ஒரு நடிகர் ஆக்ஷன் ஹீரோவாக மாறுவது ஒரு இரவில் அல்லது ஒரு திரைப்படக் காட்சியில் நிகழ்ந்துவிடாது. அப்படிப்பட்ட பிம்பத்தைச் சூடிக்கொள்ள, பெரிய உயரத்தை எட்டுவதற்கான படிக்கட்டுகளாகப் பல படங்கள் அமைய வேண்டும்.
புரட்சி நடிகர் என்ற பட்டத்தைப் பெறுவதற்கு முன்பாக, அப்படிப் பல திரைப்படங்களில் ஆக்ஷன் ஹீரோவாக பரிமளித்தார் எம்ஜிஆர். அதிலொரு படம்தான், மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் டி.ஆர்.சுந்தரம் இயக்கத்தில் வெளியான ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’.
கேவா காலரில் வெளியான முதல் திரைப்படம் என்ற பெருமை இதற்குண்டு. மூன்று படங்களில் நடிக்க வேண்டுமென்ற ஒப்பந்தப்படி மந்திரிகுமாரி, சர்வாதிகாரி ஆகிய படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக இப்படத்தில் எம்ஜிஆரை நடிக்க வைத்தார் டி.ஆர்.சுந்தரம்.
இடைப்பட்ட காலத்தில் எம்ஜிஆரின் இமேஜ் தமிழ் திரையுலகில் பெருமளவு உயர்ந்திருந்தது. ஆனாலும், ஒப்பந்தத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் இதில் நடித்தார் எம்ஜிஆர்.
ஹாலிவுட் பாணி தயாரிப்பு!
ஆங்கிலத் திரைப்படங்களின் பாதிப்பு மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த படங்களில் பெரும்பாலும் இருக்கும்.
வெறும் திரைக்கதை, நடிப்பு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என்றில்லாமல் படத் தயாரிப்பும் கூட ஹாலிவுட் ஸ்டூடியோ பாணியில் நடக்க வேண்டுமென்பதில் கண்டிப்புடன் இருந்தார் டி.ஆர்.சுந்தரம்.
ஆலையில் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதைப் போல, தமிழ் சினிமாவுலகில் சீரான இடைவெளியில் திரைப்படங்களைத் தயாரித்த நிறுவனம் மாடர்ன் தியேட்டர்ஸ். சேலம் ஏற்காடு சாலையில் இயங்கிவந்த இந்நிறுவனமானது 1937இல் சதி அகல்யா தொடங்கி 1982இல் வெற்றி நமதே வரை 150க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்துள்ளது.
தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிப்புக் கலைஞர்கள் முதல் படத்தில் பணியாற்றும் கடைக்கோடி ஊழியர் வரை அனைவருக்கும் ஒப்பந்தமிட்டபடி சம்பளம் கொடுக்கப்படுவது இந்நிறுவனத்தின் சிறப்புகளில் ஒன்று.
ஒப்பந்தமான நாள் முதல் படம் தொடர்பான வேலைகள் முடியும்வரை சம்பந்தப்பட்டவர்கள் உணவு, உறைவிடமும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இதனால்தான் ஆண்டுக்கு 3 திரைப்படங்கள் என்ற இலக்குடன் தொடர்ந்து திரைப்படங்களைத் தயாரித்திருக்கிறது மாடர்ன் தியேட்டர்ஸ்.
திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடத்தப்படுவதில் தாமதம் ஏற்பட்டால் டி.ஆர்.சுந்தரம் கறாராக கேள்விகள் எழுப்புவார் என்று அங்கு பணியாற்றியவர்கள் தெரிவித்துள்ளனர்.
பட வாய்ப்புகளை எதிர்பார்த்துக் காத்திருந்தோர் இந்நிறுவனத்தின் வாசலில் தவமிருந்ததும், நட்சத்திரங்களாகத் திகழ்ந்தவர்கள் கெடுபிடிகளை நினைத்து தயங்கியதும் வரலாற்றில் இடம்பெறாத பக்கங்கள்.
