நகைச்சுவை நடிகர் போண்டா மணி இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர். இவர், 1991 ஆம் ஆண்டு பாக்யராஜின் பவுனு பவுனுதான் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.
தன் ஆரம்பகால வாழ்க்கை குறித்து ஒரு முறை சொன்னது இது: "இலங்கையில் மளிகைக் கடை நடத்தி வந்தார் என் அப்பா. எங்க குடும்பத்துல என்னையும் சேர்த்து மொத்தம் 16 பிள்ளைகள். அதில், ஒருத்தர் குண்டடி பட்டு இறந்துட்டார். 5 பேர் படகில் போகும்போது அலை இழுத்துக்கிட்டு கடல்ல கூட்டிக்கிட்டு போயிடுச்சு. ஒருசிலர் மட்டும்தான் மிஞ்சினோம். என்னை ஒருமுறை சுட்டதில் என் இடது காலில் குண்டு துளைத்தது. பிறகு, சிங்கப்பூர் போயிட்டேன், அங்கே ஒரு கடையில சேல்ஸ்மேனா வேலை பார்த்தேன். அங்கே ஷூட்டிங்க்காக வந்திருந்த பாக்யராஜ் சாரை சந்தித்தேன். 'படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமானு கேட்டேன். 'சினிமா அவ்வளவு ஈஸி இல்லை. நீயே கஷ்டப்பட்டு சென்னைக்கு வந்து சேரு'னு சொல்லிட்டுக் கிளம்பிட்டார்.
மறுபடியும் எங்க உறவினர்களையெல்லாம் சிங்கள ராணுவம் துரத்த சேலம், எடப்பாடியில் ஒரு அகதி முகாமில் தங்கியிருந்தோம். அப்போ டீ சாப்பிட பக்கத்து கடைக்குப் போறது வழக்கம். அப்போ, அந்தக் கடைக்காரரிடம் யதார்த்தமாக பாக்யராஜை சந்திச்சது பற்றிப் பேசினேன். எடப்பாடி, பூலாம்பட்டியிலதான் 'பவுனு பவுனுதான்' ஷூட்டிங் நடப்பதாகவும் பாக்யராஜ் அங்குதான் இருப்பதாகவும் சொன்னார். மறுபடியும் பாக்யராஜ் சாரை சந்திச்சேன். அவரும் என்னை ஞாபகம் வச்சிருந்தார்.
'இந்தப் படத்தில் ஒரு சீன்கொடுங்க'னு கெஞ்ச, நான் இலங்கையிலிருந்து வந்த கதையைச் சொன்னேன். அந்தப் படத்தில் மாப்பிள்ளை கேரக்டரில் நடிக்க ஈரோட்டைச் சேர்ந்த ஒருத்தர் ஆறுமாத காலமா எல்லா எடுபிடி வேலைகளையும் செய்தாராம். என் கதையைக் கேட்டதும், எனக்காக அந்தக் கேரக்டரை விட்டுக்கொடுத்தார். எனக்குக் குடை பிடிக்கும் கேரக்டரில் நடித்தார். இன்னும் அந்த மனிதரை மறக்க முடியாது. பிறகு, சென்னைக்கு வந்து சேருனு சொல்லிட்டுக் கிளம்பிட்டார் பாக்யராஜ். ஏதோ ஒரு நம்பிக்கையில நானும் சென்னைக்கு வந்துட்டேன்.
