Breaking News :

Saturday, December 21
.

'லெவன்' படத்திற்கு இமான் இசையில் பாடிய மனோ


ஏ ஆர் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் 'லெவன்'.

 

பல ஆண்டுகளாக திரையுலகில் தொடர்ந்து பயணித்து வரும் நிலையிலும் இதுவரை இணைந்து பணிபுரியாத இசையமைப்பாளர் டி இமானும் பிரபல பாடகர் மனோவும் முதல் முறையாக கைகோர்த்துள்ளனர். விரைவில் வெளியாக உள்ள 'லெவன்' திரைப்படத்திற்காக இமான் இசையில் மனோ பாடியுள்ளார். 

 

உணர்ச்சிப் பூர்வமான இந்த பாடல் குறித்து பேசிய மனோ, "இமான் இசையை தொடர்ந்து ரசித்து வருகிறேன். அவர் இசையமைத்துள்ள பாடல் ஒன்றுக்கு முதல் முறையாக பாடுவது மிக்க மகிழ்ச்சி. உயிரோட்டமிக்க இந்த பாடல் பெரிதும் வரவேற்கப்படும் என்று நம்புகிறேன்," என்றார். 

 

இது குறித்து பேசிய இசையமைப்பாளர் டி இமான், "மனோ அவர்களுடன் இணைந்து பணியாற்றவில்லை என்ற ஏக்கம் பல காலமாக இருந்தது, இன்று அது பூர்த்தியாகி உள்ளது அவரது குரலுக்கு மிகவும் உகந்த பாடலை உணர்ச்சிப்பூர்வமாக அவர் பாடியுள்ளார்," என்று தெரிவித்தார்.

 

'லெவன்' திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ், "திரைப்படத்தின் முக்கியமான கட்டத்தில் இந்த பாடல் இடம்பெறுகிறது. இமான் இசையில் மனோ அவர்கள் முதல் முறையாக பாடியது 'லெவன்' திரைப்படத்திற்காக என்பது மிகுந்த பெருமை," என்று கூறினார். இப்பாடலின் வரிகளை கபிலன் எழுதியுள்ளார். 

 

'சில நேரங்களில் சில மனிதர்கள்' மற்றும் 'செம்பி' ஆகிய பெரிதும் பாராட்டப்பட்ட வெற்றி படங்களை தொடர்ந்து விறுவிறுப்பான புலனாய்வு திரில்லரான 'லெவன்' திரைப்படத்தை தங்களது மூன்றாவது திரைப்படமாக ஏ ஆர் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரிக்கின்றனர். 

 

இயக்குநர் சுந்தர் சி இடம் 'கலகலப்பு 2', 'வந்தா ராஜாவா தான் வருவேன், மற்றும் 'ஆக்ஷன்' ஆகிய திரைப்படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய லோகேஷ் அஜில்ஸ் இந்த புதிய திரைப்படத்தை இயக்குகிறார். 

 

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக உள்ள இத்திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா நாயகனாக நடிக்கிறார். 'சரபம்', 'சிவப்பு' மற்றும் 'பிரம்மன்' உள்ளிட்ட தமிழ் படங்களிலும் சமீபத்தில் வெளியாகி பெரிதும் பாராட்டப்பட்ட வெப் சீரிஸான 'இன்ஸ்பெக்டர் ரிஷி'யிலும்  நடித்துள்ள இவர், இயக்குநர் ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' உள்ளிட்ட பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார். 

 

'சில நேரங்களில் சில மனிதர்கள்' படத்தில் நடித்துள்ள ரியா ஹரி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் 'விருமாண்டி' புகழ் அபிராமி, ஆடுகளம் நரேன், 'வத்திக்குச்சி' புகழ் திலீபன்,  'மெட்ராஸ்' புகழ் ரித்விகா, அர்ஜை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

 

இப்படத்திற்கான இசையை டி. இமான் அமைக்க, பாலிவுட்டில் பணியாற்றிய அனுபவமுள்ள கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவை கவனிக்கிறார். படத்தொகுப்புக்கு தேசிய விருது பெற்ற ஸ்ரீகாந்த் என்.பி. பொறுப்பேற்றுள்ளார்.

 

'லெவன்' திரைப்படம் குறித்த மேலும் தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ், "ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வரும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லராக 'லெவன்' அமையும். திறமைமிக்க நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக இணைந்துள்ளார்கள். அனைவரையும் கவரும் விதத்தில் திரைப்படம் அமையும் என்று நம்புகிறேன்," என்று கூறினார். 

 

ஏ ஆர் என்டர்டைன்மென்ட் பேனரில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் திரைப்படமான 'லெவன்' படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.