குறிஞ்சி நில வேந்தன் கடவுளான கதை

By nandha

முருகனும் கந்தசஷ்டியும் தென்னிந்திய நிலப்பரப்புக்கு அப்பால் போற்றாத சூழ்நிலை மாறி இப்போது வட இந்தியாவிலும் முருக வழிபாடு, வேல்பூஜை என அமர்க்களமாகிவிட்டது. கந்த சஷ்டி கவசத்தை கறுப்பர் கூட்டம் விமர்சித்ததில் தொடங்கியது சர்ச்சை. இதற்காக கறுப்பர் கூட்டத்தின் மீது குண்டாஸும் கூட பாய்ந்துவிட்டது. இன்னொரு பக்கம் இதுநாள் வரை ராமரை முன்னிலைப்படுத்திய பாஜக இப்போது தமிழகத்தில் முருகனை முன்வைத்து தேர்தல் வியூகமாக்கி செயல்பட்டு வருகிறது. அப்போதாவது வாக்குகள் தேறும் என்கிற நம்பிக்கைதான்.

 

முருகன் என்றால் அழகு முருகன் என்றால் தமிழ். குறிஞ்சி நிலக்கடவுள் குமரனின் பெயரில் மட்டும் அழகல்ல அவரது ஒவ்வொரு செயலும் அழகுதான். அகத்தியருக்கே தமிழ் சொல்லிக்கொடுத்தவராம் இந்த அப்பனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த சுப்பன். முருகனின் பெருமையை பல நூற்றாண்டுகளாக உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் போற்றி வணங்கி வருகின்றனர்.

 

குறிஞ்சி நிலக்கடவுள் முருகன் அழகானவர் மட்டுமல்ல இளமையானவர் தெய்வீக மணம் கொண்டவர். அழகு காண்பவரை மகிழ்ச்சிப்படுத்தும், இளமை ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும், மணம் என்பது நம்மை மட்டுமல்ல நமது சுற்றுப்புறத்தையும் சுத்தப்படும். முருகப்பெருமான் இந்த மூன்று குணங்களையும் கொண்டவர். அதனால்தான் தமிழ்கடவுள் முருகப்பெருமான் உலகம் முழுவதும் போற்றி வணங்கப்படும் கடவுளாக இருக்கிறார். கந்தனாகவும், கார்த்திக்கேயனாகவும், சுப்ரமணியராகவும் முருகன் குன்று இருக்கும் இடமெங்கும் குமரனாக போற்றப்படுகிறார். முருகன் என்றால் தமிழ். இவர் தமிழர்களின் கடவுள் மட்டுமல்ல இரண்டாம் தமிழ் சங்கத்தின் தலைவராகவும் போற்றப்படுகிறார். அகத்தியருக்கே தமிழ் கற்றுக்கொடுத்தவராம் இந்த அப்பனுக்கு பாடம் சொல்லிக்கொடுத்த சுப்பன். முருகனும் தமிழும் ஒன்றுதான் என்பதை இவரை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.

 

வேலும் மயிலுமாக காட்சி தரும் முருகன் வெற்றியின் குறியீடு. ஏழைகளின் தலைவன், மலைவாழ் மக்களின் வேந்தன். தமிழர்களின் முப்பாட்டனாகவும் கொண்டாடப்படுகிறார். அவரை குறிப்பிட்ட மதத்தின் கடவுளாகவும், குறிப்பிட்ட ஜாதிக்குள்ளும் அடைத்து வழிபட வேண்டிய அவசியமில்லை. தமிழர்கள் அனைவருமே போற்றி வணங்கலாம்.

 

அக்னியில் உதித்த ஆறுமுகன்:

முருகனின் அவதார நோக்கமே சூரபத்மன் அவரது சகோதரர்களை அழிப்பதுதான். அதற்காகவே சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து உருவான அக்னியில் உதித்தவர். ஆறு அக்னி குஞ்சுகளை சரவணப்பொய்கையில் உள்ள தாமரை மலர்களில் கங்கை அன்னை கொண்டு போய் சேர்க்க அவை ஆறு குழந்தைகளாக உருமாறின. கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டான் கார்த்திக்கேயன். ஆறுமுகமாக இருந்த கந்தன் அன்னை பார்வதியின் கரம் பட்டு ஒருமுகமாக அழகான முருகனாக உருமாறி சக்தி மைந்தனாக மாறினார்.

