தீராத நோய்களை  தீர்க்கும் திருவாசி மாற்றுரை வரதீஸ்வரர் கோயில்!

By nandha

திருச்சியில் இருந்து முசிறி செல்லும் சாலையில் சுமார் 11 கி.மி. தொலைவில் திருவாசி என்கிற பேருந்து நிறுத்தம் வரும்.   அங்கிருந்து ஊருக்குள் செல்லும் ஒரு கிளைச் சாலையில் சுமார் 1/2 கி.மி. செல்ல இந்த சிவஸ்தலம் ஆலயத்தை அடையலாம்.

இதனுடைய ஆதி  பெயர் திருப்பாச்சிலாச்சிராமம் பின்னர் மருவி திருவாசி ஆகிற்று. வன்னி மரம் சூழ்ந்த வனத்தில்  உள்ளவராதலின் 'சமீவனேஸ்வரர் ' என்று இங்குள்ள இறைவன் அழைக்கப்படுகிறார்.  இது  தேவார பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும்.  இத்தலத்தில் இறைவன் மாற்றுரைவரதீஸ்வரர் என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ளார். இறைவன் இந்த பெயர் பெறக் காரணமாக உள்ள வரலாறு சுவையானது.

இத்தலம் வந்த சுந்தரர், சிவனிடம் பொன் கேட்டார். அவரை சோதிப்பதற்காக சிவன் பொன் தரவில்லை. கோபம் கொண்ட சுந்தரர், "சிவன் இருக்கிறாரா, இல்லையா" என்ற அர்த்தத்தில் இகழ்ந்து வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும் என்று தோடங்கும் பதிகம் பாடினார். 

பதிகத்தின் கடைசி பாடலில் "திரு நாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் இவரைப் பேசிய பேச்சுக்கள், உண்மையில் ஏசினவும் அல்ல, இகழ்ந்தனவும் அல்ல, ஆதலின், அவைகளை இவர் பொறுத்துக் கொள்ளுதல் வேண்டும், அது செய்யாராயினும், அடியேனது பிழைகளைப் பொறுத்து ஆளும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை" என்று குறிப்பிடுகிறார். 

சிறிதுநேரம் கழித்து சுந்தரருக்கு காட்சி தந்த சிவன், பொன் முடிப்பு தரவே, அந்தப் பொன் தரமானது தானா என்ற சந்தேகம் சுந்தரருக்கு வந்தது. 

அப்போது அங்கு வந்த இரண்டு வணிகர்கள் தங்கத்தை சோதித்துத் தருவதாகச் சொல்லி வாங்கிக் கொண்டனர். ஒருவர் பொன்னை உரைத்துப் (சோதித்து) பார்த்துவிட்டு, பொன் தரமானதுதான் என்றார்.

உடன் வந்தவரும் அதை ஆமோதித்தார். பின் இருவரும் மறைந்து விட்டனர். சுந்தரர் வியந்து நின்றபோது, சிவனே வணிகர் வடிவில் வந்து உரைத்து காட்டியதையும், மகாவிஷ்ணு அவருடன் வந்ததையும் உணர்த்தினார்.

தங்கத்தை உரைத்துக் காட்டியதால் சிவனுக்கு "மாற்றுரைவரதர்' என்ற பெயர் ஏற்பட்டது.

அன்னமா பொய்கையை உருவாக்க கிளி தனது அலகால் தோண்டி உருவாக்கிய குளம் பாலாம்பிகை சன்னிதானத்தின் முன் உள்ளது. இத்தலத்தில் அம்மன் சன்னதி மேற்கு நோக்கி சிவபெருமானை நோக்கி உள்ளது.   திருமணம் ஆகாதவர்கள் இவ்வம்மையாரை தொடர்ந்து வழிபட்டு வந்தால் வரன் சிறப்பாக அமையும்  என்பது பக்தர்கள் கருத்து. 

