சூரிய பகவான்
ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் சூரிய பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும். சீரருள் மிகச் சுரந்து செகத்துயிர் அனைத்துங் காக்கப் பேரருள் பிதாவு மாகிப் பெருந்துன்ப இருளை யோட்டிக் காரருள் சுகத்தை நல்கக் கதிர்களா யிரம்ப ரப்பும் பாரருள் பிரிதிப் புத்தேள் பதமலர் சென்னி வைப்பாம்.
சந்திர பகவான்
திங்கள் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் சந்திர பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும். செழித்திடச் செல்வம் நல்கிச் செகத்துள் உயிர்கட் கெல்லாம் வழித்திடும் பிதாவு மாகி வல்லிருள் தன்ன யோட்டித் தழைத்திட அமுதமாகத் தக்கதோர் கதிர் பரப்பிப் பொழிந்திடுஞ் சோமநாதன் பொற்பதம் தலைக்கொள்வோமே.
அங்காரக பகவான்
செவ்வாய் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் அங்காரக பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும். வெற்றியும் வீரம் ஆண்மை விதரணம் பராக்கிர மங்கள சுற்றமாம் தீரம் நல்கிச் சோதரன் தானும் ஆகிப் பற்றிய பூமி யின்பம் பரன்பிரு தான்னியம் ஓங்கி எற்றிசைப் புகழும் சேயின் இருபதம் தலைக்கொள்வோமே.
புத பகவான்
புதன் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் புத பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.
இணக்கமாம் மகிழ்ச்சி இன்பம் இயலுறும் புத்தி யுக்தி வணக்கமாம் கல்வி மேன்மை வருந்தனம் மகிழ்ச்சி புண்யம் துணக்கமாம் பந்துவாகித் துலங்கிடச் சுகங்கள் நல்கும் கணக்கனாம் எந்தை பாதம் கழலடி சென்னி வைப்பாம்.
வியாழ பகவான்
வியாழக் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் குரு பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.
பெருநிறை செல்வம் மேன்னை பெற்றிடுஞ் சுகங்கல்யாணம் வருநிறை மரபு நீடி வாய்க்குஞ் சந்ததி தழைக்கத் தருநிறை ஆடை ரத்னந்தான் பெற அருளும் தேவ குருநிறை வியாழன் பொற்றாள் குரைகழல்! தலைக்கொள்வோமே.
சுக்கிர பகவான்
வெள்ளிக் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் சுக்ர பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும். திரைகடல் சூழம் பூமி சேர்த்திடும் உயிர்கட் கெல்லாம் நிறைதரும் யோக போகம் நீடிய மனைவி இன்பம் தரைபுகழ் வாகனங்கள் தக்கதோர் சுகத்தை நல்கும் மறைமொழி புகரின் பொற்றாள் மலரடி தலைக்கொள்வோமே.
சனி பகவான்
சனிக்கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் சனி பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.
கோரிய உலகத்தின்கண் குலவிய உயிர்கட்கெல்லாம் மீறிடச் சுகமளித்து மெய்த்தளர் பிணியை நீக்கிச் சீறிய துன்பந்தீர்ந்து சிறக்கத் தீர்க்காயுள் நல்கும் காரியின் கமல பாதக் கடிமலர் தலைக்கொள்வோமே.
ராகு பகவான்
ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் ராகு பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.
பணியென உருவம் ஆகிப் பட்சமாய் அமுதம் உண்டு தணியென உயிர்கட்கெல்லாம் தகும்படி யோக போகம் துணிவுடன் அளித்து நாளும் துலங்கிட இன்பம் நல்கும் மணமுறும் இராகு பொற்றாள் மலரடி சென்னி வைப்பாம்.
கேது பகவான்
ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் கேது பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.
மாதுமை பாகன் சொற்ற வரத்தினால் அமுத பானக் கேதுவும் உடையனாகி எவ்வுயிர்களுந் தழைக்கக் கோதிலா ஞானம் மோட்சம் குருபக்தி அருளும் நல்கும் கேதுவாம் பகவன் பாதம் கிளர்முடி மிசைக்கொள்வோமே.