அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்யவும், அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார்.
சிவனுக்கு பூஜை செய்த தாமரைமலர்களை தாமிரபரணியில் வீசும்படியும், அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்க பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் கூறினார்.
அதன்படி உரோமசர் தாமரை மலர்களை நீரில் விட, 9 பூக்கள் பல இடங்களில் கரை ஒதுங்கின. இந்த இடங்களில் எல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார் உரோமசர். இவை "நவ கைலாய தலங்கள்' எனப்பட்டன. நவக்கிரகங்கள் ஒன்பது என்பதால் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டது.
நவ கைலாயம் தலங்களின் விபரம்:-
சூரிய தலம்........
தலம்: பாபநாசம் அம்சம்: சூரியன் நட்சத்திரம்: கார்த்திகை, உத்திரம் மூலவர்: ஸ்ரீபாபநாசர் என்ற கைலாச நாதர் அம்பாள்: ஸ்ரீஉலகாம்பிகை இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து மேற்கே 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
நவ கைலாயங்களில் முதல் கைலாயம் நாம் அறிந்தும், அறியாமலும் செய்த அனைத்து பாவங்களையும் தீர்க்க வணங்க வேண்டிய திருத் தலம் இது. கோயிலின் எதிரில் உள்ள தாமிரபரணி நீராடுபவரது அனைத்து பாவங்களையும் தீர்க்கும் புண்ணிய தீர்த்தம். திருநெல்வேலியில் இருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் உள்ள இத் திருத் தலத்தின் மூலவர் ருத்திராட்சத்தினால் ஆனவர்.
பொதிகை மலையில் தோன்றும் தாமிரபரணி ஆறு சமவெளியினை அடையும் இடமே பாபநாசம். அகத்திய முனி தங்கி வழிபட்ட இத் திருக்கோயிலின் 80 அடி உயர ராஜ கோபுரம் ஏழு அடுக்குகளை கொண்டது.
அகத்திய முனிவருக்கு பெருமான் ரிஷப வாகனத்தில் உமையாளுடன் திருமணக் கோல காட்ச்கியளித்த புண்ணிய தலம் இது. விராட்டு என்பவர் மோட்சம் அடைந்த தலம் இது. மூலவர் வயிராச லிங்கம், பழமுறை நாயகர், முக்காளாலிங்கர், பரஞ்சோதிலிங்கர் என்றெல்லாம் வணங்கப்படுகிறார்.
சந்திர தலம்........
தலம்: சேரன்மகாதேவி அம்சம்: சந்திரன் நட்சத்திரம்: ரோகினி, ஹஸ்தம், திருவோணம் மூலவர்: ஸ்ரீஅம்மைநாதர் அம்பாள்: ஸ்ரீஆவுடைநாயகி இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து மேற்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
திருநெல்வேலியிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள இரண்டாவது நவ கைலாயமாகும். தாமிரபரணி ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ள இது சந்திரன் ஆட்சி பெற்று விளங்கும் தலமாகும். மூலவர் சுயம்பு மூர்த்தியான " ஸ்ரீ அம்மநாத சுவாமி ", அம்பாள் " ஆவுடை நாயகி ". முன்னொரு சமயம் இத் தல மூலவருக்கான கருவறையை கட்டிட வேண்டி, நெற் குத்தும் தொழில் கொண்ட இரு பெண்கள் காசு சேர்த்து வந்தனர்.
நீண்ட காலம் ஆகியும் , போதிய பணம் கிடைக்கவில்லையே என எண்ண, சிவ பெருமான் அந்தணர் உருவில் வந்து அவர்களது வீட்டில் உணவருந்தி சென்றார். வீட்டில் செல்வம் பெருகியது. பின்னரே கருவறை கட்டி முடிக்கப்பட்டது.
இதை கூறும் வண்ணம் நெற் குத்தும் இரு பெண்டிரின் உருவம் தூணில் பொறிக்கப்பட்டுள்ளது. கோயிலின் அருகில் யாக தீர்த்தம் ஒன்று உள்ளது. இத் தீர்த்தத்தில் 41 நாட்கள் தொடர்ந்து நீராட தீரா கொடிய நோய்களும் தீர்கிறது.
செவ்வாய் தலம்.........
