மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வரலாறு

By Tejas

மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவில் சித்திரை பெருவிழா 2024. சுவாமி அம்பாள் கல்யாண திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ள காட்சி.

 

உலகின் பிரமாண்டங்களில் ஒன்று. தினம் தினம் திருவிழா என்று ஆன்மிகப் பரவசத்திற்கு பஞ்சமில்லா பெருங்கோயில். எத்தனை முறை தரிசித்தாலும் திகட்டாத தெள்ளமுது பொங்கும் பெருமான் உறையும் தலம். அகிலத்தையே ஆளும் கயல்விழி என்னும் மீனாட்சி இக்கோயிலில் பெருந்தாயாக, பேரன்னையாக நின்ற கோலத்தில் பாத்திரம் பார்க்காமல் அருள் வழங்கும் திறனை என்னவென்று சொல்வது? எத்தனை யுகங்கள். எப்பேர் பட்ட ஞானியர். எண்ணிலடங்கா பக்தர்கள், நூற்றுக்கணக்கான அரசர்கள் என்று இவளின் திருவடி பணியர்த மனிதர்கள் எவருமிலர்.

 

எவ்வளவு உரைத்தாலும் வார்த்தைகள் வீழுமே அன்றி, இவளின் பேரருளை உரைக்க எந்த பிரம்மனாலும் முடியாது. சரணாகதியைத் தவிர வேறு எது செய்தாலும் இவளை நெருங்க முடியாது. அனைத்தும் நீயே என்று மௌனியாய் கிடத்தலைத் தவிர வேறு எந்த மார்க்கமும் இவளின் திருவடி சேர்க்காது.   கடலைக் கண்டு வியக்கும் பாலகன் போல மதுரை தலத்தின் மான்மியத்தை கொஞ்சம் பார்க்கலாம். கடல் நீரை உள்ளங்கையில் ஏந்துவது போலத்தான் இது...

 

மீனாட்சி - மீன் போன்ற விழிகளைக் கொண்டவள். தூங்காத உயிரினம் மீன்.  சக்தியின் ரூபமான மீனாட்சி தன் விழிகளை மூடினால் அண்ட சராசரங்களும் அழிந்து போகும். அப்படி ஒரு நிலை ஏற்படக்கூடாது என்பதால் அம்மன் விழிகளை மூடாமலே நின்ற கோலத்தில் அருட் பாலிக்கிறாள். மீனாட்சி அம்மன் தூங்காமல் இருப்பதால் தான். மதுரை நகர மக்களும், இரவு - பகல் பாராமல் உழைக்கின்றனர். ஆகவே தான் மதுரை தூங்கா நகரம் என்று அழைக்கப்படுகிறது.

 

உலக அதிசயப் பட்டியலுக்குப் பரிந்துரைக்கப்பட்ட அற்புத ஆச்சர்யங்கள் கொண்ட ஆன்மிகத் தலமான மதுரை மீனாட்சியம்மன் கோயிலானது,   பதினேழு ஏக்கர்  நிலப்பரப்பில் விரிந்திருக்கிறது. இக்கோயில் ஆதியில் இந்திரனால் கட்டப்பட்டது. விருத்திராசுரனை வதம் செய்ததால் இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.  ‘பிரம்மஹத்தி  தோஷம்’ நீங்க இந்திரன், கடம்ப வனத்தில்(மதுரை) சுயம்புவாகத் தோன்றியிருந்த லிங்கத்தை  வழிபட்டு, பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்றான், அதன் பயனாக இங்கேயே சிறு கோயிலை நிர்மாணித்தான் என திருவிளையாடற்  புராணம் கூறுகிறது.

 

வெகு காலத்திற்குப் பிறகு, ஒரு நாள் வணிகர் தனஞ்செயன் அன்றைய வணிகத்தை முடித்து விட்டு தனது சொந்த ஊரான மணவூருக்கு திரும்பியபோது, பொழுது சாய்ந்து இரவானதால் வழியில் இருந்த  கடம்ப வனத்தின் நடுவே, பொய்கைக் கரையோரம் தங்கினார். அன்றிரவு, அங்கிருந்த சுயம்புலிங்கத்தை விண்ணிலிருந்து வந்து தேவர்கள் பூஜித்த  அதிசயத்தைக் கண்டார். அதனை மறுநாள் குலசேகர பாண்டிய மன்னனிடம் தெரிவித்தார். அன்றிரவு மன்னனின் கனவில் தோன்றிய சிவபெருமான் ‘கடம்பவனத்தை திருத்தி நகரமாக்கு’ என கட்டளையிட, அதன்படி நகரை உருவாக்கி கோயிலையும் எழுப்பினான் மன்னன்.

