குமரகுருபரரின் கந்தர் கலிவெண்பாவையோ ஒருமுறை பாராயணம் செய்தால் அனைத்து துன்பங்களும் நீங்கிவிடும். பூத, பிரேத, பைசாச உபாதைகளும் நீங்கி நலம்பெறலாம்.
இவ்வாறு முனிவர்களாலும், ஆச்சார்யர்களாலும் போற்றப்பட்ட திருச்செந்தூர் தலத்தை வாழ்வில் ஒருமுறையாவது தரிசித்தால் முருகன் அருளையும், குரு பகவானின் அருளையும் பெற்று சகல துக்கங்களிலிருந்தும் விடுபடலாம்.