தீவிர சிவ பக்தரான வல்லாள மகாராஜாவை சித்திக்க, வழக்கம் போலவே, சிவபெருமான் திருவிளையாடல்.
அண்ணாமலையாரே தன்னுடைய தந்தையாக ஏற்றுக் கொண்ட வல்லாள மகாராஜாவுக்கு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தனியே ஒரு கோபுரம் இருக்கிறது. வல்லாள மகாராஜா கோபுர வாசல் மாசி மகம் அன்று மட்டும்தான் திறக்கப்படும்.
மகத்துவம் நிறைந்த மாசி மாதத்தில், மாசி பௌர்ணமி பலவிதமான விசேஷங்களை உள்ளடக்கியுள்ளது. அதில் மிக மிக முக்கியமானது, மாசி மகம். மாசி மகம் எல்லா கோவில்களிலும் விசேஷமாக, திருவிழா போல கொண்டாடப்படும். ஆனால், திருவண்ணாமலையில் மாசி மகத் திருவிழா பல சிறப்புகளைக் கொண்டுள்ளது. சிவபெருமானே, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இருந்து பிள்ளையாக உருவெடுத்து, மாசி மக நன்னாளில் நீத்தார் கடன் செய்வார். இதைப் பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, அரசர்கள் ஆட்சி செய்த காலத்தில், திருவண்ணாமலையை வல்லாள மகராஜா என்ற அரசன் ஆட்சி செய்தான். வல்லாள ராஜாவின் ஆட்சி காலத்தில் செல்வ செழிப்புடன் வாழ்ந்து வந்தாலும் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தாலுமே, அரசனுக்கு ஒரு தீராத மனக்குறை இருந்து வந்தது. வல்லாள மகாராஜாவுக்கு இரண்டு மனைவிகள் இருந்தாலும் அவருக்கு குழந்தை இல்லை என்ற வருத்தம் மிகவும் வாட்டியது.
ஒரு குறை கூட இல்லாமல் நல்ல ஆட்சி செய்த வந்த மன்னரின் வருத்தத்தைக் கண்ட குடிமக்களும் மனம் வருந்தினார்கள். யார் என்ன கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் தானதர்மம் செய்து வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று அவரது அமைச்சர்கள் அறிவுறுத்தினார்கள்.
அடுத்த கர்ணன் என்று கூறும் அளவுக்கு வல்லாள மகராஜா தானங்களை செய்தார்.
சிவபெருமான் திருவிளையாடல்சிவபெருமான் திருவிளையாடல்.
தீவிர சிவ பக்தரான வல்லாள மகாராஜாவை சித்திக்க, வழக்கம் போலவே, சிவபெருமான் திருவிளையாடல் ஒன்றை நிகழ்த்தினார்.
திருவண்ணாமலையில் வல்லாள மகாராஜா அரண்மனைக்கு ஒரு சிவனடியார் வேடத்தில், வந்த சிவபெருமான், நன்றாக தூங்க ஒரு பஞ்சு மெத்தையும், ஒரு பெண்ணும் வேண்டும் என்று கேட்டார்.
சிவனடியாரின் அதிர்ச்சி தரக்கூடிய இந்த கோரிக்கையை கேட்ட மகாராஜாவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. யார் எதை கேட்டாலும் மறுக்காமல் தருவே என்ற வாக்குறுதியை மேற்கொண்டுள்ள வல்லாள மகாராஜா செய்வதறியாமல் திகைத்து நின்றார்.
அவருடைய முதல் மனைவியான சல்லமாதேவியும் தீவிரமான சிவபக்தை ஆவார். எனவே தன்னுடைய கணவர் கொடுத்த வாக்குறுதி பொய்க்க கூடாது என்று, தானே அந்த சிவனடியாரிடம் செல்வதாக மகாராஜாவிடம் கூறினார்.