1990-களில் இதெல்லாம் நடந்தது. மகாலிங்கம் என்பவர்தான் எனக்கு எப்படி சினிமா வாய்ப்பு தேடணும்னு சொல்லிக்கொடுத்தார். 'மானம், ரோஷம், சூடு, சொரணை எல்லாத்தையும் விட்டுட்டு வாய்ப்புத் தேடுனா, எதிர்காலத்துல நல்ல இடத்தில் இருக்கலாம்'னு சொல்லிக்கொடுத்தவர் மகாலிங்கம். அதை மனதில் வைத்து வாய்ப்பு தேடினேன். அப்படித்தான் ஒவ்வொரு படங்களும் நடிக்கிற வாய்ப்பைப் பெற்றேன். கூடவே, பாண்டி பஜாரில் வாட்ச்மேனாகவும் வேலை பார்த்தேன். (கட்டிங் கண்ணையா)
வி.சேகர் சாரைப் போய்ப் பார்த்தேன். வாய்ப்புக்காக அவர் கால்ல விழுந்துட்டேன். என் பேச்சு அவருக்குப் பிடிச்சிருந்தது. 'அந்தப் பிணம் தூக்கும் சீனுக்கு இவனைப் போட்டுக்கோ'னு சொல்லிட்டார். எனக்கு கேடீஸ்வரன்னு பெயர் சொன்னேன். பெயரை வித்தியாசமாக வைக்கணும்னு சொன்னார். 'சாப்பாடு பேரில் இருந்தவங்கதான் சேமியா மணி, தயிர்வடை தேசிங்கு, தேங்காய் சீனிவாசன், ஓமக்குச்சி நரசிம்மன்னு அதிகமா சாதிச்சிருக்காங்க. அப்படியொரு பேர் வைக்கணும்'னு யோசிச்சார். அப்போ நான், 'இரண்டு போண்டா வாங்கி பேன்ட் பாக்கெட்ல போட்டுட்டு சான்ஸ் தேடுவேன். பசிக்கிற நேரம் போண்டாவைச் சாப்பிட்டு தண்ணி குடிச்சு பசியைத் தீர்த்துக்குவேன்'னு சொன்னேன். 'அப்படியா, அப்போ உனக்கு போண்டா மணினு பெயர் வெச்சிடலாம்'னு சொல்லி சிரிச்சார். அவரேதான் தலைமுடியை சரி செய், டிரெஸ் இப்படிப் போடுனு நிறைய சொல்லிக்கொடுத்தார். கவுண்டமணிகூட நடிக்கப்போற, அவர் உன் பெயரைக் கேட்பார். வித்தியாசமான பெயரா இருக்கிறதால, உன்னைப் பிடிச்சிடும்னு அனுப்பி வெச்சார்" என்றவர், தொடர்ந்தார்.
"நாய்நக்கித் தலை செந்திலு... தெருவுல போற நாய்கிட்ட எல்லாம் தலையைக் கொடுத்திருக்கான். அது நக்கிவிட்டிருக்கு' எனக் கிண்டல் செய்தார் கவுண்டர். பரவாயில்லையே ஃபிராங்கா பேசுறானேனு என்னைச் சேர்த்துக்கொண்டார். இரண்டு மூன்று முறை கவுண்டரிடம் அறை வாங்கியிருக்கிறேன். 'சமத்துவம் இந்தப் பாடையில்' பாடல் ஷூட்டிங் அப்போ, என் மூத்த அண்ணன் உயிலங்குளத்தில் குண்டடி பட்டு கிடக்கார். என்னை எப்படியோ தேடி வந்துட்டாங்க. என்னை எல்லோரும் கிளம்பச் சொன்னார்கள். 'இல்ல சார் நான் இந்த ஷூட் முடிச்சுட்டு போறேன். சிலோனில் எத்தனையோ அண்ணன் தம்பி இருக்கிறார்கள். சாகுறாங்க. எல்லோருமா பக்கத்தில் இருக்கிறார்கள்' எனச் சொல்லி ஷூட்டிங்கைத் தொடர்ந்தேன். பிறகு, போய் பார்த்தா அண்ணனுடைய கிட்னியை ஹாஸ்பிடலில் திருட்டிட்டாங்க. எல்லாக் காரியமும் முடிச்சுட்டு சென்னைக்குத் திரும்பி வந்தேன்.
