மூலவர்: சொர்ணபுரீசுவரர், படிக்காசு அளித்த நாதர்
தாயார்: அழகாம்பிகை, சௌந்தர நாயகி
தல விருட்சம்: வில்வம்
தீர்த்தம்: அரிசிலாறு, அமிர்தபுஷ்கரிணி
இது அப்பர், சம்பந்தர், சுந்தரர் என மூவரின் தேவாரப் பாடல் பெற்ற தலம்.
இத்தல இறைவன் சொர்ணபுரீஸ்வரர், பொன்னை அள்ளித்தரும் வள்ளலாக விளங்குகிறார்.
அரிசில் கரைப்புத்தூரில், ஆதி சைவர் குலத்தில் எழுந்த அடியவர் ஒருவர், தினமும் ஆகம முறைப்படி சிவபெருமானுக்குப் பூஜை செய்து வந்தார். அக்காலத்தில் பஞ்சம் வந்து மக்கள் பசியால் மிகவும் துயரமுற்றனர். அடியாரும் பசியும், பட்டினியும் ஆட்கொள்ள மிகவும் மெலிவுற்றார். இருந்தும் ஈசன் பணியை இடையறாது செய்து வந்தார்.
நீர் கொண்டுவந்து சிவனை அபிஷேகம் செய்து மணமிக்க மலர்களால் அர்ச்சித்து, நைவேத்தியம் செய்து வழிபாடு நடத்திவந்தார். பசியால் அவரால் நடக்கவே முடியவில்லை. தள்ளாடித் தள்ளாடி தண்ணீர் குடத்தை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்து சிவலிங்கம் மீது முழுக்காட்டும் போது, கைகளில் வலு இல்லாமையால் குடத்தை சிவ சிரசின் மீது போட்டு விட்டு மயக்கமடைந்து விட்டார். பிறகு உணர்வு வந்து மெல்லக் கண் விழித்தபோது சிவன் தலையில் குடத்தைப் போட்டு விட்டதை எண்ணிக் கலங்கினார்.
கருணை கடலான பரமன், ‘அன்பனே! விரைவில் மழை பொழிந்து நாடு செழிப்புறும், அதுவரை உமது பஞ்சம் தீர, நாள் தோறும் இங்கே ஒரு காசு வைப்போம். அதைக் கொண்டு ஜீவனம் செய்து கொள்’ என்றார். சொன்னது போலவே இறைவனது பீடத்தின் கீழ் ஒரு பொற்காசு இருக்கக் கண்டு, அதனால் தானும் பசிதீர்ந்து, மற்றவர்களுக்கும் உதவி செய்து வந்தார். சிவதொண்டையும் விடாமல் செய்து வந்தார்.
பல ஆண்டுகள் வாழ்ந்து பூஜைகள் செய்து அங்கேயே முக்தி அடைந்தார். *அந்த அடியவரே அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான "புகழ்த்துணை நாயனார்."
சிவலிங்கத்தின் உச்சியில் குடம் விழுந்த தழும்பு காணப்படுகிறது.
புகழ்த்துணை நாயனாரின் தலைமுறையினரே தற்போதும் இக்கோயிலில் பூஜை செய்கின்றனர். கோயிலில் புகழ்த்துணை நாயனார் மற்றும் அவரது மனைவியின் சந்நிதி உள்ளது.
பக்தனின் பசியை நீக்க படிக்காசு வழங்கிய சொர்ணபுரீஸ்வரர், தன்னை நம்பி வரும் அன்பர்களின் வறுமையைப் போக்கி வளமையைக் கூட்டுவார் என்பது திண்ணம்.
அமைவிடம்: மயிலாடுதுறையில் இருந்து பொறையாறு செல்லும் பேருந்துப் பாதையில் 10 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து நகரப் பேருந்து வசதி உண்டு.
சொர்ணபுரீஸ்வரர் திருக்கோவில், அரிசிற்கரைபுத்தூர்
தகவல் பலகை சிவஸ்தலம் பெயர் அரிசிற்கரைபுத்தூர் (தற்போது அழகாபுத்தூர் என்று வழங்கப்படுகிறது) இறைவன் பெயர் சொர்ணபுரீஸ்வரர், படிக்காசு அளித்தநாதர் இறைவி பெயர் அழகாம்பிகை பதிகம் திருநாவுக்கரசர் - 1 திருஞானசம்பந்தர் - 1 சுந்தரர் - 1
எப்படிப் போவது கும்பகோணத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவில் திருநறையூர் (நாச்சியார்கோவில்) போகும் வழியில் இத்தலம் இருக்கிறது. திருநறையூருக்கு முன்னாலேயே அழகாபுத்தூர் ஊரின் தொடக்கத்திலேயே கோவில் பேருந்துச் சாலையிலிருந்து சற்றுத் தள்ளி அருகிலேயே உள்ளது.