சிவனடியாருக்கு என்று ஒதுக்கப்பட்ட அறையில் பால் செம்புடன் மகாராணி சல்லமாதேவி நுழைந்தார். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சிவனடியாரின் கால்களை தொட்டு வணங்கிய உடனேயே சிவனடியார் ஒரு அழகான குழந்தையாக மாறினார். மனம் மகிழ்ந்த மகாராணி, அந்த குழந்தையை வெளியே எடுத்து வந்தார். நடந்தது எல்லாம் ஈசனின் திருவிளையாடல் என்பதை அறிந்த மகாராஜா மகிழ்ச்சி அடைந்தார். ஆனால், அரசியின் கையில் இருந்த குழந்தை மறைந்து விட்டது. மீண்டும் குழந்தை மறைந்து விட்டதே என்று மகாராஜா அதிர்ச்சியில் இருந்த போது ஈசனின் அசரீரி கேட்டது.
‘எவ்வளவு துன்பம் வந்தாலும் மனம் தளராமல் இருக்க வேண்டும் என்பதை உலகம் உணர வேண்டும் என்பதற்காகவே நான் இதைச் செய்தேன். அண்ணாமலையாரான நான் தான் குழந்தையாக உன் இல்லத்துக்கு வந்தேன். மனிதப் பிறப்பிலிருந்து உனக்கு முக்தி அளித்து விட்டேன். இனி உனக்கு பிறப்பு இறப்பு கிடையாது நீ இறந்த பிறகு நானே உனக்கு மகனாக வந்து இறுதிச் சடங்கு செய்வேன்’ என்று சிவபெருமான் கூறினார்.
ஈசன் அளித்த வரத்தின் படி, மாசி மகம் நன்னாளில் வல்லாள மகாராஜா சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது, ஒரு குழந்தை மீண்டும் அரண்மனைக்குள் வந்தது. அரசரையும், இரண்டு அரசிகளையும் அம்மா அப்பா என்று கொஞ்சி விளையாடி அவர்களுக்கு உணவூட்டி மகிழ்ந்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு அந்த குழந்தை மறைந்து விட்டது. உடனடியாக அண்ணாமலையார் கோவிலுக்கு சென்ற வல்லாள மகாராஜாவும் அரசியரும் அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர்.
அண்ணாமலையார் தரிசனம் பெற்ற உடனேயே மகாராஜாவின் உயிர் பிரிந்தது. துயரம் தாங்க முடியாமல் அடுத்தடுத்து அரசிகளின் உயிரும் பிரிந்தன.
ஈசன் அளித்த வாக்குறுதி படி, அண்ணாமலையார் கர்ப்பகிரகத்தில் இருந்து ஒரு குழந்தை வெளிவந்தது. மன்னருக்கும் இரண்டு அரசிகளுக்கும் எள்ளும் நீரும் இறைத்து தர்ப்பணம் செய்தது. அது மட்டும் இல்லாமல் அவர்களின் சிதைக்கும் தீமூட்டி முறையான இறுதிச் சடங்கு நடத்தியது.
ஒவ்வொரு ஆண்டும் மாசி மகம் நன்னாளில் சிவபெருமான் தர்ப்பணம் செய்வார்.
திருவண்ணாமலையில் அண்ணாமலையார், ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத் திருநாளன்று வல்லாள மகாராஜாவுக்கு தர்ப்பணம் செய்வதற்கும், தனது தந்தையாக ஏற்றுக் கொண்டவருக்காக பித்ரு காரியம் செய்வார் என்பது ஐதீகம். இந்த வைபவம், திருவண்ணாமலையில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகம் அன்று நடந்து வருகிறது. அது மட்டும் இல்லாமல் அண்ணாமலையாரே தன்னுடைய தந்தையாக ஏற்றுக் கொண்ட வல்லாள மகாராஜாவுக்கு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தனியே ஒரு கோபுரம் இருக்கிறது. வல்லாள மகாராஜா கோபுர வாசல் மாசி மகம் அன்று மட்டும்தான் திறக்கப்படும்.