தொடர்ந்து 48 நாட்கள் இத்தலத்தில் நடராஜருக்கு அர்ச்சனை  செய்வித்தால் தீராத நோய்கள், வயிற்றுவலி, பித்தம், வாதம் போன்ற நோய்கள் நீங்கப் பெறுவர்  என்பது ஐதீகம். 

மாற்றுரைவரதீஸ்வரை ஒவ்வொரு திங்கட்கிழமையும் இலுப்பை நெய் தீபம்  இட்டு வழிபட்டால் பொருளாதார சுபிட்சம் ஏற்படும் என்பது திண்ணம்.

  இக்கோயிலுக்கு முதலாம்  இராசராசன், சுந்தரபாண்டியன், முதற் குலோத்துங்கன், கிருஷ்ணதேவராயர் ஆகியோர்  திருப்பணிகள் செய்துள்ளது தெரியவருகிறது.  

கி.பி. 1253-ல் சமயபுரத்தைத் தலைநகராகக்  கொண்டு ஆண்ட ஹொய்சளமன்னனான, வீரசோமேஸ்வரன் காலத்தில் இக்கோயிலுக்கு பதினாயிரம் கலம் நெல் கிடைத்து வந்ததாக கல்வெட்டு மூலம் அறிகிறோம்.  

முதற் கோபுரத்திற்கும் இரண்டாம் பிராகாரத்திற்கும் இடையிலுள்ள மண்டபம்  "ஆவுடையாப்பிள்ளை மண்டபம் " எனப்படுகிறது.  இம்மண்டபத்தூணில் சம்பந்தர், கொல்லி  மழவன், புதல்வியின் நோயைத் தீர்த்த சிற்பங்கள் அழகாக உள்ளன.  சுவாமி சந்நிதியில்  சுந்தரருக்கு பொற்கிழி தந்த ஸ்தபன மண்டபம் உள்ளது. இவ்விடத்தைக் கல்வெட்டு "கிழி கொடுத்தருளிய திருவாசல்" என்ற பெயரால் குறிக்கின்றது.

இப்பகுதியை ஆண்டு வந்த கொல்லிமழவனின் மகளுக்கு முயலகன் எனும் தீராத நோயிருந்தது.

அச்சமயத்தில் திருஞானசம்பந்தர் பல தலங்களை தரிசனம் செய்து கொண்டு மழநாட்டைச் சார்ந்த திருப்பாச்சிலாச்சிராமம் தலத்திற்கு எழுந்தருளினார். இதையறிந்த மன்னன்அனபுடன் சம்பந்தரை வரவேற்றுத் தன் மகளின் நோயை நீக்கியருள வேண்டினான்., 

கோயிலுக்கு வந்து அவரிடம் தன் மகளின் நிலையைக் கூறினான். அருள் உள்ளம் கொண்ட சம்பந்தர் சிவனை வேண்டி துணிவளர் திங்கள் துளங்கி விளங்கஎனும் பதிகம் பாடி இறைவனை வணங்க நோய் நீங்கி மன்னன் மகள் குணமடைந்தாள்.

சிவபெருமான் அவளது நோயை ஒரு பாம்பாக மாற்றி, அதன் மீது நின்று ஆடினார். இதன் அடிப்படையில் இங்குள்ள நடராஜர் காலுக்கு கீழே முயலகன் உருவம் இல்லாமை அறியத்தக்கது. திருவடியின்கீழ் அதற்குப்பதில் ஒரு உள்ள சர்ப்பத்தின் மீது நடனமாடுகின்றார்.  நரம்புத் தளர்ச்சி, வாதநோய், வலிப்பு நோய் முதலியன இத்தல இறைவனை வழிபட குணமாகும். 

ராஜ கோபுரத்தின் கீழே அதிகார நந்தி மனைவியுடன் நின்ற கோலத்தில் இருக்கிறார். இங்கு நவகிரகத்தில் சூரியன் தன் மனைவி உஷா, பிரத்யூஷாவுடன் இருக்க மற்ற கிரகங்கள் அனைத்தும் அவரை பார்த்தப்படி இருக்கிறது.

