சிவனுக்கும் நந்திக்கும் உள்ள தொடர்பு என்னைப் போன்ற மானிட பதர்களால் விவரிக்க முடியாத நிலை. கொஞ்சம் முயல்கிறேன். எம்பெருமான் சிவன் யோகத்தின் உச்சம். ஆதி குருவும் அவனே! எப்பொழுதும் சகஸ்ரார சக்ரத்தில் திளைத்திருப்பவன். அக்னி ஸ்வரூபம்.
அத்தகைய சிவனிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், தம்மிடம் பேசுவாரா? கடைகண் காட்டுவாரா? ஞானம் அருள்வாரா? என ஒரு கோரிக்கையோ, எதிர்பார்ப்போ இல்லாமல், ஒரு சேவகனாக, முதல் பக்தனாக, சிப்பந்தியாக எப்பொழுதும் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பவர் தான் நந்திகேஸ்வரர். என்ன கிடைக்கிறதோ அதுவே ப்ரஸாதம்! என்ற மன நிலை. அவ்வளவு எளிதில் வந்து விடாது. மாணவன் தயாராக இருக்கும் பொழுது குரு அவராகவே தம் கடாக்ஷத்தை மழையென பொழிவார். ஆதி சங்கரர் தம் சிஷ்யரான தோடகனுக்கு பொழிந்தாரே, அது போல. பத்ம பாதர் பெற்றாரே அது போல. சிவனின் மனசில் இருப்பவரல்ல நந்தி, சிவனின் மனசாகவே இருப்பவர்.
அன்னை உமையவளுக்கு கூட சிவனிடம் இல்லாத உரிமை நந்திக்கு உண்டு. ஏனெனில் நந்திக்கு தம் எஜமானரிடம் எந்தவிதமான எதிர்பார்ப்புகளும் இல்லை, ஏமாற்றங்களும் இல்லை.
பகவான் பேசுவதில்லை! நம் பக்தியும் குறைவதுமில்லை! இது நந்திக்கு மட்டுமே பொருந்தும் வரிகள்.
இத்தகைய நந்திக்கும் சிவனுக்கும் நடுவில் உமையே வராத போது நாமெல்லாம் எம்மாத்திரம்? தயவு செய்து அவர் காதில் எனக்கு அது வேண்டும், இது வேண்டும்! என்று இஸ்க் இஸ்கென்று கிசுகிசுக்காதீர்கள். அவர் எப்போதும் சிவ த்யானத்திலேயே இருப்பவர், சிவனின் கட்டளைக்கு மட்டுமே காத்திருக்கும் அணுக்கத்தொண்டர்.
ப்ரதோஷ காலத்தில் நீராடி, உணவு தவிர்த்து, மனமெல்லாம் சிவனிடம் லயித்து, சோம சுக்த பிரதக்ஷணம் என்று ஒரு முறையில் ப்ரதோஷ சிவனையும் நந்தியையும் சுற்றி வந்து ஒரு வருடம் வழிபட்டால் சீக்ரமே அட்லாண்டாவில் இருந்து கோராவுக்கு இந்த பதிலை எழுதலாம். :))
ப்ரதோஷ புண்ய காலத்தில் அதிகார நந்தியாக மாறி சிவனின் தாண்டவத்தை தம் இரு கொம்புகளுக்கு இடையில் தாங்கிக் கொள்வார். இப்படி சிறப்பு வாய்ந்த நந்தியையே ஒரு முறை, ஒரே ஒரு முறை, தம் பக்தன் நந்தனார் என்ற திரு நாளைப் போவார் என்ற நாயன்மாருக்காக
“சற்றே விலகி இரு பிள்ளாய்” என அன்பொழுக விண்ணப்பித்துக் கொண்டார் எம்பெருமான்.
அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்!
என் ப்ரதோஷ கால நினைவுகளை என்னுள் கிளப்பிய இந்த கேள்விக்கு கோடி வந்தனங்கள்!