கொடி மரம் இல்லா மேலக் கடம்பூர் சிவ திருத்தலம்

By News Room

பிரதோஷத்தன்று மட்டுமே தரிசனம் அளிக்கும் ஸ்ரீ தஸபுஜ ரிஷப பிரதோஷமூர்த்தி.

கொடி மரம் இல்லா மேலக் கடம்பூர் சிவ திருத்தலம்.

திருப்பாற்கடலில் கிடைத்த அமிர்தத்தை, முழுமுதற் கடவுளான விநாயகரை வணங்காமல் தேவர்கள் அருந்த முற்பட்ட போது, விநாயகப் பெருமான் அந்த அமிர்த கலசத்தை எடுத்து வந்து மறைத்து வைத்தார் என்பது அனைவரும் அறிந்த கதை.

அவ்வாறு எடுத்துச் செல்கையில் அந்த அமிர்த கலசத்திலிருந்து ஒரு துளி கடம்ப வனத்தில் சிந்தி, சுயம்பு வடிவ சிவலிங்கமாக மாறியது. அதனால் பெருமானுக்கு திருநாமம் ஸ்ரீ அமிர்கபடேஸ்வரர் என்பதாகும். ஸ்தல விருட்சம் கடம்ப மரம். அந்தக் கடம்பவனப் பகுதியே தற்போது மேலக்கடம்பூர் என்று அழைக்கப்படுகிறது.

மேலக்கடம்பூரில் சிவபெருமான் ஸ்ரீ அமிர்கடேஸ்வரராகவும், ஸ்ரீ காலஸம்ஹாரமூர்த்தியாகவும் அருள்பாலிக்கின்றார்.

சிவபெருமான் சுயம்பு என்பதால், இத்திருத்தலத்தில் தொப்புள் ஸ்தானமான கொடி மரம் கிடையாது. மேலக்கடம்பூர் திருக்கோவிலானது கரக் கோவில் என்ற அமைப்பைச் சார்ந்தது. குதிரைகள் பூட்டிய தேர் வடிவில் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்திரனின் தாயார், ஸ்ரீ அமிர்கடேஸ்வரரை தினசரி வணங்கி வந்தார். தன் தாயின் கடமையை எளிதாக்கிட விரும்பிய இந்திரன், இத்திருக்கோயிலை கையினால் அகழ்ந்து, ஒரு தேரில் வைத்து இழுக்க முயலுகையில், விநாயகர் தனது திருப்பாதத்தினால் தேர்ச்சக்கரத்தை ஒரு அழுத்து அழுத்த, சக்கரம் மண்ணில் புதைந்து, தேர் நகர முடியாமல் நின்றதோடு மட்டுமல்லாமல், கல்லாய் சமைந்து போனது.

அப்போது தான் இந்திரன் உணர்ந்தான், தான் முழுமுதற் கடவுளான விநாயகரை வணங்காததால் இப்படி ஒரு நிலை ஏற்பட்டது என்பதை. இத்திருக்கோயிலின் கர்ப்பகிரகத்தின் வடமேற்கு மூலை சற்றே புதைந்து காணப்படுவதிலிருந்து இப்புராண உண்மையை உணரலாம்.

வங்காள தேசத்திலிருந்து சிதம்பரம் ஸ்ரீ நடராஜரை தரிசிக்க வந்த ஸ்ரீ கந்தசிவன் என்பவர், முதலாம் குலோத்துங்க சோழனின் அரசவையில் இராஜ குருவாக இருந்தார். இவர் தன்னுடன் ரிஷப தாண்டவமூர்த்தி மேல் நோக்கிய ரிஷபத்தின் மேல், வீசிய பத்து கரங்களில், கத்தி, சூலம், தீச்சட்டி, கபாலம், பாம்பு, கேடயம், தண்டம், குத்தீட்டி ஏந்தி, பிரளய காலத்தில் சகல ஜீவராசிகளும் தன் அடி சேர்ந்திட காட்சி அளிக்கும் அற்புதக் கலைப் படைப்புடைய ஓர் அற்புதமான சிற்பத் திருமேனியைக் கொணர்ந்திருந்தார்.

முதலாம் குலோத்துங்க சோழனின் வேண்டுகோளின்படி கி.பி.1110-ல், ஸ்ரீ கந்தசிவன் இத்திருக்கோயிலைக் கட்டி முடித்த பின்னர், தான் கொணர்ந்திருந்த தாண்டவமூர்த்தியை இத்திருத்தலத்தில் விட்டுச் சென்றிருக்கலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இத்திருத்தாண்டவ மூர்த்தியை, பிரதோஷ காலத்தில், இத்திருக்கோயிலில் மட்டுமே தரிசிக்க இயலும், மற்ற நாட்களில் இவரது தரிசனம் கிடையாது.

இத்திருத்தலத்தில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் கழுகு வாகனத்தில் அருட்காட்சி தருகிறார்.

சமயக் குரவர்கள் நால்வரரால் பாடல் பெற்றது. ஸ்ரீ இராமலிங்க அடிகளார், ஸ்ரீ பாம்பன் சுவாமிகள், வண்ணச்சரபம் ஸ்ரீ தண்டபாணி சுவாமிகள் ஆகியோர் சிவபெருமானை வணங்கிப் பாடியுள்ளனர்.

செவ்வாய் இத்திருத்தலத்தில் சிவபெருமானை வணங்கி தோஷம் நீங்கப் பெற்றதால், செவ்வாய் தோஷப் பரிகாரத் திருத்தலமாகவும் திகழ்கிறது.

சஷ்டியப்த பூர்த்தி திருமணங்கள் (அறுபதாம் கல்யாணம்) ஏராளமாக நடைபெறுகின்றன.

மேலக்கடம்பூர் திருத்தலம், கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் அமைந்துள்ளது. சிதம்பரத்திலிருந்து சுமார் 34 கி.மீ. தொலைவில் உள்ளது.

ஓம் நமசிவாய !

.
மேலும்