 

பாண்டிய மன்னனுக்கு மகளாக அவதரித்த அம்பிகை

 

கந்தர்வ லோகத்தில் வசித்த விசுவாவஸு என்பவருக்கும், அவரது மனைவிக்கும் மணமுடிந்து பத்து ஆண்டுகள் கடந்த நிலையில் தமக்கு குழந்தை இல்லையே என்று  வருத்தம் இருந்து வந்தது. மனைவியின் ஏக்கம் தீர, விசுவாவஸு குழந்தை வரம் வேண்டி சிவனிடம் முறையிட்டான். சிவனருளால் அவனது மனைவிக்கு ஒரு பெண்  குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு வித்யாவதி என பெயர் சூட்டி வளர்த்தான். வித்யாவதி சிறு வயதிலேயே அம்பாள் உமையாள், மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தாள்.  ஒரு சமயம் அவளுக்கு பூலோகத்திலுள்ள புண்ணிய தலத்தில் அருளும் அம்பிகையைத்  தரிசிக்க வேண்டுமென்ற ஆசை உண்டானது. தன் விருப்பத்தை தந்தையிடம்  தெரிவித்தாள். விசுவாவஸு, கடம்பவனம் (மதுரை) தலத்தைச் சுட்டிக்காட்டி இங்கு அருளும் அம்பிகை சியாமளையை வழிபடும்படி கூறினான்.

அதன்படி  அம்பாளைத் தரிசிக்க வித்யாவதி இங்கு வந்தாள். சியாமளாதேவி சந்நதி முன்  நின்று மனம் உருக வழிபட்டாள். அவளுக்கு 3 வயது சிறுமியாக காட்சி தந்த  அம்பிகை, என்ன வரம் வேண்டும் கேள்! என்றாள். அம்பாளை குழந்தை வடிவில்  பார்த்த வித்யாவதி, தாயே, நீயே எனக்கு மகளாகப் பிறக்க வேண்டும் என்றாள். அம்பாள், உனது  விருப்பம் அடுத்த பிறவியில் நிறைவேறும் என்றாள். இதன்படி,  அடுத்த பிறப்பில் சூரிய வம்சத்தில் வந்த மன்னன் சூரசேனனின் மகள் காஞ்சனமாலையாக அவதரித்தாள் வித்யாவதி. அம்பாள் பக்தையாகத் திகழ்ந்த அவளை  மதுரையை ஆண்ட மலையத்துவச பாண்டிய மன்னன் மணம் முடித்தான். இவ்விருவருக்கும்  புத்திரப்பேறு இல்லை. காஞ்சனமாலை, இத்தலத்தில் தனக்கு முற்பிறவியில் அருள்  செய்த சியாமளையிடம் குழந்தை பாக்கியம் அருளும்படி வேண்டினாள்.

 

மன்னனும்  புத்திரப்பேறுக்காக, இங்கு புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தினான். அம்பிகை,  அந்த யாகத்தீயில் இருந்து 3 வயது குழந்தையாகத் தோன்றினாள். அப்போது காஞ்சனமாலைக்கு  முற்பிறவியில் சியாமளாம்பிகை வாக்குறுதி கொடுத்தது நினைவுக்கு வந்தது. யாகத்தீயில் உதித்த தெய்வக்குழந்தையைக் கண்ட  மலையத்துவசனும், காஞ்சனாதேவியும் அவளை வாரி அணைத்து உச்சி முகர்ந்தனர். மகளை சீரும், சிறப்புமாக வளர்த்தனர். ஆண்  வாரிசு இல்லாத மன்னன், அவளுக்கு ஆயகலைகள்64ஐயும் கற்றுக்கொடுத்தான். குழந்தை அவள் குமரியானாள்.

 

மகளின் மார்பகங்களைக் கண்ட காஞ்சன மாலை திடுக்கிட்டாள். ஆம். மகளுக்கு மூன்று ஸ்தனங்கள். கடவுள் தந்த செல்வம். அம்பிகையே மகளாக பிறந்ததாக எண்ணினோமே! இப்படி இயற்கைக்கு மாறாய் மார்பில் மாற்றம் கொண்டிருக்கிறாளே, என கலங்கினாள். கணவனிடம் தெரிவித்தாள். மன்னன் குழப்பமும் பயமும் கொண்டான். அப்போது ஒரு அசரீரி கேட்டது. கலங்காதே, அவள் சக்தியின் ரூபம். உன் மகள் எப்போது அவளது துணையைக் காண்கிறாளோ அப்போது அந்த ஸ்தனம் காணாமல் போகும் என்றது. குழப்பத்திற்கு தீர்வு கிடைத்ததாக கருதினான் மன்னன்.