தெரிந்த கதை எனும் சவால்!
ஆயிரத்தோரு அரேபிய இரவுகள் தொகுதியில் இடம்பெற்ற கதைகளில் ஒன்று ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’.
சொத்துக்களைப் பிடுங்கிக்கொண்டு காசிம் ஏமாற்ற, அவரது சகோதரர் அலிபாபாவும் தங்கை ஆயிஷாவும் ஏழ்மையில் வாடுகின்றனர்.
மரம் வெட்டுதலைத் தொழிலாகக் கொண்ட அலிபாபா, நடனப் பெண்ணான மார்ஜியானாவை சில கயவர்களிடம் இருந்து காப்பாற்றி வீட்டுக்கு அழைத்து வருகிறார்.
தனித்துவம் நிறைந்த அலிபாபாவின் இயல்பு, அவர் மீது மார்ஜியானாவை காதல் கொள்ளச் செய்கிறது.
ஒருநாள் காட்டுக்கு மரம் வெட்டச் செல்லும் அலிபாபா, அபு ஹூசேன் எனும் கொடூர கொள்ளைக்காரன் தலைமையில் திருடர்கள் குகையொன்றில் இருந்து வெளியே வருவதைப் பார்க்கிறார்.
பாறையினால் மூடப்பட்ட குகையைத் திறக்க அவர்கள் பயன்படுத்திய சொல்லைத் தெரிந்துகொண்டவர், உள்ளே நுழைகிறார்.
தங்கமும் வைரமும் அங்கு கொட்டிக்கிடப்பதைப் பார்த்தவுடன், அவையனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டவை என்பதை உணர்கிறார் அலிபாபா. சில மூட்டைகளில் அவற்றை எடுத்துக்கொண்டு வெளியேறுகிறார்.
திடீரென்று பணக்காரர் ஆனவுடன், தன்னிடம் இருக்கும் செல்வத்தைத் தானங்களில் செலவழிக்கிறார் அலிபாபா. இதனைக் கேள்விப்படும் காசிம், அவரை விருந்துக்கு அழைத்து நடந்த உண்மையைக் கேட்டறிகிறார்.
அலிபாபா சொன்ன்படி குகைக்குள் நுழைந்த காசிமுக்கு, அங்கிருக்கும் செல்வத்தைப் பார்த்தவுடன் வெளியேறுவதற்கான கடவுச்சொல் மறந்துவிடுகிறது. இதனால், குகை திரும்பும் கொள்ளையர்களிடம் மாட்டி உயிரை விடுகிறார்.
இதன்பிறகு காசிம் பிணத்தை அலிபாபா மீட்டெடுப்பதும், வந்தது யார் என்ற உண்மையை அறிய கொள்ளையர்கள் அலிபாபாவின் வீட்டைத் தேடுவதும் பின்பாதி திரைக்கதையை சுவாரஸ்யமானதாக மாற்றுகிறது.
இக்கதை 1941இல் என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் நடிப்பில் இதே பெயருடன் தமிழில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. பக்ஷிராஜா தயாரிப்பில் வெளியான அப்படம் பெரிதாக மக்கள் கவனத்தை ஈர்க்கவில்லை.
1954ஆம் ஆண்டு ஹோமி வாடியா இயக்கத்தில் இந்தியில் வெளியான அலிபாபா அவுர் 40 சோர் திரைப்படம் பெருங்கவனத்தை ஈர்த்தது. இப்படத்தில் நிறைந்திருந்த ஆக்ஷன் காட்சிகள் சுந்தரத்தை ஈர்க்க, அவர் இதனைத் தமிழில் தயாரிக்க முடிவு செய்தார்.
அதற்கேற்றாற்போல இந்திப்படத்தில் பயன்படுத்தப்பட்ட பாடல்களைத் தமிழிலும் பயன்படுத்தினார்.
துள்ளல் இசை தந்த இன்பம்!
‘அழகான பொண்ணுதான் அதுக்கேத்த கண்ணுதான்’ என்று பானுமதி ஆடிப் பாடுவதுடன் படம் தொடங்கும்.
