சித்தர்மலை திருத்தலம், நிலக்கோட்டை

By News Room

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்தில் எஸ்.மேட்டுப்பட்டி என்ற கிராமம் அமைந்துள்ளது. வைகை ஆற்றின் கரையில் இயற்கை எழிலுடன் அமைந்த இந்த கிராமத்தில்தான், சித்தர் மலை இருக்கிறது. சதுரகிரியைப் போல, இந்த மலையிலும் முன்காலத்தில் சித்தர்கள் பலர் தவம் செய்து வந்ததாகவும், தற்போதும் அரூபமாக அவர்கள் இங்கு உலவுவதாகவும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இந்த கிராமம் முன் காலத்தில் ‘சித்தர்கள் நத்தம்’ என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது, இங்கு கிடைத்த கல்வெட்டுகளின் மூலமாக அறியமுடிகிறது.

 

2,100 அடி உயரத்தில், அடர்ந்த வனமும், அதிக பாறைகளும் கொண்ட கரடு முரடான மலையாக சித்தர் மலை காணப்படுகிறது. 

இந்த மலை மீது 15-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான சிவாலயம் ஒன்று உள்ளது. இங்குள்ள இறைவனின் திருநாமம் ‘சித்தர் மகாலிங்கம்’ என்பதாகும். இந்தக்கோவிலானது, மலையின் வடக்குபுறத்தில் அமைந்திருக்கிறது. மேற்கு நோக்கி அருள்பாலிக்கும் சிவலிங்கங்களில், இந்த சித்தர்மலை சிவாலயமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த மலைக் கோவிலுக்கு, ஆடி அமாவாசை, பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் மலை ஏறிச் சென்று, சித்தர் மகாலிங்கம் சுவாமியை தரிசனம் செய்து வருகிறார்கள். 

 

சித்தர் மகாலிங்கம் கோவிலின் எதிர் திசையில், ஒரு பாறையில் லிங்க வடிவ ஓவியம் பாறையிலேயே வரையப்பட்டு இருக்கிறது. மேலும் மூலிகைத் தன்மை கொண்ட வற்றாத சுனை ஒன்றும் இந்த மலைக் கோவில் அருகே இருக்கிறது. கோவிலின் பின்புறம் அமைந்துள்ள இந்த சுனைக்கு மேலே உள்ள கற்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது வழக்கம். இந்த ஆலயம்,

 

இத்திருமலையை சுற்றி அமைந்துள்ள அனைத்து கிராம மக்களுக்கும் வழிபடும் திருக்கோவிலாக விளங்குகின்றது. இந்தப் பழமையான திருத்தலம் மேற்கு நோக்கி அமைந்திருப்பதும், மூலவரின் ஆவுடை வலதுபுறம் அமைந்து அருள்பாலிப்பதும், சித்தர்கள் அரூபமாக வழிபடுவதும் இதன் கூடுதல் சிறப்பாகும்.

 

அமைவிடம்

 

திண்டுக்கல் நகரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது நிலக்கோட்டை. அங்கிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் எஸ்.மேட்டுப்பட்டி கிராமம் அமைந்திருக்கிறது.

.
மேலும்