கரணம் தப்பினால் மரணம்… குடிநோயாளிகளைப் பற்றிய கதை என்பதால் டாக்குமெண்டரி போலவோ, பிரச்சாரப்படம் போலவோ ஆகிவிட அதிக வாய்ப்பு. ஆனால் அதை லாவகமான திரைமொழியின் மூலம் சூப்பர் சினிமாவாக்கி இருக்கிறார் தினகரன் சிவலிங்கம்.
தமிழ் சினிமாவில் டாஸ்மாக், மது, போதை உளறல் போன்றவை இன்றியமையாத மசாலாக்களாகி விட்டன. அவை பெரும்பாலும் காமெடிகளாவோ, கதாநாயகர்களின் ஹீரோயிசத்துக்கான கச்சாப் பொருளாகவோ காட்சிப்படுத்தப்பட்டு வரும் சூழலில் பாட்டல் ராதா ஒரு காவியமாகி இருக்கிறது.
படம் ஆரம்பித்ததும் கதாநாயகன் (குரு சோமசுந்தரம்) டைல்ஸ் ஒட்டும் தொழிலில் கில்லி என்பதும், அவனது குடிநோய் அவனை சல்லி சல்லியாய் நொறுக்கி வீழ்த்தி விட்டதையும் தெளிவாகச் சொல்லிவிடுகிறார்கள்.
வேலையை உதறிவிட்டு, கையில் இருந்த பணத்தையெல்லாம் பாரில் கரைத்துவிட்டு வீட்டுக்கு செல்கையில் அவனது குழந்தைகள் ஐஸ்காரனிடம் ஐஸ் கேட்டு நிற்பார்கள். இந்த இடம் ஒரு சோகம் ததும்பும் டிராமா அரங்கேறும் எனும் எதிர்பார்ப்பில் இருக்கும் நமக்கு காமெடியைத் தந்து சிரிக்க வைக்கிறார் இயக்குநர்.
முதல் பாதியில் அப்படித்தான் சோகம் இழையோட வேண்டிய தருணங்களில் சிரிப்பால் நிரப்பி இருக்கிறார். படம் என்ன இப்படிப் போகிறது என யோசிக்கையில், இடைவேளையில் பயங்கர த்ரில்லரோடு முடிக்கிறார்கள்.
இந்தப்படம் த்ரில்லர் படம் போல என நாம் தீர்மானித்து, இருக்கையில் மீண்டும் அமர்கையில்தான் படத்தின் தலைப்புக்கேற்ற கதையெல்லாம் திரையில் விரிகிறது.
காதல் மனைவியை, பாசம் கொண்ட பிள்ளைகளை நினைத்து கலங்கினாலும் மதுமோகத்தைக் கைவிட முடியாத கையறு நிலையால் தவிக்கும் கதாநாயகன் நம் ஒவ்வொருவருக்குள்ளும் வாழ்ந்துவிட்டு போகிறான்.
இரண்டாம் பாதி முழுக்க கண்ணீரைத் துடைத்தபடிதாம் பயணிக்க வேண்டி இருக்கும். வேறு வழியில்லை. ஜான்விஜய் இப்படத்தின் இன்னொரு ஹீரோ. அவரது கேரக்டர் படத்தைத் தாங்கி நிற்கும் முக்கிய பில்லர்.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கதாநாயகி (சஞ்சிதா) குடிநோயால் தனது குடும்பம் பட்ட கஷ்டத்தை விவரிக்கும்போது குரு சோமசுந்தரம் கண்களால் நடிக்கும் தருணம் கல்மனம் கொண்டவர்களையும் கண்ணீர் சுரக்க வைக்கும். அந்த சமயத்தில் அருகில் அமர்ந்திருக்கும் ஜான் விஜய், தனது குடும்பத்தை நினைத்து முகபாவத்தால் கலங்கும் நடிப்பும் அதே ரகம்தான். தன் மனைவி எதற்காக இறந்தாள் என இதுவரை தெரியவில்லை என அவர் கூறும் காட்சி தமிழ் சினிமாவின் தலைசிறந்த காட்சிகளில் ஒன்று.
குடிநோயாளர்களாக வரும் பலரும் நம் மனதில் சம்மணமிட்டு அமர்ந்து விடுகிறார்கள். டி அடிக்ஷன் சென்டரில் நடக்கும் சில விசயங்கள் நமக்கு செவி வழி செய்தியாக வந்திருக்கும். இந்தப்படத்தின் மூலம் நாமும் அங்கு சென்று சிகிச்சை பெற்று வந்தது போன்ற உணர்வு மேலிடுகிறது. அதிலும் மாறன் அடிக்கும் லூட்டி, அடிக்சன் சென்டரில் சிக்கி இருக்கும் குடிநோயாளர்களைக் காப்பாற்ற வந்த ஆபத்வாந்தவன் போல ஐட்டம்காரர் ஒருவர் அடிக்கும் உதார் என பல காட்சிகள் நம்மைக் குலுங்கிக் குலுங்கி சிரிக்க வைக்கின்றன.
கடைசியில் அந்த ஐட்டம்காரர் `` நான் சைட் டிஷ்க்கு தேன்மிட்டாய்க்காக தெருவுல சண்டை போடுறவன்பா’’ என தன்னிலை விளக்கும் இடம் குடிநோயாளர்களின் உதார்களை நமட்டுச் சிரிப்போடு ரசிக்க வைக்கிறது.
தமிழ் சினிமா கண்ணகி காலம் முதல் கணினி காலம் வரை பெண்கள் தங்கள் உணர்வுகளை அடக்கிக் கொள்ளும் பிராணிகள் என்றே வரையறுத்து வைத்திருக்கிறது. ஒரு கட்டத்தில் தன் கணவன் இனி திருந்தி குடும்ப வாழ்க்கைக்கு வரப்போவதில்லை என அறிந்து மனதுக்குப் பிடித்த ஓர் இணையுடன் வாழ்வதில் தவறேதும் இல்லை என்பதை நார்மலைசாக பேசியிருக்கும் இயக்குநருக்கு ஹாட்சாஃப்.
இதுபோன்ற அம்சங்களுக்காக மட்டுமல்ல. விளிம்பு நிலை மனிதர்களின் கண்ணீர், கொண்டாட்டம், தியாகம், துணிச்சல் என பல அம்சங்களை அப்படியே திரையில் மொழிபெயர்த்திருக்கும் இயக்குநர் தினகரன் சிவலிங்கத்தை தமிழ்ச்சமூகம் நிச்சயம் உச்சி முகரும்.