இது தவிர ‘மாசிலா உண்மைக் காதலே’, ‘சின்னஞ்சிறு சிட்டே என் சீனா கற்கண்டே’, ‘என் ஆட்டமெல்லாம்’ பாடல்கள் இந்திப் படத்தில் இடம்பிடித்த மெட்டுகளைத் தழுவியவை.
இப்படத்துக்கு இசையமைத்தவர் எஸ்.தக்ஷிணாமூர்த்தி. இந்திப் படத்துக்கு இசையமைத்தவர்கள் சித்ரகுப்தா மற்றும் எஸ்.என்.திரிபாதி.
’நாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு’ என்ற பாடல், காசிம்கான் நயவஞ்சமாகத் தனது சகோதரனை அழைத்துவந்து ரகசியத்தைக் கேட்கும் சூழலில் இடம்பெற்றிருக்கும். அதற்கேற்றாற்போல, அதன் பாடல் வரிகளும் அமைக்கப்பட்டிருக்கும்.
இப்படத்தில் இடம்பெற்ற ‘சலாம் பாபு சலாம் பாபு என்னைப் பாருங்க’ என்ற பாடலுக்கு வஹிதா ரஹ்மான் ஆடியிருப்பார். பின்னாளில் இவர் இந்தியில் கொடிகட்டிப் பறந்த நடிகையாகத் திகழ்ந்தார்.
இதேபோல தங்கவேலுக்காக கண்டசாலா பாடிய ‘உல்லாச உலகம் எனக்கே சொந்தம்’ பாடலும், ‘அன்பினாலே ஆளவந்த அழகு பூபதி’ பாடலும் கேட்பவர்களைச் சொக்க வைக்கும்.
முதலில் இப்படத்தில் பாடலாசிரியராகப் பணியாற்ற அழைக்கப்பட்டவர் உடுமலை நாராயணகவி.
மெல்லிய திரைக்கதை முடிச்சுகள்!
மார்ஜியானாவுக்கு அலிபாபா உதவி செய்வதில் இருந்துதான் திரைக்கதையே தொடங்கும். பார்த்தவுடன் அவர் காதல் கொண்டு வீடு வரை செல்வதற்குள், அலிபாபா யார் என்ற விவரம் வசனங்களில் சொல்லப்பட்டுவிடும்.
காசிம் சொத்துக்களைப் பிடுங்கிக் கொண்டதையோ, மார்ஜியானா தனது பெற்றோரை இழந்ததையோ, நம்மால் காட்சிகளாகப் பார்க்க முடியாது.
இவ்வளவு ஏன், அபு ஹூசேன் கூட்டத்தினர் எவ்வளவு கொடியவர்கள் என்பதை அறிந்துகொள்வதற்கான சந்தர்ப்பம் கூட குகைக்குள் காசிம் நுழைந்தபிறகுதான் நேரிடும்.
வழக்கமான தமிழ் திரைப்படங்களில் இவற்றுக்கெல்லாம் முன்கதை அல்லது காட்சிகள் கண்டிப்பாக இணைக்கப்படும்.
செருப்புத் தொழிலாளி குலாமை மார்ஜியானா கண்ணைக் கட்டி அழைத்து வருவதும், அடையாளம் தெரிவதற்காகத் தான் வந்துபோன வீட்டில் அவர் பெருக்கல் குறியிடுவதும் ரசிகர்களை இருக்கை நுனியில் அமர்த்தும் விஷயங்கள்.
கிளைமேக்ஸ் காட்சியில் மார்ஜியானாவை அபு ஹூசேன் கடத்திச் செல்வது வழக்கமானதாகத் தோன்றினாலும், அதன்பின் குகைக்குள் நடக்கும் சண்டைக்காட்சிகள் ரசிகர்களை உற்சாகமூட்டும் விதமாக அமைக்கப்பட்டிருக்கும்.
அலிபாபா மாளிகையிலேயே அந்த சண்டைக்காட்சி நடந்து முடிந்திருந்தால் அது கண்டிப்பாகக் கிடைத்திருக்காது.
