கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் கோவில் - திருப்பூர்

By Tejas

கொங்கு மண்டலம் வரலாற்று சிறப்பு, கலை, பண்பாடு, நாகரிகம், இறையுணர்வு ஆகியவற்றைக் தன்னகத்தே கொண்ட வளம் கொழிக்கும் பழம் பெருமை வாய்ந்த பகுதியாகும். வைணவத்தின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் நெல்லை மாவட்டத்தில் ஒன்பது இடங்களில் பெருமாளுக்கென அமைக்கப்பட்ட கோவில்கள் நவதிருப்பதி என அழைக்கப்படுகிறது. அதே போல் கொங்கு மண்டலத்தில் சைவத்தின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் அமராவதி ஆற்றின் கரையோரம் கொழுமம் முதல் கரூர் வரை 11 சிவாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் கொழுமம் தாண்டேஸ்வரர் ஆலயம், காசிவிஸ்வநாதர் ஆலயம், கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிவபெருமான் சுயம்பு லிங்கமாக தோன்றி, விக்கிரம சோழனை ஆட்கொண்ட இடத்தில் இந்தத் திருக்கோவில் அமைந்துள்ளது. சோழர்களின் கட்டிட கலையை பறைசாற்றும் வகையில் முற்றிலும் கல்லால் கட்டப்பட்டுள்ளது. விக்கிரம சோழன் மட்டுமல்லாது பொதுமக்களின் பங்களிப்போடு இந்த கோவில் கட்டப்பட்டிருக்கிறது. இதனை இங்கு காணப்படும் கல்வெட்டுகள் உறுதிபடுத்துகின்றன.

இங்கு அருள்பாலிக்கும் சிவபெருமான் மகிழ்ச்சியை அளிப்பதால் ‘மருதீசர்’ எனவும், பாவவினை என்னும் நோயை நீக்க மருந்தாகத் தோன்றியதால் ‘மருந்தீசர்’ என்றும், அர்ச்சுனன் வழிபட்டதால் ‘அர்ச்சுனேஸ்வரர்’ என்றும் பல்வேறு நாமங்களில் அழைக்கப்படுகிறார்.

தல வரலாறு : அமராவதி ஆற்றங் கரையில் அமைந்துள்ள 11 சிவமூர்த்த தலங்களில், கடத்தூர் மட்டுமே சுயம்பு திருமேனியை கொண்டது. பஞ்சபாண்டவர்கள் அஞ்ஞாத வாசம் மேற்கொண்டு மறைந்து வாழ்ந்த காலத்தில், சிவ பூஜை செய்ய வேண்டி சுயம்புவாய் எழுந்தருளியவர் அர்ச்சுனேஸ்வரர்.

பல ஆண்டுகளுக்கு பிறகு காரைத்தொழுவில் இருந்து இந்தப் பகுதி வழியாக இடையர் ஒருவர் பால் கொண்டு சென்றார். அப்போது குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டும் கால் இடறி ஒரு குடம்பால் சிந்தியது. தினமும் இந்த நிகழ்வு தொடர்ந்ததால் மன்னன் விக்கிரம சோழனின் உத்தரவுப்படி அங்கிருந்த மூங்கில் புதர்கள், மருத மரம் ஆகியவற்றை அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது சுயம்புவாக இருந்த சிவலிங்கத்தின் மீது வெட்டுப்பட்டு, ரத்தம் பீறிட்டு வெளிவந்தது. அது அருகில் இருந்த அமராவதி ஆற்றில் கலந்து ஓடியது. செய்தியறிந்து மன்னர் விக்கிரம சோழன் வந்து, தன் கைவிரல் மோதிரத்தால் ரத்தம் வடியும் இடத்தில் அழுத்த ரத்தம் நின்றதாம். இதையடுத்து அந்த இடத்தில் அர்ச்சுனேஸ்வரர் ஆலயத்தை விக்கிரம சோழன் அமைத்ததாக கூறப்படுகிறது. இன்றளவும் இங்குள்ள சிவலிங்கத்தின் தலைப்பாகத்தில் வெட்டுப்பட்ட காயத்தின் தழும்பு போன்ற அமைப்பை காண முடியும்.

