நம்முடைய இதிகாசங்களான ராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் எண்ணற்ற அதிசயப் பொருட்களை பயன்படுத்தியிருப்பதை நாம் படித்திருப்போம். அந்த அதிசயப் பொருட்களெல்லாம் உண்மையிலேயே இருந்தனவா? அல்லது நம்முடைய முன்னோர்களின் கற்பனையா? என்பது சரியாகப் புலப்படவில்லை என்றாலும் கேட்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும். சில அபூர்வமான பொருட்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
நாக மாணிக்கம்:
இந்த நாக மாணிக்கத்திற்கு புராணக் கதை இல்லையென்றாலும் வாய்வழிக் கதைகள் உள்ளன. ஒரு நாக மாணிக்கம் உருவாக வேண்டும் என்றால், ஒரு நாகப்பாம்பு 1000 வருடங்கள் எந்த உயிரையும் கொல்லாமல் தவ வாழ்க்கையை வாழ வேண்டும். அப்படியிருக்கும்போது அதனுடைய விஷம் சேர்ந்து இறுகிப்போய்தான் நாக மாணிக்கம் உருவாகும். இப்படிப்பட்ட நாக மாணிக்கத்தை வெளிச்சத்திற்கும், வேட்டையாடும் போதுமே பாம்பு வெளியே கக்கும். அப்போது பாம்பை ஏமாற்றி அந்தக் கல்லை எடுக்கும் நபருக்கு உலகத்தில் உள்ள அத்தனை செல்வமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எப்பேர்ப்பட்ட விஷத்தையும் முறிக்கும் சக்தி நாக மாணிகத்திற்கு உண்டு என்று சொல்லப்படுகிறது.
அக்ஷய துனிர்:
இந்திரப் பிரஸ்தத்தை உருவாக்குவதற்காக அர்ஜுனனுக்கு வரமாகக் கொடுக்கப்பட்டதுதான் அக்ஷய துனிர். இது எடுக்க எடுக்க குறையாமல் அம்புகள் வந்துகொண்டேயிருக்கும் அம்பு கலசமாகும். இந்த அக்ஷய துனிர் மூலமாக ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான அம்புகளை அர்ஜுனனால் செலுத்த முடியும். இந்த அக்ஷய துனிரை அக்னி தேவன்தான் அர்ஜுனனுக்கு கொடுத்தார். இதை வைத்து இமைக்கும் பொழுதில் காண்டவ வனத்தையே தீக்கிரையாக்கினான் அர்ஜுனன். ஆனால். காண்டவ வனத்தை அழிக்கும்போது அதிலிருந்த பாம்பு இனமே அழிந்துபோனது. இதனால் அர்ஜுனனுக்கு நாக சாபம் கிடைத்தது. அத்தகைய அதிசயமிக்க அள்ள அள்ளக் குறையாத அம்புகளை கொடுக்கக்கூடியதுதான் இந்த அக்ஷய துனிர்.
சஞ்சீவினி மூலிகை:
ராமாயணக் கதைப்படி சஞ்சீவினி, ‘காந்தமந்தனா’ என்று அழைக்கப்படும் மாயாஜால மலையின் உச்சியிலே கிடைக்கக்கூடிய ஒரு அபூர்வ மூலிகையாகும். இது யார் கண்களுக்கும் அவ்வளவு சீக்கிரம் புலப்படாது. இந்த மூலிகையை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். இந்திரஜித் தொடுத்த பாணத்தால் லட்சுமணன் மரணத்தையே தொடுமளவுக்கு சென்று விடுவான். அவனைக் காப்பாற்ற வேண்டும் என்றால், சஞ்சீவினி வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால், அவர்களால் காந்தமந்தனாவை சென்றைடைய 18 வருடமாவது ஆகும். அப்போது அனுமன் விஸ்வரூபம் எடுத்து இமைக்கும் பொழுதில் காந்தமந்தனா மலையை தூக்கி கொண்டு வந்து விடுகிறார். பிறகு அதில் இருக்கும் சஞ்சீவினி மூலிகையை பயன்படுத்தி லட்சுமணனை காப்பாற்றுகிறார்கள். இந்த சஞ்சீவினி மூலிகைக்கு இறந்தவர்களைக்கூட உயிர்த்தெழச் செய்யும் சக்தி உள்ளதாக நம்பப்படுகிறது.