இன்று, பல திரைப்படங்களில் இடைப்பட்ட சண்டைக்காட்சிகள் பிரம்மாண்டமாகவும் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி எளிமையாகவும் இருப்பதனால் ரசிகர்கள் உற்சாகமிழைப்பதைக் கணக்கில் கொண்டால் இதன் முக்கியத்துவம் தெரிய வரும்.
எளிமையான நடிப்பு!
அலிபாபாவாக வரும் எம்ஜிஆரானாலும், மார்ஜியானாவாக வரும் பானுமதியானாலும், ஏனைய பாத்திரங்களில் நடித்தவர்களும் உணர்ச்சிமிகு நடிப்பு எனும் எல்லையைத் தொட்டிருக்க மாட்டார்கள்.
அலட்சியம், கோபம், சிரிப்பு, காதல் என்று எல்லா உணர்வுகளுமே இப்போது பார்த்தாலும் இயல்பானது போன்றே தோற்றமளிக்கும்.
அபு ஹூசேன் வேடத்தில் நடித்த பி.எஸ்.வீரப்பாவும் கூட அடிவயிற்றில் இருந்து குரல் எழுப்பி வசனம் பேசியிருக்க மாட்டார். அதே நேரம், வில்லனைக் காணும்போது வரும் பயம் அவரது பாத்திரம் திரையில் தோன்றியதுமே நம் மனதில் உதித்துவிடும்.
வாள் சண்டை, துள்ளிக் குதித்தல், லாவகமாக ஸ்டண்ட்மேன்களோடு மோதுதல் என்று இப்படம் முழுக்கவே எம்ஜிஆரிடம் ஒரு துள்ளல் ஒட்டியிருக்கும்.
பின்னாட்களில் அவர் தன் படங்களில் வலுக்கட்டாயமாக வடிவமைத்துக்கொண்ட பார்முலாவுக்குள் இப்படம் தானாகப் பொருந்திப் போனது இது ஒரு முன்மாதிரி என்பதைக் காட்டும்.
இப்படத்தில் எம்ஜிஆர் நடிக்கவிருந்த ஒரு பாடலையும் சண்டைக்காட்சியையும் அவர் இல்லாதபோது டூப் கொண்டு சுந்தரம் படமாக்கியதாகச் சில தகவல்கள் இணையத்தில் உண்டு.
‘என் ஆட்டமெல்லாம்’ பாடலில் மட்டுமே பி.எஸ்.வீரப்பாவும் எம்ஜிஆரும் சேர்ந்திருப்பது போன்ற ஷாட்கள் பெரிதாக இராது. அதனைத் தொடர்ந்து வரும் குதிரை சவாரி காட்சியிலும் டூப் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வரும். வேறெங்கும் இதற்கான சுவடு கூடத் தெரியாது.
இப்படத்துக்குப் பிறகு, எம்ஜிஆர் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் நடிக்கவில்லை. அந்த காலகட்டத்தில், ஸ்டூடியோ தயாரிப்பாளர்களின் படங்களில் நடிப்பதை அவர் குறைத்துக்கொண்டார் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
பானுமதிக்குக் கிடைத்த வாய்ப்பு!
அலிபாபாவும் 40 திருடர்களும் கதையைக் கேட்டவுடனே நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் பானுமதி.
அந்த நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகி வந்த ‘மிஸ்ஸியம்மா’ படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டிருந்தார்.
மலைக்கள்ளன், மதுரை வீரன் படங்களுக்குப் பின்னர் இப்படத்தில் எம்ஜிஆர் ஜோடியாக நடித்தார் பானுமதி. பாடல், ஆடல், கேலி, கிண்டல், சண்டைக்காட்சி என்று எல்லாமே இப்படத்தில் அவருக்குக் கிடைத்தது.
இப்படத்துக்கு மக்கள் கொடுத்த வரவேற்பின் காரணமாக, அடுத்தடுத்த ஆண்டுகளில் அவர் பல தமிழ் படங்களில் நடித்தார்.
