மூலவர் – பிறவி மருந்தீஸ்வரர் அம்மன் – பிரகன்நாயகி (பரியநாயகி) பழமை – 1000-2000 வருடங்களுக்கு முன் ஊர் – திருத்துறைப்பூண்டி மாவட்டம் – திருவாரூர் மாநிலம் – தமிழ்நாடு
அரக்க குலத்தில், ஜல்லிகை என்ற பெண்மணியும் இப்பூமியில் பிறந்தாள். அரக்க குணங்களை விடுத்து, சிவபக்தியில் சிறந்து விளங்கினாள். கருணை உள்ளம் வாய்ந்த அப்பெண்ணுக்கு விருபாட்சன் என்ற இராட்சஷன் கணவனாக அமைந்தான். அவன் மனிதர்களையே உண்பவன். ஜல்லிகையோ, சாத்வீக உணவு உண்பவள். கணவனின் குணத்தை அவளால் மாற்ற முடியவில்லை. ஒருமுறை, ஒரு அந்தணச்சிறுவன் மறைந்த தன் தந்தைக்கு சிரார்த்தம் செய்ய கங்கைக்கு சென்று கொண்டிருந்தான். அவனைப் பிடித்த விருபாட்சன், அவனை விழுங்க முயன்றான். ஜல்லிகை தடுத்தாள்.
அந்தணர்களை விழுங்கினால் அவ்வுணவே விஷமாகும் என எச்சரித்தாள். கேட்க மறுத்த விருபாட்சன், ஜல்லிகையை உதைத்தான். அவளைக் கீழே பிடித்து தள்ளிவிட்டு, சிறுவனை விழுங்கி விட்டான். சற்றுநேரத்தில் அவ்வுணவு விஷமாக மாறியது. விருபாட்சன் இறந்தான். ஜல்லிகை திருத்துறைப்பூண்டி தலத்தில் வில்வமரங்களின் மத்தியில் எழுந்தருளியிருந்த சிவனை வணங்கி, “என் கணவன் நல்லவன் அல்ல, இருப்பினும் அவனின்றி நான் வாழேன். அரக்க குணத்தை மாற்றி, இரக்க குணமுள்ளவர்களையே இவ்வுலகில் பிறக்கச் செய். இல்லையேல், பிறவியிலிருந்து விடுதலை கொடு” என வேண்டினாள்.
பலநாட்கள் பட்டினியாய் கிடந்து உயிர் போகும் நிலையில், இறைவனின் துணைவியான பிரகன்நாயகி காட்சியளித்தாள். “மகளே. நீ இத்தலத்திலுள்ள தீர்த்தத்தில் நீராடி வா” என்றாள். அவ்வாறு நீராடி வரவும், எதிரே அவளது கணவன் விருபாட்சன் வந்தான். அவனுக்கு அம்பிகை உயிர் கொடுத்துவிட்டாள். அத்துடன், அவன் வயிற்றில் கிடந்த அந்தணச் சிறுவனையும் எழுப்பினாள். அவன் அன்னையின் தரிசனம் கண்டான். “அம்மா! நான் என் வழியே போய்க்கொண்டிருந்தேன். இடையில் இவன் என்னை விழுங்கினான். விதி முடிந்த என்னை உயிர்ப்பித்த காரணம் என்ன?” என்றான். அவனிடம் அம்பிகை, “மகனே! தந்தை இறந்த பிறகும், எவன் ஒருவன் அவரை மறவாமல், தினமும் ஆத்மார்த்தமாக வணங்குகிறானோ, ஆண்டுதோறும் அவருக்கு சிரார்த்தம் செய்கிறானோ அவன் எத்தகைய ஆபத்தில் இருந்தும் தப்பிக்கிறான். அவனுக்கு என்னருள் நிச்சயம் உண்டு. அது மட்டுமின்றி, மறைந்த அந்த தந்தைக்கு மறுபிறவி இல்லாமலும் செய்து, சொர்க்கத்தில் இடமளிப்பேன்” என்றாள்.
ஜல்லிகையிடம், “மகளே! நீ அசுர குலத்தவள் ஆயினும், நற்குணங்களையே கொண்டிருந்தாய். எவள் ஒருத்தி, எவ்வளவு கஷ்டம் வந்தாலும், அதைத் தாங்கிக் கொண்டு, இன்முகத்துடன் பதிசேவை செய்கிறாளோ, அவளது மாங்கல்ய பலத்தை உயர்த்துவதோடு, அவள் நிம்மதியாக வாழவும் வழி செய்வேன். அவளது கணவனை திருத்துவேன்” என்றாள். இவ்வாறு இறைவனும், இறைவியும் “பிறவி” என்ற பெரும்பிணிக்கே மருந்து தருபவர்களாக உள்ளனர்.
தாருகாவனத்தில் தங்கியிருந்த முனிவர்கள், தாங்கள் செய்யும் யாகங்களின் பலனை ஏற்பதால்தான், சிவனுக்கே சக்தி ஏற்பட்டு உலகைக் காப்பதாக ஆணவம் கொண்டனர். அவர்களுக்கு புத்தி கற்பிக்க இறைவன், பிட்சாடனராக, உலகமே வியக்கும் பேரழகுடன் அங்கு வந்தார். அவர்கள் பிட்சாடனராக மாறுவேடத்தில் வந்த அந்த சுந்தரனைப் பார்த்தனர். தன்னிலை மறந்து, ஆடைகள் அவிழ அவர் பின்னால் சென்றனர். அந்நேரத்தில் விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து வந்தார்.
தங்கள் மனைவியரை விட அழகில் சிறந்த அப்பெண்ணின் பின்னால் முனிவர்கள் சென்றனர். சற்று நேரத்தில் தங்கள் நிலை உணர்ந்து, தங்களை இக்கதிக்கு ஆளாக்கிய அவர்களை அழிக்க, மந்திர சக்தியால் உருவான யானை ஒன்றை ஏவினர். சிவன் அந்த யானையைக் கொன்று, அதன் தோலை உரித்து ஆடையாக அணிந்தார். இதனால் அவர் “கஜசம்ஹார மூர்த்தி” எனப் பெயர் பெற்றார். முனிவர்கள் தங்கள் ஆணவம் நீங்கப் பெற்றனர். இக்கோயிலின் விசேஷ அம்சம் சிவனின் கஜசம்ஹார மூர்த்தியாகும். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இம்மூர்த்தியை வழிபடுவதன் மூலம் மனதில் பயம் என்ற சொல்லுக்கே இடமிருக்காது. இவர் ஆணவத்தையும் வேரறுப்பவர்.
திருவிழா: சித்திரை திருவிழா இங்கு விசேஷம். நவராத்திரி, திருவாதிரை விழா ஆகியவனவும் நடக்கின்றன. வேண்டுகோள்: திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க, இறைவனை வேண்டிக்கொள்ளலாம். நேர்த்திக்கடன்: வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.