நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முதல் படமான ‘பராசக்தி’யில் கதாநாயகியாக நடித்தவர் பண்டரிபாய். கர்நாடக மாநிலம் மைசூர் அருகே உள்ள பதல் கிராமத்தில் 1928 ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி பிறந்தார்.
கன்னட திரைப்பட உலகின் முதல் கதாநாயகியாகப் போற்றப்படும் பண்டரிபாய், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் சேர்த்து சுமார் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
சிறந்த குணச்சித்திர நடிகைக்கான அடையாளமாகப் பார்க்கப்பட்ட இவர், 1952 ஆண்டு, சிவாஜிகணேசன் அறிமுகமான பராசக்தி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
இவரது தாய் மொழி கன்னடம் என்றாலும், தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்தபோது இவரது சொந்தக் குரலிலேயே தவறில்லாமல் பேசி நடித்தார் என்பது சிறப்பு.
குறிப்பிட்ட காலத்திற்குப்பின் குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்து வந்தார்.
இவரது தங்கை நடிகை மைனாவதி, மாலையிட்ட மங்கை, வண்ணக்கிளி போன்ற பல்வேறு படங்களில் நடித்தவர். 1998 முதல் 2000 வரை மைனாவதி தயாரித்த கன்னடத் தொலைக்காட்சித் தொடர்களில் பண்டரிபாய் நடித்துள்ளார்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுடன் தெய்வத்தாய், அன்னமிட்ட கை, எங்க வீட்டுப் பிள்ளை, உழைக்கும் கரங்கள், சந்தோரதயம், அடிமைப்பெண் போன்ற படங்களில் நடித்ததனால் திரைத்துறையில் இவருக்கென்று தனியிடம் கிடைத்தது.
சிவாஜி கணேசனின் தாயாக தெய்வ மகன், கௌரவம் போன்ற படங்களில் தமது அபார நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் பண்டரிபாய்.
1992ல் நடிகர் ரஜினிகாந்தின் தாயாக மன்னன் படத்தில் நடித்த இவர், கமல்ஹாசன், விஜயகாந்த், கார்த்திக் போன்ற நடிகர்களுடன் தொடர்ந்து நடித்தார்.
ஒருமுறைப் படப்பிடிப்பு ஒன்றிற்காக சென்னையிலிருந்து பெங்களூருவிற்குப் பேருந்தில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் தனது ஒரு கையை இழந்துவிட்டார்.
அதன்பின் நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருந்த பண்டரிபாய், 2003 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் தேதி தனது 73 வயதில் மறைந்தார். அவர் மறைந்தாலும் அவர் நடித்த படங்கள் மூலம் அந்தக் கதாபாந்திரங்கள் வழியே இன்னும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.