இப்படத்தில் காசிம் வேடத்தில் நடித்தவர் எம்ஜிஆரின் சகோதரர் சக்ரபாணி. அவரது மனைவியாக நடித்தவர் வித்யாவதி. (இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சித்தி ஆவார்)
மூன்று வேடங்களில் சௌந்தர்!
கே.கே.சௌந்தர் எனும் நடிகரை தமிழ் திரையுலகமோ அல்லது சினிமா ரசிகர்களோ அடையாளம் காண வேண்டுமென்றால் ‘சின்ன வீடு’ உள்ளிட்ட ஒரு சில படங்களே உண்டு. அப்படத்தில் பாக்யராஜின் தந்தையாக நடித்திருப்பார்.
1980களில் வெளியான பெரும்பாலான படங்களில் இவரைக் காண முடியும். அதன்பின், வாய்ப்புகள் மட்டுப்பட்டு கிராமத்துப் பண்ணையாராக, பஞ்சாயத்து பேசும் நபர்களில் ஒருவராகப் பல படங்களில் தலைகாட்டினார்.
இவருக்கு இப்படத்தில் மூன்று வேடம் என்றால் நம்ப முடியாது. அபு ஹூசேனின் கையாட்களில் ஒருவராக அப்துல்லா எனும் பாத்திரத்தில் நடித்திருப்பார் சௌந்தர்.
அதே போல, காசிம்மின் அவையைச் சேர்ந்தவராகவும், ஒரு முதியவராகவும் வந்து போவார். குரல் மட்டுமே அவரை அடையாளம் காட்டும்.
மாதச் சம்பளத்துக்கு அமர்த்தப்பட்ட துணை நடிகர்களை மாடர்ன் தியேட்டர் நிறுவனம் எந்தவகையில் பயன்படுத்தியது என்பதற்கான சான்று இது.
மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகா என்றே திரைக்கதை வசனத்துக்கான கிரெடிட் டைட்டிலில் குறிப்பிடப்பட்டிருக்கும். இப்படத்துக்கு வசனம் எழுதியவ்ர் முரசொலி மாறன் என்றும், ஏ.எல்.நாராயணன் என்றும் இரு வேறு தகவல்கள் உண்டு.
எது எப்படியானாலும் ‘அண்டா கா கசம் அபூகா ஹு ஹூகும் திறந்திடு சீசேம்’ என்ற வசனம் இன்றும் கூட மீம்ஸ்களில் பயன்படுத்தப்படும் அளவுக்கு இளமையுடன் இருந்து வருகிறது.
பிரமிப்பூட்டும் செட்!
அபு ஹூசேன் தலைமையிலான திருடர்கள் இருக்கும் குகைக்கான செட், படம் பார்க்கும்போது நம்மை அசரடிக்கும். இதற்குச் சொந்தக்காரர் கலை இயக்குனர் ஏ.ஜே.டொமினிக்.
இந்த குகையின் வெளிப்புறப்பகுதி மைசூரிலும், உட்புறப்பகுதி சேலத்திலும் வடிவமைக்கப்பட்டு படமாக்கப்பட்டன.
அதேபோல அலிபாபா மற்றும் காசிம் வீடுகள், மார்ஜியானா நடனமாடும் விடுதி, கடைத்தெரு, அதில் இருக்கும் நடைபாலம் போன்றவை கலை இயக்கத்துக்கு அக்காலத்தில் தரப்பட்ட முக்கியத்துவத்தை வெளிக்காட்டுகிறது.
கிளைமேக்ஸில் இடம்பெற்ற சண்டைக் காட்சியும் கூட, கொதிக்கும் நீரோட்டத்தின் மீது அமைக்கப்பட்ட தொங்கு பாலத்தின் மீது நடப்பதாகக் காட்டியதாலேயே விறுவிறுப்பைக் கூட்டியிருந்தது.
அற்புதமான படத்தொகுப்பு மற்றும் ஒளிப்பதிவு!
குளோசப் மற்றும் மிட் ஷாட்களில் கதாபாத்திரத்தின் நகர்வுக்குத் தகுந்தவாறு கேமிராவை நகர்த்துவது பின்னாட்களில் அதிகமும் கவனிக்கப்படாமல் போனது.
