வறுமையான குடும்பத்தில் பிறந்து, வயிற்றுப்பாட்டிற்காக நாடகங்களில் நடித்து, தற்செயலாக திரையுலகில் நுழைந்து, தமிழ்த்திரையுலகில் முன்னணி நடிகையான கே.ஆர்.விஜயா செய்துள்ள சாதனைகளை, இதர தமிழ்நடிகைகளால் இன்றளவும் முறியடிக்க இயலவில்லை.
1.தமிழ்ப்பட நடிகைகளிலேயே, கே.ஆர்.விஜயாதான் அதிக படங்களில் நடித்துள்ளார். தவிர, கதாநாயகியாகவே அதிக படங்களில் நடித்துள்ள நடிகையும் கே.ஆர். விஜயாதான்.
2.திருமணத்திற்குப் பிறகும், மவுசு குறையாமல், அதிக தமிழ்ப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்த நடிகையும் கே.ஆர்.விஜயாதான்.
3.சொந்தமாக ஹெலிகாப்டர் வைத்திருந்த ஒரே தமிழ் நடிகை கே.ஆர்.விஜயாதான். தவிர, மாடி நீச்சல் குளமுள்ள பங்களா, குதிரை வளர்ப்பு என மிக ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த முதல் தமிழ் நடிகையும் இவர்தான்.
4.தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்திலேயே, தன் நூறாவது, இருநூறாவது படங்களையும் நடித்த சிறப்புகொண்ட ஒரே தமிழ் நடிகை.
5.தன் கணவரான வேலாயுத நாயருக்கு மூன்றாந்தாரமாக வாழ்க்கைப்பட்டாலும், துளியும் கருத்துவேறுபாடின்றி, அவரின் இறுதிக்காலம் வரையிலும் அவருடனேயே ஒற்றுமையாக வாழ்ந்தவர். திருமணத்திற்குப் பிறகு நடிக்க வாய்ப்பு வந்தும், மறுத்து, படங்களில் தொடர்ந்து நடிக்க கணவருடைய முழு ஆதரவும், ஊக்கமும் கிடைத்தபின்னரே நடிக்க வந்தவர். முதல்தாரமாகவே கணவனுடன் நீண்டகாலம் வாழவியலாத பல நடிகைகள் மத்தியில் கே.ஆர்.விஜயாவின் இத்தகைய மணவாழ்வு ஆச்சர்யத்திற்கும், போற்றுதலுக்கும் உரியது.
7.தன் நூறாவது பட ("நத்தையில் முத்து") பட வெற்றியைத் தன் செலவில் விழா வெடுத்துக் கொண்டாடிய முதல் தமிழ்நடிகை. அதில் எம்.ஜி.ஆர், சிவாஜி, என்.டி.ஆர் உள்ளிட்ட திரையுலக ஜாம்பவான்கள் அனைவரும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
8. அனைத்து நடிகைகளுடனும், ஈகோ இல்லாமற் பழகி, இணங்கிச் செல்லக்கூடிய இனிய தன்மை கொண்டவர். தன் கஷ்டகாலத்தில் உதவியவர்களுக்குத், தன் வசதிகாலத்தில் தேடிச்சென்று, அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தவர்.
9.பத்மினி, சாவித்திரிக்கு அடுத்து, சிவாஜிக்கு ஈடுகொடுத்து சிறந்த நடிப்பை வழங்கிய நடிகை கே.ஆர்.விஜயாதான்.
10.1963ஆம் ஆண்டில், தன் திரையுலகப் பயணத்தைத் தொடங்கிய கே.ஆர்.விஜயா, இன்றளவும் திரையுலகில் பயணித்துக் கொண்டே உள்ளார். ஏறத்தாழ 58 ஆண்டுகாலம், தமிழ்நடிகை ஒருவர், திரையுலகில் தொடர்ந்து பயணிக்கின்றார் என்றால் அது, கே.ஆர்.விஜயாதான். எனக்குத் தெரிந்தவரை இந்திய திரையுலக அளவிலும் இத்தகைய சாதனைக்குரியவர், கே.ஆர்.விஜயாவாகவே இருப்பார் என்று கருதுகிறேன். (மனோரமாவைக் கூறலாம்; நகைச்சுவை நடிகை என்ற அளவில் அவரும் இப்பெருமைக்குரியவரே. நாயகி நிலை நடிகை என்ற அளவிலேயே, கே.ஆர்.விஜயாவைக் குறிப்பிடுகிறேன்).
11.தமிழ்ப்பட நடிகையருள், நாயகியைப் பிரதானமாகக் கொண்ட கதையம்சமுள்ள படங்களில், முதன்முதலில் அதிகளவில் நடித்த தமிழ் நடிகையும் கே.ஆர்.விஜயாதான் (எ.கா: சபதம், வாயாடி, திருடி, ரோஷக்காரி, மேயர் மீனாட்சி, அன்னை அபிராமி).
12.தெய்வநாயகி என்ற தன் இயற்பெயருக்கேற்ப, தெய்வ வேடங்களில் , முற்றிலுமாகப் பொருந்திய முதல் தமிழ்நடிகையான கே.ஆர்.விஜயா, அதிக படங்களில் தெய்வ வேடங்களில் நடித்த சாதனையையும் செய்துள்ளார்.
13.கால்ஷீட் குளறுபடி பெரும்பாலும் செய்யாதவர். கால தாமதமாக படப்பிடிப்புக்கு வருவதையோ, தன்னால் படப்பிடிப்பு பாதிக்கப்படுவதையோ விரும்பாதவர். படப்பிடிப்புக்குழுவினர் அனைவருடனும் நல்லிணக்கமான போக்கை மேற்கொண்டவர்.
14.முதல்நிலை நாயகியாக பிரபலமாக பல படங்களில் நடித்த காலகட்டத்திலேயே, இரண்டாம்நிலை நாயகியாகவும், நடித்தவர். தன் கதாபாத்திரம் பிடித்துவிட்டால் போதும் படத்தில் நடித்துவிடுவார். இப்படி நடித்தால் தன்இமேஜ் பாதிக்குமே என்றெல்லாம் ஒருபோதும் கவலைப்படாதவர்.