வேதத்தை முழுமையாகக் கற்க எட்டு வருடம்..

By News Room

ஒரு சிறுவன் வேதம் கற்க ஆரம்பித்து விட்டால், அவனது தேகப் பொலிவும், முக தீட்சண்யமும் கூடும். ஒரு மென்மை குடிகொள்ள ஆரம்பித்து விடும்.’

- படித்து நான் தெரிந்து கொண்ட இந்த விஷயத்தைப் பார்த்துத் தெரிந்து கொண்டது அருணாசலத்திடம்.

படத்தில் என்னுடன் இருக்கிற சிறுவன் அருணாசலம். 

‘உன்னோட ஒரு போட்டோ எடுத்துக்கட்டுமா அருணாசலம்?’ என்று கேட்டு அவரது அனுமதி பெற்று எடுக்கப்பட்ட படங்கள் இங்கே உள்ளவை.

படம் எடுக்கப்பட்ட இடம்: பெங்களூரில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் வேத பாடசாலை. 

இதன் முதல்வராக இருப்பவர் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய சுந்தரமூர்த்தி சிவம் அண்ணா. அவிநாசிக்காரர். தொண்டுள்ளம் மட்டுமே கொண்டவர். புன்னகையை மட்டுமே மாணவர்களிடம் வெளிப்படுத்தக் கூடியவர்.

சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கே வேதம் பயில்கிறார்கள். இங்கு உள்ளே நுழைந்து விட்டால், வேத கோஷமும் அமைதியான சூழலும் வருகின்றவர்களைக் கட்டிப் போட்டு விடுகின்றன. இனம் புரியாத ஒரு ஆனந்தம் ஆட்கொள்கிறது.

அருணாசலம் யார் என்று சொல்லவில்லையே..?

சென்னை தம்புச் செட்டித் தெரு அருள்மிகு காளிகாம்பாள் ஆலயத்தில் பிரதான சிவாச்சார்யராக இருந்த அமரர் சிவஸ்ரீ சாம்பமூர்த்தி சிவாச்சார்யர் அவர்களின் பேரனும், அதே ஆலயத்தில் தற்போது பிரதான ஆச்சார்யராக இருந்து வரும் ஷண்முக சிவாச்சார்யர் அவர்களின் மகனும் ஆவார்.

அருணாசலம் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது அவரை உயர்கல்விக்கு அனுப்ப வேண்டும் என்று குடும்பத்தில் சிலர் ஆசைப்பட்டார்கள். இருக்காதா, பின்னே! ஆனால், அருணாசலத்தின் பெரியப்பா சதாண்ணா, ‘இவனை பாடசாலைக்கு அனுப்பு’ என்றாராம்.

அவரது வாக்கை வேத வாக்காகக் கொண்டு அடுத்த கணமே அருணாசலத்தைப் பாடசாலைக்கு அனுப்புவது என்று குடும்பத்தினர் தீர்மானித்தார்கள்.

என்றாலும், சம்பந்தப்பட்ட சிறுவன் மனதிலும் ஒரு கனவு இருக்கும் அல்லவா? எனவே, அருணாசலத்திடம் இதுபற்றிக் கேட்டார்கள். ‘குடும்பத்தில் என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ, அதற்குக் கட்டுப்படுகிறேன்’ என்று இந்த பால்ய வயதில் சொன்னாராம். அதுதான் அன்னை காளிகாம்பாள் இந்த சிறுவனுக்குக் கொடுத்திருக்கிற நற்குணம்!

வேதத்துக்கு ஒரு மாணவனைக் கொடுப்பதற்கு உயர்ந்த மனம் வேண்டும். அது எல்லோருக்கும் வாய்க்காது.

வேதத்தைக் காக்க ஒரு சிறுவனை பாடசாலைக்கு அனுப்புவதும், தேசத்தைக் காக்க ஒரு இளைஞனை எல்லைக்கு அனுப்புவதும் என்னைப் பொறுத்தவரை ஒன்றே!

வேதமும் முக்கியம்; தேசமும் முக்கியம். அதற்கான அர்ப்பணிப்பு அதை விட முக்கியம்.

வேதத்தை முழுமையாகக் கற்க எட்டு வருடம் இங்கே தங்கிப் படிக்க வேண்டும்.

அருணாசலம் விரைவில் பெரும் பண்டிதராக - வேதத்தை வாழ்விப்பவராக வர - எல்லாம்வல்ல மகா பெரியவாளை பிரார்த்திக்கிறேன்.

மகா பெரியவா சரணம்.

அன்புடன், பி. சுவாமிநாதன்

மீள் பதிவு  பதிவிட்ட நாள் 28.9.2018

.
மேலும்