தலம்: கொடகநல்லூர் அம்சம்: செவ்வாய் நட்சத்திரம்: மிருக சிரீடம், சித்திரை, அவிட்டம் மூலவர்: ஸ்ரீகைலாசநாதர் அம்பாள்: ஸ்ரீசிவகாமி இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து மேற்கே சேரன்மகாதேவி செல்லும் கல்லூர் சாலையில் நடுக்கல்லுருக்கு தெற்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
நவக்கிரகங்களில் " செவ்வாய் " ஆட்சி பெற்று விளங்கும் " கோடகநல்லூர் " , திருநெல்வேலியிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மூன்றாவது நவ கைலாயமாகும். செவ்வாய் திசை நடக்கும் அனைவரும் தவறாமல் சென்று வழிபட வேண்டிய திருக் கோயில் இது. ரிஷி குமாரர் ஒருவரின் சாபத்தால் பரிஷத் மஹாராஜையும், சனி தோஷத்தால் நள மகாராஜாவையும் தீண்டிய கார்கோடகம் என்ற கரு நீல வண்ண சர்ப்பம், முக்தி வேண்டி மஹா விஷ்ணுவை வேண்ட, விஷ்ணுவோ கோடகநல்லூருக்கு சென்று தவம் செய்ய சொன்னார்.
அவ்வறே கார்கோடகன் முக்தி பெற்ற தலம் இது என்பதால் " கோடகநல்லூர் " என்றானது. இன்றும், இங்கு கரு நீல வண்ண பாம்புகள் நிறைந்து காணப்பட்டாலும், நல்லோரை தீண்டுவதில்லை. மூலவர் " ஸ்ரீ கைலாசநாதராக " கிழக்கு நோக்கியும், அம்மை " சிவகாமி அம்பாளாக " தெற்கு நோக்கியும் அருள்பாளிக்கின்றனர்.
ராகு தலம்.........
தலம்: குன்னத்தூர் (சங்காணி) அம்சம்: ராகு நட்சத்திரம்: திருவாதிரை, சுவாதி, சதயம் மூலவர்: ஸ்ரீகோத்த பரமேஸ்வரர் என்ற கைலாய நாதர் அம்பாள்: ஸ்ரீசிவகாமி இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் திருவேங்கடநாதபுரம் குன்னத்தூருக்கு தெற்கே உள்ளது. இது சங்காணி சிவன் கோவில் என்று அவ்வூர் மக்களால் அழைக்கப்படுகிறது. நவக்கிரகங்களில் ராகு பகவான் ஆட்சி புரியும், செங்காணி, சங்காணி என்றெல்லாம் அழைக்கப்படும் குன்னத்தூர் திருநெல்வேலியில் இருந்து மேலவேங்கடபுரம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ள இத் திருத் தலத்தில் சுவாமி " கைலாச நாதர், கோத பரமேஸ்வரர் " எனவும், அம்பாள் " சிவகாமி அம்மையாகவும் " வழிபடப்படுகிறார்கள்.
கருவறையில் கோத பரமேஸ்வரர் மார்பில் சர்ப்பம் தரித்த நிலையில் அருளுகிறார். இந்த சிலை ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டது. கோயிலில் நில அளவு கோல் ஒன்று உள்ளது.
இது, நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை கையாள பயன்படுத்தப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. தடைபட்டு கொண்டே போகும் திருமணங்கள் இனிதே நடக்க, நல்ல மக்கட் பேறு அமைய, கால சர்ப்ப தோஷங்கள் நீங்க, உத்தியோக பிராப்தி கிட்ட, லாப ஸ்தானம் அடைய, ராகு தோஷ நிவர்த்தி பெற இத் தல வழிபாடு சிறந்தது.
குரு தலம்........
தலம்: முறப்பாடு அம்சம்: வியாழன் (குரு) நட்சத்திரம்: புனர்பூசம், விசாகம், பூரட்டாதி மூலவர்: ஸ்ரீகைலாச நாதர் அம்பாள்: ஸ்ரீசிவகாமி இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
நவ கைலாயங்களில் ஐந்தாவது தலமான " முறப்ப நாடு " குரு பகவான் ஆட்சி புரியும் தலமாகும். திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் சுமார் 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. நவ கைலாயங்களில் எந்த தலத்திற்க்கும் இல்லாத ஒரு சிறப்பாக, சிவ பெருமானே இங்கு "குரு பகவானாய்" அருள் புரிகிறார்.
