சஹஸ்ரநாமத்திலே 'ஸ்ரீ ஸ்ரீ' என்று பதினான்கு முறை வரக்கூடிய ஒரு கட்டம் வருகிறது.
அதைப் பூர்த்தியாக விவரித்தாலே வேங்கடாசல மஹாத்மியம் விவரித்த மாதிரி ஸ்ரீநிவாஸ கல்யாணம் வரை முழுவதையும் அந்த சப்தத்தினாலே சம்பாதிக்க முடியும்.
எப்படி நடக்கிறது அவன் கல்யாணம்?
இந்த ஸ்ரீநிவாஸ அவதாரத்திலே பரமாத்மா அவனையே நினைத்து ஏங்கக்கூடிய பத்மாவதியின் கிரஹத்துக்குப் போகிறான். ஆகாசராஜனின் புதல்வி பத்மாவதி.
அந்த ஆகாசராஜன் கிரஹத்துக்கு பகவான் எந்த வேஷத்தில் போகிறான் தெரியுமோ..?
குறத்தி வேஷத்தில் போகிறான்! வேஷம் போடுவதிலே வல்லவன் அவன்! குறத்தியாய் வேஷம் போட்ட பரமாத்மா வந்த அழகே அழகு! வெறுமனே பார்க்கும் போதே அவன் சுந்தரன் தான்... இப்படி வேஷத்தைப் போட்டுக் கொண்டு வந்தால் உலகமே மயங்கி நிற்கிறது!
ஆகாசராஜனும் அவன் தர்மபத்னியும் பார்த்து விட்டு உள்ளே அழைத்துக் கொண்டு போகிறார்கள்.
'நீ எந்த ஊர் குறத்தி..?' என்று கேட்கிறாள் பத்மாவதி.
முத்துமலை, குடகுமலை என்று ஒரு மலை விடாமல் விவரிக்கிறான் பகவான். 'யார் யாருக்குக் குறி சொல்லியிருக்கிறாய்..?'
'நான் சாமான்ய குறத்தியல்ல...இந்திரனுக்கும் இந்திராணிக்கும் இசைந்த குறி சொன்னேன்.
இந்திரனும் இந்திராணியும் மெச்சிக் கொண்டார் என்னை... பார்வதிக்கும் பரமனுக்கும் பார்த்துக் குறி சொன்னேன்.
பார்வதியும் பரமனுமே மெச்சிக் கொண்டார் என்னை....' என்று பாடிக் காட்டி திருமூர்த்திக்கே குறி சொன்ன கதையை விவரிக்கிறான்.
'உங்கள் நாட்டிலே க்ஷேம லாபங்கள் எப்படி...?' என்கிறாள் பத்மாவதி. நாட்டிலே நிலவும் சுபிட்சத்தைச் சொல்கிறாள் குறத்தி.
யாருக்கும் பகைமை என்பதே கிடையாது. புலியும் பசுவும் ஒரே நீரோடையில் நீர் குடிக்கும். வாழைமரம் கிழக்குப் பக்கமாகக் குலை தள்ளும். பலா மேற்குப் பக்கமாக உற்பவிக்கும்.' இதெல்லாம் லோகத்தின் க்ஷேமத்தைக் காட்டக் கூடிய அறிகுறிகள்.
இதையெல்லாம் கேட்ட பிறகு, பத்மாவதியை குறத்தியின் பக்கத்தில் உட்கார வைத்துக் கையைப் பார்க்கச் சொல்கிறார்கள்.
சொன்னால்..... அப்போதைக்கப்போதே கெட்டியாகப் பிடித்துக் கொண்டான் பகவான் அந்தக் கையை!
'பிடித்த கையும் பிடிக்கப் போகிற கையும் ஒன்று தான்..' என்கிறான். பத்மாவதி தன் மனதுக்கு உகந்தவனைக் கைப் பிடிப்பிப்பாள் என்று சூசகமாகச் சொல்கிறான்.
அவன் அவ்வாறு பத்மாவதிக்குச் சொன்ன குறி சப்தத்தைக் கேட்கிற அத்தனை பேர் கிரஹத்திலும் கல்யாணத்துக்குத் தடையிருந்தால் நீங்கிப் போகுமாம்.
இவ்வளவு நாட்களாக எத்தனையோ வேத, வேதாந்த, சத் விஷயங்களைப் பற்றிப் பேசினோம். ஆனால் அத்தனையைக் காட்டிலும் பகவானுடைய குறத்துக்கு இருக்கிற பலனைப் பாருங்கள்!
எளிமையை மதிக்கவும் வந்திக்கவும் கற்றுத் தருகிறான் அவன்.
இலவச வரன் பதிவுக்கு கணேசன் மேட்ரிமோனி (ganesanmatrimony.com) பார்க்கவும்