இஞ்சிமேடு பெரியமலை அருள்மிகு திருமணிச்சேறை உடையார், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலூகா

By nandha

ஆயிரம் ஆண்டுகள் போனாலும்... அருளை அள்ளி வழங்கும் அற்புத சிவலிங்கம்!

 

அகிலமெங்கும் வியாபித்திருக்கும் சர்வேஸ்வரனின் அறுபத்துநான்கு திருவிளையாடல்களை ஆன்றோர் அனைவரும் அறிவர். காரணம் இந்தத் திருவிளையாடல்கள் அனைத்தும் எத்தனையோ காலத்துக்கு முன் இறையருட் பெருமக்களால் தெளிவாக எழுதப்பட்டவை. 

 

இஞ்சிமேடு பெரியமலை அருள்மிகு திருமணிச்சேறை உடையார் (உடையார் என்பதற்கு உடையவர், செல்வந்தர், சிவன் என்றெல்லாம் பொருள் உண்டு) நடத்திய திருவிளையாடலும் அப்படிப்பட்டதுதான். 

 

வெளியுலக மக்களால் அதிகம் அறியப்படாதவை இவை. இந்த ஐயன் குடிகொண்டிருக்கும் திருத்தலமான இஞ்சிமேடு பெரியமலை, திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி தாலூகாவில் அமைந்துள்ளது.

 

புராணச் சிறப்பும் வரலாற்றுச் சிறப்பும்

 

செழுமையாகவுள்ள இந்த இஞ்சிமேடு திருமணிச்சேறை உடையாருக்கு இங்கு ஆலயம் தோன்றி, சுமார் இரண்டாயிரத்தைந்நூறு ஆண்டு கள் ஆகி இருக்கலாம் என்கிறார்கள்.  

 

சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த அந்நியர்களினதொடர் படையெடுப்பால் பெரிதும் பாதிக்கப்பட்டவற்றுள் இந்த ஆலயமும் ஒன்று. அந்தத் தாக்குதலின் இறுதியில் மலை மீது கம்பீரமாகக் கோலோச்சிக் கொண்டிருந்த ஈசனின் ஆலயம் தரைமட்டமாக அடித்து நொறுக்கப்பட்டது.  

 

எனினும் ‘திருமணிச்சேறை உடையார்’ என்று பக்தியுடன் வணங்கப்பட்ட அங்கிருந்த சிவலிங்கத் திருமேனி மட்டும் ஆச்சரியத்துக்கு உரிய வகையில் எந்த வித பாதிப்புக்கும் உள்ளாகாமல் தப்பித்தது. 

 

அதன் பிறகு இந்த சிவலிங்கத் திருமேனி மட்டும் அங்கு ஒரு சில நூற்றாண்டுகள் தனித்து விடப்பட்டிருந்தது. கோயிலோ, கருவறையோ, பரிவார தேவதைகளோ, தீர்த்தமோ, விழாக்களோ இல்லாமல் மலை மேல் வெற்றுப் பிரதேசத்தில் ஆராதனை இல்லாமல் அநாதரவாக இருந்தார் திருமணிச்சேறை உடையார்!

 

மலைப் பகுதி என்பதால் ஆடு, மாடு மேய்க்க வரும் சிறுவர்கள் அதன் மேல் ஹாயாக அமர்ந்திருப்பார்களாம். சில நேரம் மேய்ச்சல் மாடுகள் குறிப்பிட்ட இலக்கைத் தாண்டாமல் இருப்பதற்கு, மாடுகளை இந்த சிவலிங்கத்தை ஒரு கல்லாகக் கருதி அதில் கட்டிவிட்டுச் சென்ற அவலமும் நடந்திருக்கிறது.

 

தாங்கள் அமர்ந்திருப்பது ஒரு சிவலிங்கத்தின் மீது என்பதே அவர்களுக்குத் தெரியாதாம். காரணம், அந்த அளவுக்கு கோயில் இருந்த பகுதியில் புதர்கள் மண்டி காடு போல் வளர்ந்திருந்தது.

 

‘பலராலும் வழிபடப்படும் இந்த ஆலயம் கிருத யுகத்தில் சீரழியும்... கலிகாலத்தில் மானிடர் ஒருவரின் முயற்சியால் இது சீர் செய்யப் படும்!’ என்று பெங்களூரில் ஒரு நாடி ஜோசியக் குறிப்பில் தகவல் சொல்லப்பட்டிருந்ததாம்.  