தாமிரபரணி ஆறு, காசியைப் போன்றே, வடக்கில் இருந்து தெற்கு நோக்கி செல்வதால், இவ்விடம் " தட்சிண கங்கை " என்றானது. இங்கு நீராடுவது காசியில் நீராடுவதற்கு நிகர். இத் தலத்தில் ஒரே கல்லிலாலான தசாவதாரச் சிற்பம் ( மஹா விஷ்ணுவின் பத்து அவதாரங்களும் ) ஒன்றுள்ளது.
இத் தலத்தில் உள்ள சபரி தீர்த்தத்தில், தை மாத அமாவாசைகளிலும், மாதாந்திர கடைசி வெள்ளிக் கிழமைகளிலும் நீராடி கைலாச நாதரை வழிபட்டால் வாழ்வில் பேரின்பம் கிட்டும். மூலவர் கைலாசநாதராகவும் , அம்பாள் சிவகாமியாகவும் அருள் புரியும் தலமாகும்.
சனி தலம்.......
தலம்: ஸ்ரீவைகுண்டம் அம்சம்: சனி நட்சத்திரம்: பூசம், அனுஷம், உத்திரட்டாதி மூலவர்: ஸ்ரீ கைலாச நாதர் அம்பாள்: ஸ்ரீசிவகாமி இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் முப்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நவ கைலாயங்களில் சனீஸ்வர பகவான் ஆட்சி புரியும் ஆறாவது திருத் தலமாகும்.
இது, குமர குருபரர் அவதரித்த புண்ணிய பூமி. பூத நாதர் மற்றும் நவக்கிரக வழிபாடுகள் சிறப்பு பெற்ற இத் தலம், சனி திசை நடப்பவர்கள் அனைவரும் தவறாமல் வந்து வணங்க வேண்டிய தலமாகும்.
இத் தல அம்பிகை, சிவகாமி அம்பாளாகவும், இறைவன், சுயம்புவாய் ஸ்ரீ கைலாசநாதராகவும் வீற்றிருக்கின்றனர். ஸ்ரீ வைகுண்டம் நவ திருப்பதிகளில் ஒன்றாகவும், நவ கைலாயங்களில் ஒன்றாகவும் விளங்கும் சிறப்பு பெற்ற திருத் தலமாகும். குமர குருபரர் தன் திருவாய் மொழிந்த தலம் என்ற சிறப்பு பெற்றது. ஆறு கால பூஜையும் மிகச் சிறப்பாக நடைபெறும், சிவ பெருமான் சனி பகவானாய் விளங்கும் இத் திருத் தலத்தில் செய்யப்படும் சனி தோஷ பரிகார வழிபாடுகள், நடைபெறாமல் தடை பட்டுக் கொண்டே வரும் திருமணங்களை இனிதே நிறைவேற்றி தரும். இழந்த செல்வங்களை மீட்டுத் தரும்.
புதன் தலம்.........
தலம்: தென் திருப்பேரை அம்சம்: புதன் நட்சத்திரம்: ஆயில்யம், கேட்டை, ரேவதி மூலவர்: ஸ்ரீகைலாசநாதர் அம்பாள்: ஸ்ரீஅழகிய பொன்னம்மை இருப்பிடம்: ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
புதன் பகவான் ஆட்சி புரியும் " தென் திருப்பேரை " ஏழாவது தலமாகும். நவ கைலாயங்களில் ஒன்றான இத் தலம் நவ திருப்பதிகளில் ஒன்றாகவும் விளங்கும் இரட்டை சிறப்பு கொண்டது.
திருநெல்வேலியில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ளது. இறைவன் ஸ்ரீ கைலாசநாதர். இறைவி சிவகாமி என்ற அழகிய ஸ்ரீ பொன்னம்மாள். கருவறையில் மூலவர் சிறிய லிங்க வடிவில் தாமரை மலரில் காட்சி அருள்கிறார்.
சுவாமிக்கும் அம்பாளுக்கும் தனித் தனியே விமானங்கள் கொண்டிருக்கும் இத் தலம் அழகிய சிற்ப வேலைப்பாடுகளை கொண்டது. கோயில் சந்நதியில் கொம்பு முளைத்த தேங்காய் ஒன்று உள்ளது.
ஆங்கிலேயர் காலத்தில், கேப்டன் துரை என்ற கலெக்டர் " கோயில் தோப்பு இளநீருக்கு என்ன கொம்பா இருக்கிறது? " என்று கேட்டு இளநீர் பறிக்க, பறித்த இளநீர் மூன்று கொம்புகளுடன் இருந்ததாம். அந்த, இளநீர்தான் இன்றும் கோயிலில் தொங்க விடப்பட்டுள்ளது.