அடுத்தடுத்து வடிவேலு கூட நடிச்சேன். அவர் கூட சேர்ந்த முதல் ஆள் நான்தான். பிறகுதான் மற்றவர்கள் சேர்ந்தார்கள். இவனிடம் ஏதோ இருக்குதுனு கண்டுபிடிச்சுட்டார் வடிவேலு. 'சுந்தரா டிராவல்ஸ்', 'மருதமலை', 'வின்னர்' படங்கள் என் கரியர்ல மறக்க முடியாதவை. 'சுந்தரா டிராவல்ஸ்' படம் 'எலி பறக்குதே'ங்கிற பெயரில் மலையாளத்தில் வெளியானது. இந்தப் படத்துல நடிக்கும்போது மாப்பிள்ளை கேரக்டருக்கு நான்தான்னு ஸ்ட்ரிக்டா முடிவெடுத்து வெச்சிருந்தாங்க. ஆனால், இயக்குநர் ஒப்புக்கவே இல்லை. 'அவன் நல்லா நடிக்கலைன்னா, இந்தப் படத்தோட நான் நடிக்கிறதை நிறுத்திக்கிறேன்' எனச் சொன்னார் முரளி. வடிவேலுவும் அதையே சொன்னார். பிறகே, அந்தப் படத்தில் நான் நடித்தேன்.
பஸ் நகர்ந்து என் முகம் தெரியும்போது, கரும்புகையை அடிக்க வேண்டும் என்பதுதான் ஷாட். 'பஸ் புகை அடிக்கும் அவ்வளவுதான்டா'னு சொன்னார் வடிவேலு. ஆனா, காட்சி யதார்த்தமா இருக்கணும்னு எனக்குப் பக்கத்துல வெடியை வச்சிருந்தார். ஷாட் ரெடியானதும் 'பட்'னு வெடிக்க, என் மூக்குல இருந்து ரத்தம் வந்திடுச்சு. ஆனா, மொத்த யூனிட்டும் கைதட்டிப் பாராட்டினாங்க" என்றவர், 'மருதமலை' படத்தில் நடித்த அனுபவத்தைச் சொன்னார்.
அத்துடன் அந்தப் படத்துல நான் நடிச்ச பிச்சைக்காரன் கேரக்டர் ஒரு நிஜ கேரக்டரின் பிரதிபலிப்பு. அசோக்நகரில் நான் இருந்தபோது, அங்கே ஒரு பிச்சைக்காரர் இருப்பார். கசங்கி பாழாய்போன அழுக்கு டிரெஸ்ஸில்தான் இருப்பார். யாரையாவது டீ வாங்கித் தரச் சொல்லிக் கேட்பார். வாங்கிக் கொடுத்தால், அவங்க மூஞ்சியிலேயே ஊத்திடுவார். அதனால, அவரைப் பார்த்தா எல்லோரும் பயப்படுவாங்க. அப்படி என்னை ஒருமுறை வாங்கித்தரச் சொல்லிக் கேட்டார்; தயங்கினேன். 'நீ நல்ல பையன்டா; நீ வாங்கித்தா'னு சொன்னார். தயங்கி தயங்கித்தான் வாங்கிக் கொடுத்தேன். அவர் என்னை எதுவும் பண்ணல. அப்புறம் அந்தப் பக்கம் போகும்போதெல்லாம் அவருக்கு டீ வாங்கிக் கொடுப்பேன். பிறகு, ஒருநாள் லாரியில் அடிபட்டுச் செத்துட்டார்.