 

அதன்படி இஞ்சிமேடு பெரியமலை கிராமத்தைச் சேர்ந்த ராஜா ஸ்வாமிகள் என்பவரின் முயற்சியால் சிவலிங்கத் திருமேனிக்குத் தினமும் நெய் தீபம் ஏற்றப்பட்டது. வழிபாடுகள் மெள்ளத் துவங்கின. திருப்பணி வேலைகளும் துரிதமாக்கப்பட்டன.

 

மலைமேல் ஆலயத் திருப்பணி கிடுகிடுவென வளர ஆரம்பித்தது. திருமணிச்சேறை உடையார், திருமணிநாயகி ஆகிய பிரதான தெய்வங்களுடன் பரிவார தேவதைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டனர். 

 

வழிபாடே இல்லாமல் சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த திருமணிச்சேறை உடையார் ஆலயத்துக்குக் கடந்த 1999-ஆம் ஆண்டு கும்பாபிஷேகப் பெருவிழா நடைபெற்றது. 

 

இஞ்சிமேடு மற்றும் அதைச் சுற்றி யுள்ள ஐம்பத்தெட்டு கிராம மக்கள் இந்தக் கும்பா பிஷேகத்துக்குக் கைங்கரியம் செய்து, பக்திப் பெருக் கோடு கலந்து கொண்டனராம்.

 

மலை மீது சுமார் 200 அடி உயரத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் இந்த ஆலயத்தின் பெருமைகளைக் கொஞ்சம் பார்ப்போம்.

 

ஆதிகாலத்தில் இமயமலைக்கு நிகராகப் பேசப் பட்டதாம் இஞ்சிமேடு பெரியமலை. அகத்தியரின் பொற்பாதம் பட்ட புண்ணிய பூமி. மாமுனிவர்களும் புண்ணிய சீலர்களும் முன்னொரு காலத்தில் தவம் இயற்றிய அற்புத மலை.  

 

ஒரு முறை பிரம்மனுக்கும் திருமாலுக்கும் இடையே தங்களுக்குள் யார் பெரிய வர் என்ற போட்டி எழுந்தது. ‘என் அடி(பாதம்) மற் றும் முடியை யார் முதலில் கண்டு வந்து சொல்கி றார்களோ அவரே பெரியவர்!’ என்று சர்வேஸ்வரன் சொல்ல... அதை ஏற்றுக் கொண்டு பிரம்மாவும் திரு மாலும் புறப்பட்டனர்.  

 

சிவபெருமானின் அடியைக் காண, பாதாளத்தை ஊடுருவிப் புறப்பட்டார் திரு மால். ‘முடியைக் கண்டு போட்டியில் வெல்வேன்’ என்று மமதையுடன் புறப்பட்ட பிரம்மன் ஆகாய மார்க்கத்தில் பயணித்தார்.

 

இந்த இருவரும் நெடுந்தொலைவுக்குச் சென்றும் சர்வேஸ்வரனின் அடியும் காணவில்லை; முடியும் காணவில்லை. இரண்டு பேருமே தொடர்ந்து ஊடுருவிக் கொண்டிருந்தனர்.

 

பிரம்மனுக்குச் சோர்வு வந்தது. அதே நேரம், இந்தப் போட்டியில் தானே வெல்ல வேண்டும் என்று ஆசையும் வந்தது. எனவே, வழியில் எதிர்ப்பட்ட தாழம்பூவை (‘தாழம்பூ முனிவர்’ என்றும் சொல்வதுண்டு) தனக்கு பொய் சாட்சி சொல்ல வருமாறு அழைத்தார். முதலில் மறுத்த தாழம்பூ, பின்பு பிரம்மன் சொன்ன சில வார்த்தைகளில் மயங்கி இதற்குச் சம்மதித்தது.

 

சர்வேஸ்வரன், சாதாரணமானவரா என்ன? பொய்யாக பதில் சொன்ன பிரம்மனின் திட்டம் அறிந்து கோபம் கொண்டார். அதனால் பிரம்மனுக்கு பூலோகத்தில் கோயிலோ வழிபாடோ இருக்காது என்று சபித்தார். அவருடன் வந்து சாட்சி சொன்ன தாழம்பூ, இனிமேல் இறை வழிபாட்டுக்குப் பயன்படாது என்றும் சபித்தார்.

 

தாழம்பூ தனது தவறை உணர்ந்து சாப விமோசனம் கேட்டது. அப்போது, ‘கலி யுகத்தில் இஞ்சிமலைக் குன்றின் மேல் தாழையாக உருவெடுத்து தவம் செய். உனக்கு சாப விமோசனம் கிடைக்கும்!’ என்று ஈசன் அருளினார். அந்தத் தாழை மரமே இந்தக் கலி யுகத் தில் இங்கு ஸ்தல விருட்சமாகத் திகழ்கிறது.

