Breaking News :

Sunday, February 23
.

நடிகர் மாதவன் நடிக்கும் ‘ஜி.டி. நாயுடு- தி எடிசன் ஆஃப் இந்தியா’!


நம் நாட்டின் பொக்கிஷங்களாகக் கருதப்படும் பல மேதைகளின் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் ரசிகர்களிடம் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பல்வேறு துறைகளில் இந்தியா இன்று சிறந்து விளங்குவதற்கு அளப்பறிய பங்களித்த பல மேதைகளைப் பற்றி, இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் ஆகச்சிறந்த வழியாகவும் இந்த பயோபிக் படங்கள் இருக்கின்றன. கிருஷ்ணகுமார் ராமகுமார் எழுதி இயக்கும், ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘ஜி.டி. நாயுடு- தி எடிசன் ஆஃப் இந்தியா’ படத்தில் நடிகர் மாதவன் ஜி.டி. நாயுடுவாக நடிக்க இருக்கிறார்.

கடந்த 2022ல் வெளியான தேசிய விருது பெற்ற ’ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ படத்தினை தொடர்ந்து, வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் மீண்டும் இணைகின்றன. கேன்ஸ் திரைப்பட விழாவில் ’ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ படத்தின் ப்ரீமியரின் போது அங்கு படம் பார்த்த அனைவரும் எழுந்து நின்று பாராட்டினர். இதுமட்டுமல்லாது, வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் பாராட்டுகளைப் பெற்றது. இந்த வெற்றிதான் ‘ராக்கெட்ரி’ படக்கூட்டணி மீண்டும் இணைய காரணமாக அமைந்தது.

ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்காமல் நடிகர் மாதவன் தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' மற்றும் அவரது சமீபத்திய ரிலீஸான ‘சைத்தான்’ படத்தின் வித்தியாசமான கதாபாத்திரங்கள் ரசிகர்களைக் கவர்ந்தது. இப்போது, மாதவன் மற்றொரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க  உள்ளார். 'இந்தியாவின் எடிசன்' மற்றும் 'கோயம்புத்தூரின் வெல்த் கிரியேட்டர்’ என்று அழைக்கப்படும் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க உள்ளார்.

ஜி.டி. நாயுடுவின் பிறந்த இடமான கோயம்புத்தூரில் இந்த மாதம் படப்பிடிப்புத் தொடங்குகிறது. அவரது வாழ்க்கை வரலாற்றை உண்மைக்கு நெருக்கமாக படமாக்கும் விதமாக ரியல் லொகேஷனில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் சார்பில் வர்கீஸ் மூலன், விஜய் மூலன் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் சார்பில் மாதவன் மற்றும் சரிதா மாதவன் ஆகியோர் தயாரிக்கின்றனர். படத்தின் ஒளிப்பதிவாளர் மற்றும் கிரியேட்டிவ் புரொடியூசராக அரவிந்த் கமலநாதன் பணியாற்றுகிறார்.

பட டைட்டில் பிப்ரவரி 18 ஆம் தேதி வெளியிடப்படும். படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் வரும் நாட்களில் அறிவிக்கப்படுவார்கள்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.