திருவாசியில் வசித்த கமலன் என்னும் வணிகனுக்கு மகளாகப் பிறந்த அம்பிகை, சிவனை வேண்டி தவமிருந்து, அவரை மணந்தாள். 

இவள் இத்தலத்தில் பாலாம்பிகை என்ற பெயரில் எழுந்தருளியுள்ளாள். அர்த்தஜாமத்தில் இவளுக்கே முதல் பூஜை நடக்கும். 

அம்பாள் சன்னதி எதிரே செல்வ விநாயகர் இருக்கிறார். அருகில் அன்னமாம்பொய்கை தீர்த்தம் இருக்கிறது. அம்பாள் சன்னதி முகப்பில் இரண்டு துவாரபாலகியர் உள்ளனர். 

திருமணமாகாத பெண்கள் நல்ல வரன் அமையவும், திருமணத்தடை உள்ளவர்கள் தடை நீங்கவும் இவர்களுக்கு மஞ்சள் கயிறு கட்டி பிரார்த்திக்கின்றனர்.

குழந்தையில்லாத பெண்களும் இவர்கள் முன் தொட்டில் கட்டுகின்றனர். துவாரபாலகியர் மூலமாக பக்தர்களின் கோரிக்கைகளை அம்பாள் ஏற்றுக் கொள்வதாக ஐதீகம். 

பிரகாரத்தின் முதல் சுற்றில் நால்வர் அறுபத்துமூவர், ஏழுதேவியர், உள்ளனர். பிரகாரத்தின் பின் பரம் நவகண்ட வீரர்கள், பல்லவர்கால முருகன் திருமால், விஷ்ணு துர்க்கை, சூரியன் இன்னும் சில லிங்க பாணங்கள் உள்ளன. விநாயகர் முருகன் ஆகியோருக்கு விமானத்துடன் கூடிய சன்னதிகள் உள்ளன.

கஜலட்சுமி சன்னதியும் உள்ளது. 

கருவறை கோட்டத்தில் தென்முகன், அர்த்தநாரி, பிரமன் துர்க்கை உள்ளனர். 

இறைவன் கருவறை வாயில் அருகில் தெற்கு நோக்கி முயலகன் இல்லாமல் பாம்பினை காலில் அணிந்தவாறு நடராஜர் உள்ளார். மேலும் இவர் தனது விரித்த சடையினை கொண்டையாக முடிந்துள்ளார். 

அருகில் கற்சிலையாக தெற்கு நோக்கி பைரவர் உள்ளார். தென்கிழக்கு மூலையில் சூரியன் சந்திரன் உள்ளனர். மேலும் சிற்ப நுணுக்க வேலைப்பாடுகளுக்கு பெயர் போன கருங்கல் பந்து தூண் உள்ளது.

.திருவாசி திருத்தலத்தில்தான் இப்பூவுலகில் முதன் முதலில் சகஸ்ர லிங்கம் தோன்றியது. சகஸ்ரம் என்றால் ஆயிரம் என்று பொருள்.

சகஸ்ர லிங்கம் என்றால் ஆயிரம் லிங்க மூர்த்திகள் ஒரு சேர, ஒன்றாக இணைந்து அருள்பாலிக்கும் இறை மூர்த்தி என்று பொருள். 

உண்மையில் முதன் முதலில் தோன்றிய சகஸ்ர லிங்க மூர்த்தி என்பதால் இங்குள்ள சகஸ்ர லிங்க மூர்த்தியின் ஒவ்வொரு முகமுமே ஒரு சகஸ்ர லிங்கத்தைத் தோற்றுவிக்க வல்லது என்றால் இந்த இறை மூர்த்தியின் மகத்துவத்தை மனித வார்த்தைகளால் வர்ணிக்க இயலுமா?

.
மேலும்