 

இந்த மலையில் உள்ள மிஞ்சி எனும் ஒரு வகை தர்ப்பைப் புல்லைக் கொண்டு நந்தி பகவான், தன் முன்னோர்களுக்கு பிதுர்க்கடன் ஆற்றினாராம். எனவே, இங்குள்ள நந்தி தேவரும் சிறப்புப் பெற்றவர் ஆகிறார். நந்தியின் குளம்படிகள் கூட இந்த இஞ்சிமலையில் உள்ளன. சிவனிடம் வரம் பெற்ற நந்திதேவர், அவருக்கே வாகனமானதால் இந்த ஊரை, ‘நந்திபுர விண்ணகரம்’ என்றும் சொல்கிறார்கள்.

 

கி.பி. 1126-ஆம் ஆண்டில் விக்கிரம சோழன் ஆட்சிக்கு வந்த எட்டாம் ஆண்டில் இஞ்சிமேடு திருமணிச்சேறை உடையார் கோயிலுக்குச் செல்வதற் காக மலைமீது ஏழு படிக்கட்டுகள் கட்டினான் என்ற தகவலை ஒரு கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. 

 

கோயிலில் படிகள் ஏறி நாம் மேலே செல்லும்போது விக்கிரம சோழன் கட்டிய பழைய படிக்கட்டுகளை இன்றும் காணலாம். அந்தப் படிக் கட்டுகளைத் தனியாக அடையாளம் காட்டிக் கட்டி வைத்திருக்கிறார்கள்.

 

இந்தத் தலத்தை வணங்கினாலே முக்தி கிட்டுமாம். அது சாஷ்டாங்க நமஸ்காரமாக இருக்கலாம். இரு கரம் உயர்த்தி உளமார வணங்குவதாகக்கூட இருக்கலாம். எனவே, இந்த திருமணிச்சேறை உடையாரை உளமார வணங்கி, ஆலய தரிசனம் செய்வோம்.

 

வித்தியாசமாகத் தங்கள் வாகனங்களுடன் இங்கு காட்சி தருகின்றனர் நவக் கிரகாதிபதிகள்.

 

மலைப் பாதையில் காட்சி தருகிறது சங்கு தீர்த்தம் எனப்படும் சங்கர தீர்த்தம். சங்கின் வடிவிலேயே இதை அமைத்துள்ளார்கள். பாகீரதி எனும் நிலத்தடி கங்கையாக இந்த ஊற்று கருதப்படுகிறது. 

 

எனவே, மலை மீதுள்ள இந்தச் சுனை நீர், புனிதத் தன்மை வாய்ந்ததாக நம்பப்படுகிறது. சுனை எந்தக் காலத்திலும் வற்றுவதில்லையாம். 

 

சுனைப் பகுதியை தேவநாகம் ஒன்று இடைவிடாமல் காவல் காக்கிறதாம். ‘‘இந்தத் தீர்த்தம்தான் இன்றும் இறைவனின் அபிஷேகத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது. அந்த அபிஷேக நீரை அருந்தினால், தீராத வியாதிகள் கூடத் தீர்ந்து விடும்.

 

அவ்வளவு ஏன்... பாம்புக் கடிக்கும் இந்தத் தீர்த்தம் விஷ முறிவாகப் பயன்படுகிறது என்கிறார்கள்.  

 

பாம்பாட்டிச் சித்தர் இன்னும் வசித்து வருவதாகச் சொல்லப்படும் ஒரு குகை, இந்தப் பிராகாரத்தில் இருக்கிறது. பாம்பு வடிவில் இன்னும் அவர் உள்ளே வசித்து வருகிறாராம். 

 

இதன் உள்ளே பத்துப் பேர் வரை அமர்ந்து தியானம் செய்யலாம். அந்த அளவுக்கு இட வசதி இருக்கிறது. தவறான எண்ணங்களுடன் உள்ளே செல்பவரை பாம்பு தீண்டிவிடும் என்கிறார்கள் ஊர்க்காரர்கள்.

 

இஞ்சிமேடு கிராமத்துக்காரர். ஊரில் ஒவ்வொருவரும் மற்றவரைப் பார்க்கும்போதும் ‘ஹலோ’ சொல்வது போல் ‘ஓம் நமசிவாய’ என்று சொல்லப் பழக்கப்படுத்தி இருக்கிறார். ஊரில் எங்கு திரும்பினாலும் ‘ஓம் நமசிவாய’ என்கிற முழக்கம் காதுக்கு இனிமையாக இருக்கிறது.

.
மேலும்