தாயுமானவர் சித்தர் வரலாறு!

By News Room

17ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் திருமறைக்காடு என்று அழைக்கப்படும் வேதாரண்யத்தில் சைவ வேளாளர் குலத்தில் கேடிலியப்ப பிள்ளைக்கும், கெஜவல்லி அம்மாளுக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார்.

குழந்தைப் பருவத்திலேயே திருச்சி மலைக்கோட்டையில் உள்ள தாயுமான சுவாமியான சிவபெருமான் மீது அதிகப் பற்றுக் கொண்டிருந்தார். ஒருநாள்... வழக்கம்போல் குழந்தை தாயுமானவர் தியானம் செய்ய உட்கார்ந்ததும், அவர் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வடிந்த வண்ணம் இருந்தது. இரவு நீண்ட நேரமாயிற்று.

அப்போதும் குழந்தை வீடு திரும்பவில்லை. தந்தை குழந்தையைத் தேடிக்கொண்டு கோயிலுக்கு வந்துவிட்டார். தெய்வ நினைப்பில் தன்னை மறந்திருந்த பிள்ளையின் கையைப் பிடித்து எவ்வளவு நேரம்தான் இப்படிக் கோயிலிலேயே இருப்பாய்? வா வீட்டுக்கு! என்று சொல்லி அழைத்துப் போனார்.

தாயுமானவரின் தந்தையான கேடிலியப்பப்பிள்ளை, அப்போது அரசாண்டு வந்த விஜயரங்க சொக்கநாதன் என்ற அரசரிடம் பெருங்கணக்கராக வேலை செய்து வந்தார். அவரது மறைவுக்குப் பின் தாயுமானவர் சில காலம் பெருங்கணக்கராகப் பதவி வகித்தார். அவருடைய ஞானத் தெளிவு. பொறுப்பு, நேர்மை, ஆகியவை மன்னரைக் கவர்ந்தன. அதனால் மனம் மகிழ்ந்த மன்னர்.

விலை உயர்ந்த காஷ்மீர் சால்வை ஒன்றைத் தாயுமானவருக்குப் பரிசாக வழங்கினார். அப்போது குளிர்காலம், மன்னரிடம் இருந்து சால்வையைப் பெற்ற தாயுமானவர். அரண்மனையை விட்டு வெளியே வந்தார். வழியில் வயதான பாட்டி ஒருத்தி குளிரில் நடுங்கியபடி எதிரில் வந்தாள். அவளைப் பார்த்ததும் தாயுமானவர். அம்மா! இந்தக் காஷ்மீர் சால்வை, இப்போது உங்களுக்குத்தான் அவசரத் தேவை.

இந்தாருங்கள்! என்று சால்வையைப் பாட்டியிடம் கொடுத்துவிட்டுப் போய்விட்டார். தாயுமானவர் அவ்வாறு செய்ததை அறிந்த மன்னர் இந்தத் தாயுமானவர் நம்மை அவமானப்படுத்திவிட்டார் என்று நினைத்தார். அடுத்த முறை தாயுமானவரைப் பார்த்ததும் நான் உங்களுக்குத் தந்த விலை உயர்ந்த சால்வையை ஒரு பிச்சைக்காரக் கிழவிக்குக் கொடுத்துவிட்டீர்களே.... அது ஏன்? எனக் கேட்டார்.

அதற்குத் தாயுமானவர் மன்னா! என்னைக் காட்டிலும் குளிரால் நடுங்கிக்கொண்டு வந்த அன்னை அகிலாண்டேஸ்வரிக்கு இந்தச் சால்வை அவசியம் தேவைப்பட்டது. அதனால்தான் அதை அவளுக்குத் தந்தேன் என்றார். துயரத்தில் துடிக்கும் ஒரு ஜீவனை அம்பிகையாகவே கருதி, அந்தத் துயரத்தைத் துடைத்த தாயுமானவரின் மனப்பக்குவத்தை எண்ணி வியந்தார் மன்னர்.

இதேபோல் மற்றொரு சமயம் முக்கியமான ஆவணம் ஒன்றை அரசவையில் இவர் கையால் கசக்கிப் போட, இவர் தன்னிலை மறந்து இறைவியுடன் ஒன்றிப்போய் இந்தக் காரியம் செய்வதை அறியாத சபையினர் அரசனுக்கும், அரசிக்கும் அவமரியாதை என அவதூறு பேசினார்கள். ஆனால் அதே சமயம் திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி கோயிலில், அம்பாளின் ஆடையில் நெருப்புப் பற்றியதைச் சிவாசாரியார்கள் கவனிப்பதற்குள் தாயுமானவர் நுழைந்து தம் கையால் கசக்கி அந்த நெருப்பை அணைத்ததைச் சிவாசாரியார்கள் கண்டனர்.

அவர்கள் உடனே ஓடோடி வந்து நடந்ததைக் கூற, தாயுமானவரின் சக்தியைப் புரிந்து கொண்டு அனைவரும் வியப்படைந்தார்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டிருந்த தாயுமானவர் இல்லற வாழ்க்கையை அறவே வெறுத்தார். இருப்பினும் தமையனின் வற்புறுத்தல் காரணமாக மட்டுவார்குழலி என்னும் குணவதியை மணந்து கனகசபாபதி எனும் ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தார்.

சிறிது காலத்திற்கு பின் துணைவியார் இறந்து போகவே அதற்கு பின் இல்லறவாழ்வை வெறுத்து துறவறம் பூண்டார். திருமூலர் மரபில் வந்த, திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த மவுன குரு என்பவரிடம் உபதேசம் பெற்றார். வடமொழி, தமிழ் மொழி ஆகிய இருமொழிகளிலும் புலமை பெற்றவர் தாயுமானவர். இவரின் அனுபவங்கள் அப்படியே பாடல்களாக வெளிப்பட்டன.

56 தலைப்புகளில் 1, 452 பாடல்கள் பாடியுள்ளார். தம் எளிய பாடல்கள் மூலம் தமிழ்ச்சமயக் கவிதைக்கு ஒரு தூணாக இருந்தவர்; வள்ளலாரும், பாரதியாரும் இத்தகைய எளிய கவிதைகள் பாட இவர் முன்னோடியாகத் திகழ்ந்தார் என்றும் சொல்லுவதுண்டு. தவநெறியில் சிறந்து விளங்கிய தாயுமானவர், பல்வேறு திருத்தலங்களுக்கும் சென்று இறைவனைப் பாடி வழிபட்டு இறுதியில் ராமநாதபுரம் மாவட்டம் லட்சுமிபுரம் என்னும் ஊரில் சமாதி அடைந்தார்.  

திருச்சிற்றம்பலம்

.
மேலும்