Breaking News :

Friday, April 04
.

ஆகாஷ் ஜெகன்நாத் நடிக்கும் 'தல்வார்'!


பிளாக்பஸ்டர் கமர்ஷியல் திரைப்படங்களை இயக்கி நாடு முழுக்க பிரபல இயக்குநராக அறியப்படுபவர் இயக்குனர் பூரி ஜெகன்நாத். இவரது மகன் ஆகாஷ் ஜெகன்நாத் கடந்த சில ஆண்டுகளில் திறமை மிக்க நடிகராக உருவெடுத்திருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக பயணத்தை தொடங்கிய ஆகாஷ் ஜெகன்நாத் ஏராளமான திரைப்படங்களில் நடித்த பிறகு கதாநாயகனாக அறிமுகமானார்.

இவர் நடிப்பில் வெளியான பல்வேறு திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்ற நிலையில், ஆகாஷ் ஜெகன்நாத் நடித்துள்ள அடுத்த படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. 'தல்வார்' என்ற தலைப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படம் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இ.எல்.வி. குழும நிறுவனங்கள் மற்றும் வார்னிக் ஸ்டூடியோஸ் நிறுவனர் டாக்டர் பாஸ்கர் இ.எல்.வி. இந்தப் படத்தை தயாரித்துள்ளார். காசி பரசுராம் இப்படத்தை இயக்கியுள்ளார்.

சமீபத்தில் இதன் ஆடியோ கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டது. இந்த கிளிம்ப்ஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதோடு, படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. மிக பிரமாண்டமாக உருவாகி இருக்கும் 'தல்வார்' அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது.

தல்வார் திரைப்படத்தை பான்-இந்தியன் படமாக வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு பணிகள் வருகிற ஜூன் மாதம் நிறைவுபெற இருக்கிறது. இதைத் தொடர்ந்து இந்தப் படம் வருகிற செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

பல்வேறு பகுதிகளில் ஏராளமான ஆக்ஷன் காட்சிகளை படமாக்க வேண்டியிருப்பதால், படக்குழு இதனை எழுதுவதற்கும் படப்பிடிப்புக்கும் அதிக நேரம் எடுத்துக் கொண்டுள்ளது. ஆகாஷ் ஜெகன்நாத் இந்தப் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், பிரகாஷ் ராஜ், பூரி ஜெகன்நாத், அனசுயா பரத்வாஜ், ஷின் டாம் சாக்கோ, அஜய் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், வட இந்திய, பாலிவுட் திரையுலகை சேர்ந்த சில நடிகர்களும் இந்தப் படத்தில் பணியாற்றியுள்ளனர்.

இந்தப் படம் ரசிகர்களுக்கு தலைசிறந்த சினிமா அனுபவத்தை வழங்கும் நோக்கில் இயக்குனர் காசி பரசுராம் இயக்கியுள்ளார் என்று வார்னிக் ஸ்டூடியோஸ்-இன் தயாரிப்பு பிரிவு தலைவர் ஜானி பாஷா தெரிவித்துள்ளார். இந்தப் படத்திற்கு கேசவ கிரண் இசையமைக்கிறார். சண்டை காட்சிகளை தினேஷ் காசி மேற்கொள்ள, ஒளிப்பதிவு பணிகளை திரிலோக் சித்து மேற்கொண்டுள்ளார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடா மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாக்கப்பட்டு வருகிறது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.