 

தனக்குப்  பின்பு மதுரையை ஆட்சி செய்யும் பொறுப்பையும் ஒப்படைத்தான். இவள் மீன் போல  எப்போதும் விழிப்புடன் இருந்து, மதுரையை ஆட்சி செய்ததால், “மீனாட்சி” என்று  பெயர் பெற்றாள். இதன்பிறகு சியாமளை என்ற பெயர் மறுவி மீனாட்சி என்ற  பெயரே இவளுக்கு நிலைத்து விட்டது. ஒரு பெண்ணாக  இருந்தும் நல்ல முறையில் ஆட்சி புரிந்ததால், ஒரு வீட்டில் பெண்களின்  ஆதிக்கம் நடக்கிறது என்றால் அவ்வீடு “மதுரை” என புகழ்ந்து கூறும் அளவுக்கு  மீனாட்சி அம்மனின் ஆட்சியின் புகழ் நிலைத்தது.

 

மீனாட்சி மிக செல்வச் செழிப்பான சூழ்நிலையில், வீரமான இளவரசியாக வளரத் தொடங்கினாள். பெற்றோரின் மறைவிற்கு முன்னரே, மிக இளம் வயதில் மதுரையின் அரசியாக செங்கோலோச்சத் தொடங்கினாள். இந்திரன் தவிர அனைத்து தேவர்களிடமும் போர் செய்து அதில் வெற்றி பெற்றாள். இறுதியாக தேவர்களுக்குத் துணையாக வந்த சிவனிடமும் போர் செய்ய முயன்றாள்.

 

முக்கண் உடையாரைக் கண்டதும் மூன்றாவது தனம் மறைந்தது. உணர்ந்தாள் மீனாட்சி. வந்திருப்பது சிவன் என உணர்ந்து சிந்தை மயங்கினாள். அவரிடம் தன்

மனதை பறி கொடுத்தாள். அதன் பிறகு சுந்தரேஸ்வரர், மீனாட்சியைத் திருமணம் செய்து கொண்டார். சுந்தரம் என்றால் அழகு என்று பொருள். அழகே வடிவான ஈஸ்வரன் என்பதால் சுந்தரேஸ்வரர் என்று அழைக்கப்பட்டார். அரசனாக சுந்தரேஸ்வரரும், அரசியாக மீனாட்சியும் நின்றருளும் தலமே மதுரை. இந்தச் செய்திகள் அனைத்தும் அஷ்ட சக்தி மண்டபத்தில் சிற்பங்களாக வடிக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டுள்ளன. ஆயகலைகளின் முழுவடிவாகிய கிளியை மீனாட்சியம்மன் தன் திருக்கரத்தில் ஏந்தி நிற்கிறாள்.

 

பூஜைகளும், திருவிழாக்களும்

 

மீனாட்சி அம்மன் கோயிலில் ஆகமமுறைப்படி தினந்தோறும் 8 கால பூஜைகள் நடக்கிறது. காலை 5 மணி முதல் 6 வரை திருவனந்தல் பூஜை,  காலை 6 முதல் 7 வரை விளா பூஜை, காலை 7.30 முதல் 9 வரை சந்தி பூஜை, காலை 10.30 முதல் 11.30 வரை  திரிகால சந்தி பூஜை, மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, மாலை 5 முதல் 6 மணி சாயரட்சை பூஜை, இரவு 7 முதல் 8  வரை அர்த்த ஜாம பூஜை, இரவு 8.30 முதல் 9.30 வரை பள்ளியறை பூஜை.

 

விழாக்களில் முக்கியத்திருவிழா

 

மாதந்தோறும் விழா நடைபெறுவது இத்திருக்கோயிலில் சிறப்பம்சமாகும். இதில் முக்கியத்திருவிழா சித்திரைத்  திருவிழா. இவ்விழா சித்திரை மாதம் வளர்பிறையில் துவங்கி சித்ரா பவுர்ணமியன்று முடிவடையும். முதல் நாள் கொடியேற்றம். பின் ஒவ்வொரு நாளும்  அம்மனும், சுவாமியும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருவர். 8ம் நாள் அம்பாளுக்கு பட்டாபிஷேகம். அன்று மாலை மீனாட்சி அம்மன் சந்நதி முன்பு உற்சவருக்கு புது பட்டாடை, ஆபரணங்கள் சாத்தப்படும். மகாராணிக்கு சூட்டப்படும் கிரிடம் அணிவிக்கப்பட்டு, நைவேத்யம் செய்து பூஜை நடைபெறும்.

