திருச்செந்தூர் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருச்செந்தூர் கோவில் கோபுரம் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 9 அடுக்குகளை கொண்ட இந்த கோபுரம் 157 அடி உயரம் கொண்டது.
திருச்செந்தூர் கோவில் வடிவம், பிரணவ மந்திரமான ஓம் எனும் வடிவில் அமைந்துள்ளது. திருச்செந்தூர் கோவிலில் உள்ள சண்முக விலாசம் எனும் மண்டபம் 120 அடி உயரமும், 60 அடி அகலமும் கொண்டது. 124 தூண்கள் இதை தாங்குகின்றன.
முருகனின் அவதார நோக்கமே அசுரர்களை அழிப்பதுதான். திருச்செந்தூரில் தான் அந்த அவதார நோக்கம் பூர்த்தியானது. எனவே, முருகனின் தலங்களில் திருச்செந்தூர் தலமே தெய்வீக சிறப்பும், தனித்துவமும் கொண்டதாகும்.
சிறப்புகள் : திருச்செந்தூர் கோவிலின் ராஜகோபுர வாசல் ஆண்டு முழுவதும் அடைக்கப்பட்டே இருக்கும். சூரசம்ஹாரம் முடிந்ததும் தெய்வானை திருமண நாளில் மட்டுமே அந்த வாசல் திறக்கப்படும். திருச்செந்தூரில் பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என 2 மூலவர்கள் உள்ளனர். பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள்.
இவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு லிங்கம் இருக்கிறது. இவருக்கு முதலில் தீபாராதனை காட்டிய பின்பே, முருகனுக்கு தீபாராதனை காட்டப்படும். சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும்.
திருச்செந்தூர் தலத்தில் சண்முகர், ஜெயந்தி நாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமான் என நான்கு உற்சவர்கள் உள்ளனர். இவர்களில் குமரவிடங்கரை மாப்பிள்ளை சுவாமி என்று அழைக்கிறார்கள்.
திருச்செந்தூர் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் விசுவரூப தரிசனம் எனும் நிர்மால்ய பூஜையே மிக மிக முக்கியமான பூஜையாகும்.
திருச்செந்தூர் முருகன் கோவில் தல வரலாறு :
தேவர்களுக்கு உதவ சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணிலிருந்து தோற்றுவித்த ஆறு சக்திகள், ஆறு குழந்தைகளாக மாறி, கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டு, ஆறு உருவங்களும் ஒன்று சேர்ந்து, முருகனாக உருப்பெற்றார். ஆறு முகத்தை தனது உருவில் கொண்டிருப்பதால், முருகனுக்கு 'ஆறுமுகம்" என்ற பெயரும் உண்டு.
சூரபத்மனுடன் போர்புரிய இந்த கடற்கரைக்கு முருகப்பெருமான் வந்த போது, நவகிரகங்களில் சுபகிரகம் ஆனவரும், தேவர்களுக்கு குருவாக இருப்பவருமான 'குரு பகவான்" இங்கு தவமியற்றி கொண்டிருந்தார். சிவனின் மைந்தனான முருகனை பணிந்து வணங்கிய குரு பகவான் அசுரர்களின் வரலாற்றை பற்றி கூறி, சூரபத்மனை போரில் வெல்வதற்கு முருகப்பெருமானுடனும், அவரது படையினருடனும் ஆலோசனை செய்து சிறந்த அறிவுரைகளை வழங்கினார்.
இதனால் மிகவும் மகிழ்ந்த முருகப்பெருமான், தான் இங்கே கோவில் கொள்ளும் வரத்தை அருளினார். இதனால் மகிழ்ந்த குரு பகவான் விஸ்வகர்மாவை அழைத்து இங்கு கோவில் எழுப்பினார். எனவே இங்கு கோவில் கொண்டிருக்கும் ஜெயந்தி நாதரை வணங்குவதால் குருபகவானின் அருளும் நமக்கு கிடைக்கிறது.
சூரபத்மனை ஐப்பசி மாதம் சஷ்டி தினத்தில் முருகபெருமான் வதம் செய்ததால், இங்கு கந்தசஷ்டி விழா ஐப்பசி மாதத்தில் மிக சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது. ஆறு நாட்கள் நடக்கும் இந்த கந்தசஷ்டி விழாவை காண லட்சக்கணக்கில் மக்கள் திருச்செந்தூர் கோவில் மற்றும் கடற்கரை பகுதியில் கூடுவார்கள்.