 

விசாகம் நட்சத்திர நாளில் உதித்த இந்த விசாகன் தேவர்களின் சேனாதிபதியாக மாறி அன்னை சக்தியின் கையில் வேல் வாங்கி சிங்கார வேலனாக படையெடுத்துச்சென்றார். வேல் வேல் வெற்றி வேல் என்ற முழக்கம் எங்கும் எதிரொலிக்க திருச்செந்தூரில் கடலாக மாமரமாக உருமாறி மாய வித்தை காட்டிய அசுரர்களை வதம் செய்து வேலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னுடன் வைத்துக்கொண்டார். இதன்மூலம் பகைவனுக்கும் அருளுபவர் முருகன் என்பதை உணரவைத்தவர்.

 

அசுரர்களை அழித்து தேவர்களை காத்த முருகனுக்கு தேவேந்திரன் தனது மகள் தேவயானை திருமணம் முடித்துக்கொடுத்து மருமகனாக ஆக்கிக்கொண்டார். திருப்பரங்குன்றத்தில் சுப்ரமணியர் தேவயானை திருமணம் ஒரு பங்குனி உத்திரம் நாளில் நடந்து முடிந்தது.

 

அதே முருகன்தான் சூரனை சம்ஹாரம் செய்த கோபம் தனிவதற்காக திருத்தனி சென்று அங்கே குறவர் பெண்ணான வள்ளியை மணம் செய்து கொண்டார். வள்ளி தெய்வானையை மணந்த முருகன் இருதாரம் கொண்டவன் என்று அனைவராலும் பேசப்பட்டாலும் அதற்கும் ஒரு காரணம் உண்டு. இச்சா சக்தியாகிய வள்ளியும் கிரியா சக்தியாகிய தெய்வானையும் ஞானசக்தியாகிய முருகனை திருமணம் கொண்டிருக்கின்றனர்.

 

வள்ளி தேவயானை சமேத முருகனை வணங்கினால் முப்பெரும் சக்திகளும் நமக்குக் கிடைக்கும். தேவேந்திரன் மகளான தேவயானையும், மலைவாழ் பெண்ணான வள்ளியையும் திருமணம் செய்து கொண்ட முருகன் தான் ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவர் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

 

முருகன் பொதுவானவர்

சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை... சுப்ரமணியருக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை என்று முருகனின் அருளைச்சொல்லும் பழமொழியே இருக்கிறது. அறுபடை வீடுகளில் மட்டுமல்ல குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்தான். கடலாடும் திருச்செந்தூரில் மீனவர்களுக்கு மாப்பிள்ளைசாமியாக இருக்கிறார் சுப்ரமணியர்.

 

நாரதர் கொடுத்த ஞானப்பழத்தை தனக்குக் கொடுக்கவில்லையே என்று கோபித்துக்கொண்டு கயிலாயத்தில் இருந்து வந்து பழநி மலையில் குடியேறியவர். அதே முருகன்தான் பழமுதிர்சோலையில் நாவல் பழம் கேட்ட ஒளவை பாட்டிக்கு சுட்டப்பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டு தனது குறும்புத்தனத்தை வெளிப்படுத்தியவன்.

 

முருகனுக்கு அரோகரா

தமிழ்கடவுள் முருகனை எல்லோருக்கும் பிடிக்கும். முருகனை ஒரு மதத்திற்குள் ஒரு ஜாதிக்குள் அடைக்க வேண்டாம் உலகமெங்கும் வாழும் தமிழர்களும் கந்தனுக்கு அரோகரா... முருகனுக்கு அரோகரா சொல்லி வணங்கலாம். கந்த சஷ்டி கவசம் படித்த தீராத நோய்களும் தீரும் என்பதை கண்கூடாக பார்க்கலாம்.

.
மேலும்