Breaking News :

Monday, December 30
.

மணவாழ்க்கைக்கான 10 பொருத்தங்கள் என்னென்ன?


திருமணப் பேச்சை ஒரு வீட்டில் ஆரம்பித்து விட்டால் முதலில் பார்ப்பது ஜாதகத்தை தான். அதிலும், 10 பொருத்தத்தில் எத்தனை பொருத்தம் இருக்கிறது என்று தான் முதலில் பார்ப்பார்கள். ஜோதிடர் வரன்கள் இருவரது ஜாதகத்தை கணித்து உத்தமம் என்று சொன்னால் தான் மேற்கொண்டு பேசுவார்கள். இல்லையென்றால், அடுத்த ஜாதகத்திற்கு தாவி விடுவார்கள்.

அதென்ன பத்து பொருத்தம்?

ஜோதிடர் ஏதோ சொல்கிறார், நாங்களும் கேட்கிறோம் என்று தான் இந்த கேள்விக்கு நம்மில் பலர் பதில் சொல்வார்கள்.
நீங்களும் அந்த பத்து பொருத்தம் என்னவென்று அறிய வேண்டாமா?

1. தினப் பொருத்தம் : இதை நட்சத்திர பொருத்தம் என்றும் சொல்வார்கள். ஆண், பெண் இருவரது ஆயுள் மற்றும் ஆரோக்கியம் பற்றி தெரிந்து கொள்ள இந்த பொருத்தம் பார்க்கப்படுகிறது.

2. கணப் பொருத்தம் : இது தான் குணத்தை பற்றி தெரிந்து கொள்ளக்கூடிய பொருத்தம். மனைவியாக வரப்போகிறவள், கணவனாக வரப்போகிறவன் எத்தகைய குணத்தை பெற்றிருப்பான் என்பதை இந்த பொருத்தத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

3. மகேந்திரப் பொருத்தம் : திருமணம் செய்யப்போகும் ஆணுக்கும், பெண்ணுக்கும் இந்த பொருத்தம் இருந்தால் தான் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதனால் இந்த பொருத்தம் ரொம்பவே முக்கியம்.

4. ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் : மணப்பெண்ணின் ஆயுள் கெட்டியாகவும் உடல்நலம் மிக்கவராகவும் இருப்பார். இந்த பொருத்தம் இருந்தால் தான், திருமணம் செய்பவர்கள் வாழ்வில் சகல செல்வமும் கொட்டும். அதனால், இதுவும் முக்கியம் தான்.

5. யோனிப் பொருத்தம் : இது மிக, மிக முக்கியமான பொருத்தம். கணவன்-மனைவி இருவரும் தாம்பத்திய வாழ்க்கையில் எந்த அளவுக்கு திருப்தியாக இருப்பார்கள் என்பதை சொல்லக்கூடியது இது. அதனால், இந்த பொருத்தம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

6. ராசிப் பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தியாகும். அதாவது, வாழையடி வாழையாக குடும்பம் தழைக்கும்.

7. ராசி அதிபதி பொருத்தம் : குடும்பம் சுபிட்சமாக-சந்தோஷமாக இருக்குமா என்பது தெரிவிக்கக்கூடியது இந்த பொருத்தம்.

8. வசிய பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவன்-மனைவிக்குள் ஒரு ஈர்ப்பு ஏற்படும். இல்லையென்றால் சண்டைக்கோழி தான்.

9. ரஜ்ஜூப் பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவனுக்கு ஆயுள் பலம் உண்டாகும். பெண்ணின் மாங்கல்ய பாக்கியத்தை உறுதி செய்யும் இந்த பொருத்தம் இருப்பது மிக மிக அவசியம்.

10. வேதைப் பொருத்தம் : திருமணம் செய்யப்போகும் தம்பதியர் வாழ்வில் சுக துக்கங்கள் எந்த அளவில் இருக்கும் என்பதை கணிக்கக்கூடியது இந்த பொருத்தம். இந்த பொருத்தம் ஓ.கே. என்றால் தான், பின்னாளில் வாழ்வில் பிரச்சினைகள் அதிகம் இருக்காது.

இந்த பத்து பொருத்தங்கள் எல்லோருக்கும் வாய்ப்பது மிகவும் கடினம். இவற்றில் தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜூ ஆகிய 5 பொருத்தங்கள் தான் மிகவும் முக்கியமானவை என்கிறார்கள் ஜோதிட வல்லுனர்கள்.

பத்து பொருத்தம் பற்றி ஜோதிடம் இப்படிச் சொன்னாலும், அதே ஜோதிடம் இன்னொரு பொருத்தத்தையும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று சொல்கிறது. அது தான் மனப் பொருத்தம். மனப் பொருத்தம் இருந்தால் மாங்கல்ய பொருத்தம் உண்டு என்பது ஜோதிட கருத்து. இதை பலர் கண்டு கொள்வதே இல்லை.

பத்து பொருத்தங்களை பார்க்கும் நாம் மனப் பொருத்தத்தையும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். அதாவது, திருமணம் செய்யப்போகும் பெண்ணுக்கு ஆணை பிடித்திருக்கிறதா என்றும், ஆணுக்கு பெண்ணை பிடித்திருக்கிறதா என்றும் கேட்டு உறுதி செய்வது அவசியம். அதன் பின்னர் தான் திருமணத்தை நிச்சயம் செய்ய வேண்டும். இதை ஜோதிட சாஸ்திரமே வலியுறுத்துகிறது.

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.