இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் திரைப் பயணத்தில் நடிகை சரிதா எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறாரோ அதே போல் கே.பாலச்சந்தர் இயக்கிய சீரியல்களில் ஆஸ்தான கதாநாயகியாக வலம்வந்தவர்தான் நடிகை கீதா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதன் முதலில் ஹீரோவாக அறிமுகமான பைரவி திரைப்படம்தான் நடிகை கீதாவுக்கும் முதல் படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னடத்தில் பிஸியான நடிகையானார் கீதா. மேலும் மலையாளம் மற்றும் இந்தியில் அதிக படங்கள் நடித்துள்ளார்.
அமைதியான மென்மையான நடிப்பும், சாந்தமான முகமும் கொண்ட கீதாவுக்கு அமைந்தது என்னவோ மென்மையான கதாபாத்திரங்களே. இவரின் இந்த மென்மையான நடிப்பு இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தருக்குப் பிடித்துப் போக தனது படங்களில் தொடர்ந்து நடிக்க வைத்தார். அவர் இயக்கிய நினைத்தாலே இனிக்கும், கல்கி, புதுப்புது அர்த்தங்கள், அழகன் ஆகிய படங்களில் இவரின் நடிப்பு பேசப்பட்டது.
ஹீரோயினாக நடித்த கல்கி பின்னர் குணச்சித்திர நடிகையாகவும் சினிமாவில் ஜொலித்தார். நடிகை லட்சுமி எப்படி எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பான தன் நடிப்பினை வெளிப்படுத்துவாரோ அதேபோல் கீதாவும் நடிப்பில் சிறந்து விளங்கி வருகிறார்.
1997-ல் திருமணம் நடைபெற்ற பிறகு சில காலம் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்தவர் பின்னர் 2002 முதல் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். அழகிய தமிழ்மகன், சந்தோஷ் சுப்ரமணியம், சிவகாசி, உனக்கும் எனக்கும் போன்ற படங்களில் அப்போதைய இளம் நடிகர்களின் அம்மா கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நடிகையாக விளங்கினார். நடிகை சரண்யா, ஊர்வசி ஆகியோர் எப்படி அம்மாவாக அடுத்த ரவுண்டில் கலக்கிக் கொண்டிருக்கிறார்களோ அதேபோல் கீதாவும் அம்மா கதாபாத்திரங்களில் ஜொலித்து வருகிறார்.
மேலும் சினிமா மட்டுமல்லாது தொலைக்காட்சித் தொடர்களிலும் இவரது பங்கு அதிகம். குறிப்பாக பாலச்சந்தரின் மின்பிம்பங்கள் நிறுவனத்தின் மூலம் கையளவு மனசு, கடலளவு நேசம், காதல் பகடை, அண்ணி ஆகிய தொடர்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. மேலும் சிறந்த நடிகைக்கான பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார் கீதா.
நன்றி: தேன்மொழி