அந்த நேரத்துலதான், இதுவரை தமிழ் சினிமா பார்க்காத ஒரு பிச்சைக்காரன் கேரக்டர் இருக்கணும்னு பேசிக்கிட்டு இருந்தாங்க. வேற யாருடைய நடிப்பும் அர்ஜுனுக்கும் வடிவேலுவுக்கும் பிடிக்கலை. என்னைப் பாதித்த பிச்சைக்காரனை மனதில் வைத்து, அப்படியே பிரதிபலித்து நடிச்சேன். எல்லோருக்கும் பிடிச்சுப் போச்சு. அந்த சமயத்துல கலைஞர் ஐயா முதல்வரா இருந்தார். தனிப்பட்ட முறையில் எனக்கும் அவரை ரொம்பப் பிடிக்கும். அவர் காவல்துறையோடு சேர்ந்து 'மருதமலை' படத்தைப் பார்த்தார். அப்போ, 'அந்தப் பிச்சைக்காரனா நடிச்ச பையன், வடிவேலுவையே தூக்கிச் சாப்பிடுட்டான்'னு சொன்னாராம். தொடர்ந்து 'வேலாயுதம்', 'ஜில்லா' படத்துல பிச்சைக்காரனா நடிச்சேன். 'இதென்ன பிச்சைக்காரன் வாரமா'னு கிண்டல் பண்ண விஜய், 'நல்லா நடிக்கிறீங்க'னு பாராட்டினார். 'வின்னர்' படத்துல வாய்ப்புக்காக மொட்டை அடிச்சுட்டு பெரிய மீசை வெச்சுக்கிட்டு போனேன். 'தல தல'னு பேசிக்காட்டினேன். அது சுந்தர்.சி சாருக்குப் பிடிச்சுப்போய் நடிக்க வைத்தார்.
வடிவேலுடன் நடித்த 'ஏபிசிடி'யில் பாம்பை வைத்து பேருந்தில் சீட்டு பிடிக்கிற காட்சியில் நடிக்கப் பலரும் பயந்தார்கள். எப்படியாவது வாய்ப்பு வாங்க வேண்டுமென பக்கத்தில் இருந்த பாம்பாட்டியிடம் 'பாம்பு கொத்தாம இருக்க என்ன பண்ணனும்' எனக் கேட்டு, அந்தக் காட்சியில் நடிச்சேன். 'பல்லைப் பிடுங்கி, வாயைக் கட்டித்தான் வைத்திருப்போம், பயப்படாம நடிங்க'னு சொன்னார் அவர். அந்தக் காட்சியில் நான் நடித்ததைப் பார்த்து வடிவேலு ஆச்சர்யப்பட்டார்" அப்ப்டீன்னு சொன்னார்.
மேலும் ,”மனைவி மாதவியைப் பெண் பார்க்கப்போன இடத்தில் அவரை எந்தக் கேள்வியும் கேட்காமல் திருமணம் செய்துகொண்டேன். அவர் ஒரு மாற்றுத் திறனாளி. காலில் பிரச்னை, கொஞ்சம் திக்கிப் பேசுவார். இந்தப் பெண்ணைப் பார்த்துக் கொடுத்தவர்கள் விஜய கணேஷும் சிங்கமுத்துவும்தான். இருவரும் அவர்கள் வீட்டுக் கல்யாணமாக நினைத்து, எனக்குத் தாலி எடுத்துக் கொடுத்தார்கள். இவர்கள் எல்லோராலும்தான் என் குடும்பம் இப்போது சந்தோஷமாக இருக்கிறது. மகள் பெயர் சாய்குமாரி. மகன் சாய் ராம். ” அப்ப்டீன்னும் சொன்னார்
இந்த போண்டா மணி இரு சிறுநீரகங்களும் செயலிழந்து மருத்துவமனையிலேயே நிலையில், பலரும் உதவி செய்ய முன் வந்தனர். அரசின் நேரடி கண்காணிப்பில் ஓரளவு குணமடைந்து வீடு திரும்பி டயாலிசஸ் செய்து ஓய்வில் நேற்றிரவு வீட்டில் இருந்தபோது மயங்கி விழுந்தவரை, குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, நடிகர் போண்டா மணியின் உடல், சென்னை பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
வீட்டு முகவரி: No.13/413 pozhichalur main road nehru nagar pozhichalur chennai