சோழர் படைத்தளபதி நாகதோஷத்தால் பாம்பு கடித்து அவதிப்பட்ட போது, இங்குள்ள அம்மன் புற்றாக தோன்றி அருள்புரிந்ததாகவும், குலோத்துங்க சோழன் மகளுக்கு மாங்கல்ய தோஷத்தால் திருமணத்தடை ஏற்பட்ட போது, அர்ச்சுனேஸ்வரர் தோஷம் நீக்கி அருள்புரிந்ததாகவும். கர்ண பரம்பரை மற்றும் தல வரலாற்று செய்திகள் கூறுகின்றன.

ஒவ்வொரு வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் வளர்பிறை, பஞ்சமிதிதி மற்றும் பவுர்ணமி திதியன்றும் திருமணத்தடை நீங்க இத்திருக்கோவிலில் பரிகார பூஜைகள் நடைபெறுகிறது. இதில் மாங்கல்ய தோஷம் நீங்க வேண்டி பெண்கள் கலந்து கொண்டு பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர். இதனால் இத்திருத்தலம் திருமணத்தடைகள் நீக்கும் ‘தென் திருமணஞ்சேரி’ என்று அழைக்கப்படுகிறது.

கொங்கு சோழனான மூன்றாம் விக்கிரம சோழன் ஆட்சிக்காலத்தில், திரிபுவன சிங்கன் என்பவருக்கு ‘பிரமேகம்’ என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட சர்க்கரை நோய் ஏற்பட்டது. அவர் கடத்தூர் மருந்தீஸ்வரரை வணங்கி வேண்டியதால் சர்க்கரை நோய் நீங்கி நலம் அடைந்தார். எனவே இறைவனுக்கு அமுது செய்ய நிலம் தானமாக வழங்கியதாகவும் இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது.

திருக்கோவில் அமைப்பு : அர்ச்சுனேஸ்வரர் கோவில் முழுவதும் கல்லினால் கட்டப்பட்டது. சமசதுர வடிவிலான கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், வசந்த மண்டபம் என 90 அடி நீளம் கொண்டது. அர்ச்சுனேஸ்வரர் கோவிலின் தெற்கு திசையில் இறைவனது வலது பக்கத்தில் கிழக்கு நோக்கி கோமதி அம்மன் சன்னிதி தனியாக அமைந்துள்ளது. மேலும் இரு திருச்சுற்றுகள், இரு திருமுற்றங்கள், இரு திருவமுது மடங்கள், இரு வாசல்கள் என அமைந்துள்ளது இந்த கோவிலின் சிறப்பம்சமாகும்.

பொதுவாக சிவன் கோவிலில் இறைவனுக்கு இடது புறமாக அம்மன் சன்னிதி அமைவது மரபு. ஆனால் கடத்தூரில் அர்ச்சுனேஸ்வரர் ஆலயத்துக்கு வலது புறமாக 4 அடி உயரத்திருமேனி கொண்டு, தனி சன்னிதியில் கோமதி அம்மன் அருள்பாலிக்கிறார். எனவே காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சியைப் போன்று கடத்தூர் கோமதியம்மனும் தனிச்சிறப்பு பெற்றவராய் திகழ்கின்றார்.

சைவம், வைணவம் பேதம் இன்றி கருவறையின் மேற்கு கோஷ்டத்தில் இறைவனின் முதுகுப்பகுதியில் விஷ்ணு சன்னிதி அமைந்துள்ளது. திருக்கோவில் திருச்சுற்றில் வலம்புரி விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, பைரவர் சன்னிதிகள் அமைந்துள்ளன. வாயிலின் முன்புறம் 4½ அடி உயர பலிபீடமும், 3½ அடி நீளம் 3 அடி உயரம் கொண்ட நந்திதேவர் சிலையும் அமைந்துள்ளது. சுவாமி சன்னிதியின் தெற்கு தேவ கோட்டத்தில் வெள்ளை நிறம் பளிங்குக் கல்லால் ஆன தட்சிணாமூர்த்தி சிலை உள்ளது. இந்த பளிங்கு திருமேனியானது காசியில் இருந்து கொண்டு வரப்பட்டதாக கூறுகின்றனர்.