அக்ஷய பாத்திரம்:
பாண்டவர்கள் 14 ஆண்டுகள் வனவாசம் சென்றபோது அவர்களுக்கு தினமும் உணவு கொடுத்தது இந்த அக்ஷய பாத்திரம்தான். ஒரு சமயம் துர்வாச முனிவர் துரியோதனனை பார்க்க செல்கிறார். துர்வாச முனிவரை துரியோதனன் நன்றாக உபசரிக்கின்றான். இதனால் மனம் குளிர்ந்த துர்வாச முனிவர், ‘உனக்கு என்ன வரம் வேண்டும்’ என்று துரியோதனனிடம் கேட்க, ‘தங்களின் அடுத்த வேளை உணவை பாண்டவர்களின் குடிலிலே சென்று சாப்பிட வேண்டும்’ என்று கேட்கிறான். துர்வாச முனிவரும் சீடர்களுடன் பாண்டவர் குடில் நோக்கிச் செல்கிறார். இவர் வரும் வேளையில்தான் சரியாக அக்ஷய பாத்திரத்தை கழுவி கவிழ்த்து வைக்கிறார்கள். இந்த சமயம் வந்து உணவு வேண்டும் என்று துர்வாச முனிவர் நிற்க, பாண்டவர்கள் அதிர்ந்து போகிறார்கள். என்ன செய்வது என்று கிருஷ்ணரிடம் கேட்க, அக்ஷய பாத்திரத்தில் இருந்த ஒரு பருக்கையை எடுத்து கிருஷ்ணர் உண்ண, உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளின் பசியும் அடங்கியது. துர்வாச முனிவரும் பசி தீர்ந்த உணர்வோடு அங்கிருந்து செல்கிறார். இதுதான் அக்ஷய பாத்திரத்தின் கதை.
காமதேனு:
பாற்கடலை கடையும்போது அதிலிருந்து கிடைத்ததுதான் காமதேனு. இறக்கைகள் உள்ள பெண் தலையை கொண்ட பசுவைத்தான் எல்லா பசுக்களின் தாய் என்று இந்து மதம் சொல்கிறது. காமதேனுவின் ஒவ்வொரு அங்கத்திலும் ஒவ்வொரு கடவுள் வாசம் செய்வதாக பழங்கால நம்பிக்கை இருக்கிறது. இந்த காமதேனுவை ஒருசிலர்தான் தன்வசம் வைத்திருந்தார்கள். அதில் ஒருவர்தான் ஜமதக்னி முனிவர். இந்த காமதேனு பசு இப்போதும் பாதாளத்தில் வசிப்பதாகப் புராணங்கள் சொல்கின்றன.
கல்ப விருக்ஷ மரம்: இதுவும் காமதேனு போல கேட்ட வரத்தை தரக்கூடிய மரமாகும். இது சாதாரண மரம் போல இருக்காது . இதன் வேர்கள் தங்க வேர்களாக இருக்குமாம். மரத்துடைய தண்டுகளும், இலைகளும் வெள்ளியாக மாறியிருக்கும். பூக்கள் முத்து பூக்களாக பூக்கும். பழங்கள் வைரம், வைடூரியமாக பழுக்குமாம். நம்ம ஊரில் இதை கற்பக விருக்ஷம் என்றும் கூறுவார்கள். இந்த கற்பக மரம் பூமியில்தான் ரகசியமாக இருந்ததாம். ஆனால். இந்த மரத்தைப் பற்றி தெரிந்தவர்கள் இதை தவறாகப் பயன்படுத்தியதால், இந்திரன் இதை பூமியிலிருந்து பிடுங்கிச் சென்று சொர்க்கத்தில் வைத்து விடுகிறார்.