குழந்தைகளின் உணர்வுகளை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம்
'புஜ்ஜி அட் அனுப்பட்டி'.
இப்படம் வரும் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.இப்படத்தை ராம் கந்தசாமி எழுதி, இயக்கி, தன் கலாலயா நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் கமல்குமார்,
நக்கலைட்ஸ் வைத்தீஸ்வரி,
கார்த்திக் விஜய் ,
குழந்தை நட்சத்திரம் பிரணிதி சிவ சங்கரன்,
லாவண்யா கண்மணி,
நக்கலைட்ஸ் ராம்குமார் ,
நக்கலைட்ஸ் மீனா ,
வரதராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை
9 வி ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
புஜ்ஜி திரைப்படத்தின் திரை வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா ஊடகங்கள் முன்னிலையில் இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் படத்தின் இயக்குநர் ராம் கந்தசாமி பேசும்போது,
"ஒரு படம் எடுக்க இரண்டு கோடி ரூபாய் தேவைப்படும். சிக்கனமாகப் பட்ஜெட்டில் படம் எடுப்பது என்றால் கூட 50 லட்சம் ஆகும் என்று பேசிக் கொண்டிருந்தோம்.ஒருநாள் சினிமா எடுப்பதைப் பற்றி வீட்டில் பேசிக் கொண்டிருக்கும் போது என் மனைவி ஒரு விஷயத்தைக் கூறினார் கூறினார்.
எல்லாரும் நாயை , பூனையைச் செல்லமாக வளர்ப்பதைப் பற்றித்தான் பேசுவார்கள். ஆனால் ஆட்டை செல்லமாக வளர்ப்பது பற்றி யாரும் பேச மாட்டார்கள் . ஆனால் அவர் பேசினார். அவர் ஆடு ஒன்று செல்லமாக இருந்ததைப் பற்றிக் கூறினார்.
அப்படி வளர்த்த ஆட்டை விற்று விட்டார்கள். அதைத் தேடி நான் போனேன். என்னைத் தேடி என் அப்பா அம்மா வந்தார்கள் என்று சொன்னார். இது நல்ல லைனாக இருக்கிறதே என்று அதை விரிவு படுத்தி ஒரு திரைக்கதையாக மாற்றினேன்.
பிள்ளைகளிடம் கதை பேசும்போது , ஒரு நாள் என் மகள் கேட்டாள். அந்த ஆடு மீண்டும் கிடைத்ததா இல்லையா என்று .அப்போது அவர்கள் பார்வை வேறாக இருப்பது புரிந்தது. எனவே அந்தக் குழந்தைகளின் கண்ணோட்டத்தில் அவர்கள் பார்வையில் கதை சொல்வதாக மாற்றி இந்தப் படத்தை எடுத்தோம்.
முதலில் இதில் நடிப்பதாக இருந்த பெண் குழந்தை நடிக்க முடியவில்லை. எனவே ஒரு வாரம் முன்பு வரை கூட யார் நடிப்பது என்று தெரியாத நிலை இருந்தது. அப்போது தான் பிரணிதி சிவசங்கரன் நடிக்க வந்ததும் எங்களுக்கு நம்பிக்கை வந்தது. இந்தக் குழந்தை சிறப்பாக நடித்துள்ளாள்.
இரவு 12:00 மணிக்கு ஆடிஷன் பார்த்து தூக்கக் கலக்கத்தில் ஒப்புக்கொண்டாள். இப்படி படத்திற்கு ஒருவர் ஒருவராக வந்தார்கள் .படத்தின் ஒளிப்பதிவாளர் அருண்மொழிச்சோழன் மிக வேகமாகப் பணியாற்றுபவர். அவருடைய வேகத்துக்கு எங்களால் ஈடு கொடுக்க முடியவில்லை .அப்படி இதில் பணியாற்றினார்.
நண்பர் வேல் மாணிக்கம் மூலம் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா அவர்களின் அறிமுகம் கிடைத்தது. நாங்கள் தயக்கத்தோடு அவரிடம் கேட்டபோது .அவர் பார்க்கலாம் என்றார். எடுத்த காட்சிகளை எல்லாம் கொடுத்து விட்டு வந்தோம். பார்த்துவிட்டுச் சொல்கிறேன் என்றார் . சில நாள் எதுவுமே கருத்து சொல்லாமல் இருந்தார் .பிறகு சந்தித்த போது,என் மகள் கேட்ட அதே கேள்வியைக் கேட்டார்.
ஆடு கிடைத்ததா இல்லையா என்று. படம் அவருக்குப் பிடித்திருந்தது சம்பளம் எப்படி இருக்குமோ என்று நாங்கள் யோசித்தபோது, அது எல்லாம் ஒன்றும் தேவையில்லை என்றார் .எங்களுக்கு பெரிய இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அந்த அளவிற்கு ஈடுபாடு காட்டிச் சிறப்பாக இசை அமைத்துக் கொடுத்து படத்தை உயர்த்தி உள்ளார்.
இந்தப் படத்தை முழுக்க முழுக்க ஊடகங்களின் ஆதரவை நம்பி வெளியிடுகிறோம். ஆதரவு தர வேண்டும்'' என்றார்.
படத்தில் துர்காவாக நடித்துள்ள குழந்தை நட்சத்திரம் பிரணிதி சிவசங்கரன் பேசும்போது,
" எனக்கு இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குநர் அவர்களுக்கு நன்றி. படப்பிடிப்பு ஜாலியாக இருந்தது .எங்களை நன்றாக பார்த்துக் கொண்டார்கள்'' என்றார் .
படத்தில் நடித்த வைத்தீஸ்வரி பேசும் போது,
'நான் ஒரு நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் தான் இருக்கிறேன். இந்தப் படம் எனக்கு நல்ல வாய்ப்பாகத் தெரிந்தது. இதில் நான் போலீஸ் கான்ஸ்டபிலாக நடித்துள்ளேன் ''என்றார்.
இதில் கசாப்புக் கடை வைத்திருப்பவராக நடித்துள்ள வரதராஜன் பேசும் போது,
" எனக்கு சினிமாவில் கனவுகள் உண்டு .நான் வில்லனாக நம்பியார் இடத்தைப் பிடிக்க வேண்டும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு வில்லனாக நடிக்க வேண்டும். இது நிறைவேறும் என்று நினைக்கிறேன். இது நல்ல படம். அனைவரும் படத்தை ஆதரிக்க வேண்டும்'' என்றார்.
இவ் விழாவில் படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் அருண்மொழிச் சோழன்,படத்தொகுப்பாளர் சரவணன் மாதேஸ்வரன்,
9 வி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் வெளியிடும் ரமேஷ் - அஞ்சலை முருகன் , படத்தில் நடித்த விஜய் கார்த்திக், கமல்குமார்,பாடலாசிரியர் கு.கார்த்திக், பாடகி பிரசாந்தினி, இயக்குநர் வேல் மாணிக்கம்,இணை இயக்குநர் மகேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.
ஓர் உயிரைத் தேடிப் பயணம் செய்யும் இரு உயிர்களின் கதையாக இப்படக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு திரைப்பட விழாக்களில் வெளியிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்ற
'புஜ்ஜி அட் அனுப்பட்டி' குழந்தைகள் உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லும்.
குழந்தைகள் உலகத்தைத் திரையில் காட்டும் அனுபவமாக மே 31-ல் இப்படம் வெளியாக உள்ளது.