பொதுவாக சுயம்புலிங்கம் உள்ள கோவில்களில் நவக் கிரக சன்னிதி இருப்பதில்லை. இருப்பினும் இந்த திருக்கோவிலில் கோமதியம்மனின் தவத்தினை கண்ட சனிபகவான் தானும் தவமியற்றி வழிபட்டு வந்ததாக வரலாற்று செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே பக்தர்கள் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி காலங்கள் மற்றும் ராகு, கேதுகளின் தோஷ காலங்கள் உள்ளிட்ட இடர்பாடுகள் நிறைந்த காலங்களில் இங்கு தவமியற்றி நிற்கும் சனிபகவான், கால பைரவர் ஆகியோரை வணங்கி, பின் கோமதியம்மனை வணங்கி அர்ச்சுனேஸ்வரரை வழிபட்டால் துன்பம் நீங்கி இன்பம் பெருகும்.

இத்திருக்கோவிலில் மகாசிவராத்திரி, பிரதோஷம், ஐப்பசி அன்னாபிஷேகம், ஆடிப்பூரம், பவுர்ணமி, அமாவாசை மற்றும் தேய்பிறை அஷ்டமி, பைரவர் பூஜை ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மேலும் பக்தர்களால் ஆயுள் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி, சதாப்த பூர்த்தி ஆகியவையும் இங்கு கொண்டாடப்படுகிறது.

திருமணத்தடை, குழந்தைப்பேறின்மை, காலசர்ப்ப தோஷம் மற்றும் சகல தோஷங்களுக்குமான பரிகாரத்தலமாக இத்திருக் கோவில் உள்ளது.

கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் கோவில் திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டையில் இருந்து சுமார் 23 கிலோ மீட்டர் தொலைவில் கணியூருக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தினசரி காலை 6.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையும் நடை திறந்திருக்கும். விஷேச தினங்களில் நடைதிறப்பு நேரம் மாறுபடும்.

சூரிய ஒளி விழும் அதிசயம்

ஆண்டு முழுவதும் அதிகாலையில் சூரிய ஒளி கோவில் அருகில் உள்ள அமராவதி ஆற்றின் நீரில் பட்டு பிரதிபலித்து சுயம்புவாய் லிங்க வடிவில் எழுந்தருளியுள்ள அர்ச்சுனேஸ்வரர் மீது படுவது சிறப்பம்சமாகும். சூரியன் திசை மாறும் காலங்களான உத்திராயணம், தட்சிணாயணம் காலங்களிலும் கூட சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது விழும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது சோழர் கால கட்டிடக்கலையின் சிறப்பம்சமாகும்.

மேலும் ஆற்று நீரில் படும் சூரிய ஒளி ஆற்றங் கரையைக் கடந்து மூன்று நிலை கோபுரம், நந்திதேவர், அர்த்தமண்டபம், மகாமண்டபம் வசந்த மண்டபம் கருவறை என சுமார் 200 அடிக்கும் மேலாக பயணம் செய்து சிவலிங்கத்தின் மீது விழுவது அதிசயிக்கத்தக்க நிகழ்வாகும். அதிகாலையில் சூரிய பகவான் தன்கிரகணங்களை அர்ச்சுனேஸ்வரர் மீது செலுத்தி வழிபடுவதால் இவ்விறைவனை வழிபடுவோருக்கு நிழல் கிரகங்களான ராகு, கேதுவின் தோஷங்கள் மற்றும் காலசர்ப்ப தோஷமும் நீங்குவதாக ஐதீகம்.

அமராவதி ஆற்றில் தண்ணீர் இல்லாத காலங்கள் தவிர மற்ற காலங்களில் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது விழும் அதிசயத்தை காண முடிகிறது. இந்த அதிசய நிகழ்வை காண சுற்று வட்டார கிராமங்களில் இருந்து மட்டுமல்லாமல் நெடுந்தொலைவில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவாயநம திருச்சிற்றம்பலம்ஓம் நமசிவாய நல்லதே நடக்கும் !சிவாயநம திருச்சிற்றம்பலம் சிவாயநம திருச்சிற்றம்பலம்.

.
மேலும்