Breaking News :

Sunday, February 23
.

கீதா கைலாஸம் இயக்குனர் பாலச்சந்தரின் மருமகள்!


சமீபத்திய வெற்றிப் படங்களிலெல்லாம் ஒரு அம்மா இருக்கிறார். ஆம். கீதா கைலாஸம் என்கிற புகழ் வாய்ந்த இயக்குனர் பாலச்சந்தரின் மருமகள்.

 

சார்பட்டா பராம்பரை, டியர், லப்பர் பந்து, மாமன்னன், அமரன் என விதவிதமான அம்மாக்களை நம் கண் முன்னே நிறுத்தி இருக்கிறார். சிறந்த நடிப்பு இல்லாமல் இதை செய்ய முடியாது.

 

பாலச்சந்தருக்கு 7வது படிக்கும் போதே நாடக ஆசை துளிர் விட தொடங்கியது. அவரும், எதிர் வீட்டு நாகராஜன் என்கிற பையனும் சிவராத்திரிக்கு நாடகம் போடத் தீர்மானித்தனர். நாகராஜனுக்கு நடிப்பு மேல் ப்ரியம். பாலச்சந்தர் ஸ்க்ரிப்ட் எழுத ஆசை கொண்டவர்.

 

பெரிய காசு, ,பணம் இல்லாததால் ஒரு வீட்டுத்திண்ணையில் நாடகம் போட ஏற்பாடானது. நடிக்கும் மற்ற பையன்கள் ஸ்டேஜுக்காக வீட்டிலிருந்து இரண்டு பெட்ஷீட்களை கொண்டு வர வேண்டும். ஆனால் வெளிச்சத்துக்கு என்ன செய்வது?. எதிர்வீட்டு நாகராஜன் கோவிலில் இருக்கும் பெட்ரோமேக்ஸை வாங்கி வருவதாக சொல்ல, மண்ணெண்ணைக்கு என்ன செய்வது?

 

"சிவராத்திரிக்கு நாடகம் போடுகிறோம்" எனச்சொல்லி ஒவ்வொரு வீட்டிலும் காசு வசூல் செய்கின்றனர். மண்ணெண்ணை ரெடி.

 

சிவராத்திரி அன்று சொன்னபடி பெட்ஷீட் எடுக்கலாம் என்றால் கொண்டு போக முடியாமல் கூடத்தில் அப்பா உட்கார்ந்திருக்கிறார். அவருக்கு பாலச்சந்தர் படிப்பைத்தவிர எதில் ஈடுபட்டாலும் கசக்கும். அடி தான். பாலச்சந்தர் நைஸாக அறையில் ஜன்னல் வழியாக பெட்ஷீட்டை வெளியே போட்டு விட்டு, கை வீசிக்கொண்டு அப்பா முன்னால் வெளியே வந்து, பின் பெட்ஷீட்களை எடுத்துக்கொண்டு ஓடிச்செல்ல, மேடை தயார் செய்யப்பட்டது.

 

சொன்னது போல் ஒன்பது மணிக்கு நாடகம் தொடங்கியது. கயிறு கட்டி இழுக்கும் செட்டப் செய்தும் கயிறு சொன்னபடி திறக்கவில்லை. நாகராஜனோ "கடவுள் வாழ்த்து பாடாமல் தொடங்கிட்டோம்...அதான் தடை" எனச்சொல்ல ஒரு பையன் பள்ளியில் பாடும் கடவுள் வாழ்த்தைப்பாட...இம்முறை ஸ்க்ரீன் அழகாக விலகியது கண்டு பாலச்சந்தருக்கே ஆச்சர்யம்.

 

நாடகம் தொடங்கியது. சில நேரம் கழித்து ஹீரோ நாகராஜன் வசனம் பேசுவதை நிறுத்தி விட்டு பாலச்சந்தரின் அருகில் வந்து காதோரமாக "பாலு....எதிரே திண்ணைக்கு அருகே யார் நிக்கிறாங்க பாரு..." என்று சொல்ல, பார்த்த பாலச்சந்தருக்கு கைகால் வெலவெலத்து விட்டது. அப்பா கோபமாக முறைத்துக்கொண்டு நிற்கிறார். "என்னடா கூத்தடிக்கிற..மணி பத்தரை ஆகுது...தோலை உரிக்கிறேன் படவா..." என மேடையேறி கையை பிடித்து தரதரவென இழுத்துப்போகிறார். அன்று விழுந்த அடியில் பாலச்சந்தருக்கு இருந்த ஒரே ஆறுதல் அம்மா தான்.

 

"பாவம்...வருஷத்துக்கு ஒரு நாள் புள்ளாண்டான் நாடகம் போடறான். அதுக்குப் போய் கடிஞ்சுக்கிறேளே... அவனுக்கு அது நல்லா தானே வருது..." எனப்பேசி தந்தையை சமாதானப்படுத்தினார்.

 

ஒரு மாதமாக ரிகர்சல் பார்த்து பாலச்சந்தர் முதன் முதலில் எழுதிய 'பஞ்சாமியின் கனவுகள்' கனவாகவே மேலே நடக்காமல் போனது. எதிர் வீட்டு நாகராஜன் ஹீரோவாகி இப்படி ஆகி விட்டதென புலம்பித்தள்ளுகிறான். "இனிமே நாடகம் போட்டா உங்கப்பா ஊருக்குப்போனா தான் போடணும்.." என சொல்லி சொல்லி ஆற்றுகிறான்...

 

அந்த அடி கொடுத்த அப்பா பெயர் கைலாஸம். அவர் இறந்ததற்குப்பிறகு பாலச்சந்தர் ஏஜி ஆபிசிலிருந்து கொண்டே முதல் நாடகத்தை அரங்கேற்றி திரைத்துறைக்குள் நுழைந்து வெற்றி மேல் வெற்றி குவித்ததெல்லாம் வரலாறு.

 

அந்த எதிர் வீட்டு 'ஹீரோ' நாகராஜனுக்கு பிற்காலத்தில் ஒரு மகள் பிறந்தாள். அவள் பெயர் கீதா. கீதாவை பாலச்சந்தர் தன் மகன் பால.கைலாஸத்துக்கு மணமுடித்து வைக்கிறார். பால கைலாஸம் 2014ல் எதிர்பாராமல் மறைந்து போக, கீதாவும் நடிப்புக்குள் காலடி எடுத்து வைத்ததில் நிச்சயம் ஆண்டவனின் கணக்குகள் ஏதோ இருக்கவே செய்கின்றன....

 

இப்போது தெரிகிறதா?...கீதாவுக்கு இந்த நடிப்பு எங்கிருந்து வந்ததென?

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.