பின்னர் கோயில் அதிகாரி மற்றும் சிவாச்சாரியர்கள் சுவாமி சந்நதிக்கு செல்வர். ஸ்வாமியிடம் இருக்கும் நவரத்ன செங்கோலை எடுத்துக்கொண்டு மேள தாளங்கள் முழங்க கொண்டு வந்து உற்சவ அம்பாளிடம் கொடுப்பார்கள். இதுவே மீனாட்சி அம்பாளுக்கு பட்டாபிஷேக விழாவாகும்.  இன்றைய நாளிலிருந்து நான்கு மாதம் அதாவது சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி ஆகிய மாதங்கள் மீனாட்சி ஆட்சி என்று சொல்லப்படும். ஆவணி மாதம் மூலம் நட்சத்திரத்தன்று சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெறும்.

 

9ம் நாள் காலை மீனாட்சி அம்மன்- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம். காலையில் சுந்தரேஸ்வரருக்கு அபிஷேகமும், மீனாட்சி அம்மனுக்கு அலங்கார பூஜையும் நடக்கும். திருக்கல்யாணத்திற்காக வடக்கு ஆடி - மேற்கு ஆடி வீதி சந்திப்பில் திருக்கல்யாண மேடை வண்ண, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். திருப்பரங்குன்றத்தில் இருந்து பவளக்கனிவாய்ப் பெருமாள், திருப்பரங்குன்றம் முருகன்- தெய்வானை ஆகியோர் மணமேடையில் எழுந்தருளுவர்.

அதன் பிறகு மீனாட்சியும், சொக்கநாதரும் மணமக்களுக்குரிய அலங்காரத்தில் திருக்கல்யாண மேடைக்கு வருவார்கள். முதலில் பளபளக்கும் பட்டாடை, கேசத்தால் ஆன கூந்தலா, மலர்களால் ஆன கூந்தலா என வியக்கும் வகையில் கூந்தல் முழுக்க மலர்கள் அணிந்து, அங்கமெலாம் மஞ்சளும், குங்குமமும் பூசி மணமகளாய் வருவாளே அங்கையற்கண்ணி. அதையடுத்து சுந்தரேஸ்வரர் மணமேடைக்கு  வருவார். இருவரும் வந்து சேர்ந்ததும் திருமணச்சடங்குகள் தொடங்கும். குலசேகரபட்டர் வழி சிவாச்சாரியார் சுந்தரேஸ்வரராகவும், உக்கிரபாண்டிய பட்டர் வழி சிவாச்சாரியார் மீனாட்சியாகவும், வேடம் பூண்டு வருவார்கள். இருவரும் மாலை மாற்றிக்கொள்வார்கள். மூன்று முறை மாலைகள் மாற்றுவர். அடுத்து முன்னர் சுந்தரேஸ்வரர் செல்ல, பின்னே மீனாட்சி செல்வார். இருவரும் மணமேடையை மும்முறை சுற்றி வருவார்கள்.

 

அம்மன் - சுவாமிக்கு பட்டுவஸ்திரம் சாத்தப்படும். மணப்பெண் சார்பில் முக்கிய பிரமுகர்களின் குடும்ப பெண்கள் நலங்கு செய்வார்கள்.  சுந்தரேஸ்வரரிடம் இருந்து பெற்ற மங்கலநாணை சிவாச்சாரியார் மீனாட்சி அம்மனுக்கு அணிவிப்பார். அப்போது பல்லாயிரக்கணக்கான பெண் பக்தர்கள் புதுத்தாலி அணிந்து கொள்வார்கள். (தாலி மாத்தி கோர்ப்பார்கள்). அதன் பிறகு 5 வகையான தீபாராதனைகள் காட்டப்படுகின்றன. திருக்கல்யாணம் முடிந்ததும் அம்மன் - ஸ்வாமி ஆகியோர் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் மணக்கோலத்தில் எழுந்தருளுவர். அப்போது பக்தர்கள் பதிகங்கள் பாடுவர்.

 

சுவாமியையும், அம்பாளையும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று தரிசனம் செய்வார்கள். அன்று இரவு மாசி வீதிகளில் அனந்த ராயர் பூப்பல்லக்கில் அம்பாளும், சுவாமி பிரியாவிடையுடன் யானை வாகனத்திலும் எழுந்தருளுவார்கள். சித்திரை திருவிழாவின் 11-ம் நாள் காலை தேரோட்டம் நடைபெறும். மறுநாள் தேவேந்திரர் பூஜையுடன் மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

.
மேலும்