கேது தலம்.........
தலம்: ராஜபதி அம்சம்: கேது நட்சத்திரம்: அசுவதி, மகம், மூலம் மூலவர்: ஸ்ரீகைலாசநாதர் அம்பாள்: ஸ்ரீஅழகிய பொன்னம்மை என்ற சிவகாமி இருப்பிடம்: தென்திருப்பேரை கோவிலில் இருந்து அதே பாதையில் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
நவ கைலாயங்களில் எட்டாவது திருத் தலமாக விளங்குவது, கேது பகவான் அருளாட்சி புரியும் " ராஜ கேது ". எவ்வளவு சோதனைகள் வந்தாலும், நான் தர்மத்தின் பக்கமே நிற்பேன் என்று உள்ளோருக்கு கண்கண்ட தெய்வமாக விளங்குபவர் கேது பகவான். நவ கைலாயங்களில் மற்ற தலங்களை போல் இல்லாது, வெட்ட வெளியில் கூரையின்றி, வானமே கூரையாக, பூமியே கோவிலாக ஒரு கற்சிலை மட்டுமே கோயிலாக உள்ளது.
கோயில் இருந்த இடம் முழுவதும் இயற்கை சீற்றத்தால் அழிந்து விட்டது. சிவ பெருமான் இருந்த இடத்தில் , தற்பொழுது இருக்கும் ஒரு கல்லையே மூலவராக வழிபடுகின்றனர்.
கோயிலாக இல்லாவிட்டாலும், இத் தலத்தை வணங்கினால் கைலாச நாதனின் அருளாசி கிடைக்கும் என்பது நிச்சயம். இத் தலத்தை வணங்கினாலோ அல்லது இத் தல நந்தி பெருமான் உள்ள ஒட்டப்பிடரத்தில் நந்திக்கு அபிஷேகம் செய்தாலோ கால் நடைகளுக்கு நோய்கள் வருவதில்லை.
சுக்கிரன் தலம்........
தலம்: சேர்ந்த பூமங்கலம் அம்சம்: சுக்கிரன் நட்சத்திரம்: பரணி, பூராடம், பூரம் மூலவர்: ஸ்ரீகைலாசநாதர் அம்பாள்: ஸ்ரீசௌந்தர்யா நாயகி இருப்பிடம்: திருச்செந்தூரில் இருந்து புன்னைக்காயல் செல்லும் சாலையில் ஆத்தூரில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
நவக்கிரகங்களில் சுக்கிர பகவான் ஆட்சி புரியும் நவ கைலாய தலமாக விளங்குவது " சேர்ந்த பூ மங்களம் ". இத் தலத்தின் அருகில் தான் தாமிரபரணி ஆறு கடலில் சங்கமிக்கிறது. எத்தனையோ இயற்கை சீற்றங்களை இந்த ஊர் சந்தித்து இருந்தாலும், இத் திருக் கோயில் மட்டும் மிக கம்பீரமாக காட்சி அளிக்கிறது.
அகத்திய முனிவர் ஆற்றில் விட்ட மலர்களில் ஒன்பதாவது மலர் வந்து நின்ற இடம் இது. மற்ற தலங்களை போலவே இங்கு இறைவன் ஸ்ரீ கைலாச நாதராகவும், அம்மை சிவகாமி அம்பாளாகவும் அருளுகின்றனர்.
திருச் சுற்றில் தட்சிணா மூர்த்தி, கன்னி விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் , நவக்கிரகங்கள் மற்றும் சனீஸ்வரர் ஆகியோர் தனி சந்நதி கொண்டு அருள்பாளிக்கின்றனர். இறைவன் சந்நதி கிழக்கு நோக்கியும், அம்பாள் சந்நதி தெற்கு நோக்கியும் அமைந்துள்ள இத் திருத்தல வழிபாட்டினால் சுக்கிர யோகம் கிடைக்கும் என்பது சர்வ நிச்சயம்.
இந்த ஒன்பது கோவில்களையும் ஒரே நாளில் தரிசித்தால் கைலாயத்தை அடைந்த பலன் உண்டு என்பது சான்றோர் வாக்கு. இந்த ஒன்பது கோவில்களில் தரிசனம் செய்தால் நம் பாவங்கள் நீங்குவது மட்டுமின்றி புண்ணியமும் வந்து சேரும்.