ஆனால், இப்படத்தில் பெரும்பாலும் அவற்றை டபிள்யூ.ஆர்.சுப்பாராவ் பயன்படுத்தி இருப்பார்.
கேவா கலர் என்றாலே சிவப்பு சாயத்தில் கருப்பு வெள்ளை படத்தை முக்கியெடுத்தது போன்றிருக்கும் என்ற நினைவு என் மனதில் உண்டு.
இப்படத்தில் பானுமதி மற்றும் எம்ஜிஆர் பச்சை நிற உடை உடுத்தியிருப்பதை உணரும்போது, அப்படியொரு எண்ணத்தில் இருந்து விடுபட சுப்பாராவ் எப்படிப் பணியாற்றியிருக்கிறார் என்பது தெரிகிறது.
அதேபோல, ஒரு காட்சியில் இருந்து மற்றொரு காட்சிக்கு நகர ‘வைபிங்’ என்ற முறையைப் பின்பற்றியிருப்பார் படத்தொகுப்பாளர் பாலு.
’மாசிலா உண்மை காதலே’ பாடலில் பின்னால் வரும் ‘அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்’ என்ற வரிகளின் மீது எம்ஜிஆரையும் பானுமதியையும் காட்டியவாறே பூக்களின் மீது நகரும் கேமிரா, அப்படியே குளோசப்பில் அவர்கள் இருவரையும் காட்டும்.
‘நாம ஆடுவதும் பாடுவதும்’ பாடலின் தொடக்கம் கூட ‘ஸ்டாப் ப்ளாக்’கில் அமைக்கப்பட்டிருப்பது அன்றைய ரசிகர்களை நிச்சயம் குதூகலப்படுத்தியிருக்கும்.
‘என் ஆட்டமெல்லாம் ஒரு வேட்டையில்தானே’ பாடலில் பீப்பாய்களை சாரங்கபாணியும் எம்.என்.ராஜமும் அருவியில் தள்ளிவிடும்போது, மினியேச்சர் காட்சிகள் ஆற்றைக் காட்டும் காட்சிகளோடு அற்புதமாக பொருத்தப்பட்டிருக்கும்.
படம் பார்க்கும் ரசிகர்களை மனதில்கொண்டு, அழகியலோடு ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டுமென்று மெனக்கெட்ட சாதனையாளர்களின் உழைப்பும் எண்ணமுமே இவற்றின் பின்னிருக்கின்றன.
நிகழ்த்த முடியாத அதிசயம்!
ஒன்றைப் போல இன்னொன்றை எப்போதும் ஆக்க முடியாது. அவ்வாறு நிகழ்ந்தால் அது நகலின் சாதனையாகவே கருதப்படும்.
1956 பொங்கலையொட்டி வெளியான ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ திரைப்படம் தமிழகமெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போதுவரை இத்திரைப்படம் உருவாக்கிய சாதனையை வேறு படம் முறியடிக்கவில்லை.
இதன் தொடர்ச்சியாக ’அரசிளங்குமரி’, ‘பாக்தாத் திருடன்’ போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்தாலும், இது போன்ற ஒரு பேண்டஸி படத்தை எம்ஜிஆரால் கூடத் திரும்பத் தர முடியவில்லை.
1960களின் பிற்பாதியில் ஜேம்ஸ்பாண்ட் படங்கள், கடத்தலை முன்னிறுத்தும் ஆக்ஷன் படங்களின் தாக்கத்தைத் தாங்கி நின்றன மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த திரைப்படங்கள்.
சினிமாவில் கூட்டணி என்பது எப்போதுமே வெற்றியைத் தீர்மானிப்பதாக அமைந்திருக்கிறது.
அந்த வகையில், மாடர்ன் தியேட்டர்ஸ் மற்றும் எம்ஜிஆரின் கூட்டணியில் அமைந்த மூன்று திரைப்படங்களுமே தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
-உதய் பாடகலிங்கம்
நன்றி: தாய் இதழ்!