Breaking News :

Saturday, December 21
.

ஜெ. ஜெயலலிதா பிறந்த நாள்


கோமளவள்ளி  என்ற பெயரைக் கொண்ட அம்மு, 'கலைச்செல்வி' என்று தமிழ்த் திரையுலகத்தினரால் போற்றப்பட்ட, பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகை 'செல்வி' ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாள் ஆகும்.
-
தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் எனும் ஊரை பூர்வீகமாக கொண்ட இவர்,கர்நாடக மாநிலம் மேல்கோட்டை என்னும் கிராமத்தில் பிறந்தவர். (பிறப்பு: பிப்ரவரி 24, 1948) சோழர்கள் காலத்தில் ஸ்ரீரங்கத்தில் வைணவர்களின் வாழ்க்கை சிக்கலானதும் அங்கிருந்து பல குடும்பங்கள் பல்வேறு ஊர்களுக்கு இடம் பெயர்ந்தன. இப்படி இடம் பெயர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் கர்நாடக மாநிலம் மேல்கோட்டைக்குச் சென்றன. அந்தக் குடும்பங்களில் இவரது தாத்தாவுடைய குடும்பமும் ஒன்று.அவர் இந்த ஊரிலிருந்த கோவில் ஒன்றில் அர்ச்சகராக இருந்தார். இவரது அன்னை சந்தியா ஒரு தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். இதனால் சென்னையில் வசித்து வந்த ஜெயலலிதா அவர்களுக்கு  பள்ளிப் படிப்பின் இறுதியிலேயே திரைப்பட வாய்ப்புகள் வந்தன. (இவரது சித்தி வித்யாவதியும் சிறந்த நடிகையாவார். 'அலிபாபாவும் 40 திருடர்களும்' படத்தில் எம்.ஜி.சக்ரபாணியுடன் இணைந்து நடித்தவர்)
-
பள்ளிப் படிப்பில் எப்போதும் முதல் மாணவியாகவே திகழ்ந்தார் . அவர் பெங்களூரில் இருந்தபோது பிஷப் கார்டன் பெண்கள் உயர் நிலைப் பள்ளியில் படித்தார். சென்னைக்கு வந்த பின்னர் 1958-ஆம் ஆண்டு முதல் 1964 -ஆம் ஆண்டு வரை சர்ச் பார்க் பிரசன்டேஷன் கான்வென்ட்டில் படித்து மெட்ரிக் தேறினார். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் புகுமுக வகுப்பில் படிக்க அனுமதி கிடைத்த நேரத்தில் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 
 தாய் மொழி தமிழைப் போல் ஆங்கிலம், கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம் முதலான பிற மொழிகளையும் சரளமாக பேச கற்றுக்கொண்டார். ஷங்கர்.வி.கிரி அவர்கள் இயக்கிய “எபிஸில்” என்ற ஆங்கில ஆவணப் மூலமாக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார்.1964 -ல் ஜெயலலிதா அவர்களின் திரையுலகப் பிரவேசம் “சின்னடா கொம்பே” என்ற கன்னடப் படத்தின் மூலம் அதிகாரபூர்வமாக அறிமுகமானது. இப்படத்தின் இயங்குனர் பந்துலு அவர்கள். இந்தப் படத்தில் ஜெயலலிதாவின் ஜோடி கல்யாண்குமார். 
1965-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஸ்ரீதர் இயக்கிய 'வெண்ணிற ஆடை' என்கிற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். 'வெண்ணிற ஆடை' படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே பி.ஆர்.பந்துலுவின் “ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தார். இதில் ஆயிரத்தில் ஒருவன் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. அவர் நடித்த பல படங்கள் நன்றாக ஓடி பாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்றன. சிவாஜி அவர்களுடன் இவர் நடித்த 'பட்டிக்காடா பட்டணமா' கருப்பு வெள்ளை தமிழ் திரைப்படங்களிலேயே மிக அதிக வசூல் பெற்று சாதனை புரிந்தது. 
1960-ம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் தனது பரதநாட்டிய அரங்கேற்றத்தைச் செய்தார் ஜெயலலிதா. அந்த விழாவுக்கு தலைமை தாங்கியவர் 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன். ‘பெரிய சினிமா நடிகையாக வருவார்’ என்று சிவாஜியிடம் வாழ்த்து பெற்றவர், பின் நாட்களில் அவருடனேயே  இணைந்து 17 படங்களில் நடித்தார்.
முதல் படத்திலேயே கதாநாயகியாகி, புகழ் ஏணியின் உச்சிக்கு சென்ற ஜெயலலிதா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று பல மொழிகளிலும் நடித்தார். இதில் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு ஜோடியாக 28 படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஜோடி மிகவும் புகழ் பெற்றது. ஜெயலலிதாவின் அழகு, திறமை, நாட்டியம்  அவருக்கென்று  தனி ரசிகர்களைப் பெற்றுக் கொடுத்தது. ஜெயலலிதா அப்போது தமிழ்த் திரைப்பட நடிகர்களில் முக்கியமானவர்களாக இருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன்,ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஏவி.எம்.ராஜன்,முத்துராமன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார்.
அடிமைப் பெண்,  ரகசியபோலீஸ், காவல்காரன், குடியிருந்த கோவில், என் அண்ணன், கந்தன் கருணை, கலாட்டா கல்யாணம், எங்கிருந்தோ வந்தாள், பட்டிக்காடா பட்டணமா, சுமதி என் சுந்தரி, பாட்டும் பரதமும் , யார் நீ, நான், சூரியகாந்தி, வந்தாளே மகராசி  ஆகிய படங்கள்  ஜெயலலிதாவின் திரை உலகப் பயணத்தின் மைல்கற்களாக அமைந்தன. இயற்கையாகவே அழகான தோற்றம்கொண்ட ஜெயலலிதா அந்த இளவயதிலேயே படத்துக்குப் படம் நடிப்பில் வேறுபாடுகள் காட்டினார். அதனால் அவரை மானசீகமாக விரும்பக்கூடிய ரசிகர்கள் பெருகினார்கள். நடிகர் திலகத்துடன் அவர் நடித்த 'எங்கிருந்தோ வந்தாள்' படம் அவரது சிறந்த நடிப்பை எடுத்துக் காட்டியது. தெலுங்குப் படங்களில் என்.டி.ராமாராவ், நாகேஸ்வரராவ் போன்ற பிரபலங்களுடன் நடித்து அவர்களுக்கிணையாக புகழ் பெற்றார் ஜெயலலிதா. இந்தியில் தர்மேந்திராவிடன் கூட ஜோடியாக நடித்துள்ளார் ஜெயலலிதா. (Izzat 1968 ) மலையாளத்தில் 'ஜீசஸ்' என்ற ஒரு படம் மட்டுமே நடித்தார். தமிழில் 87 படங்களும், தெலுங்கில் 29 படங்களும், கன்னடத்தில் 7 படங்களிலும் நடித்துள்ளார்
புடவை, நவீன ஆடைகள் என எந்த ஆடையும் பொருந்தும் உடல்வாகு அவருக்கு இருந்தது. ‘வந்தாளே மகராசி’, ‘பாக்தாத் பேரழகி’ படங்களில் சண்டைக் காட்சிகளிலும் தான் சளைத்தவரில்லை என்று நிரூபித்தார்.
'காவிரி தந்த கலைச்செல்வி' என்று நாட்டிய நாடகங்களும் அரங்கேற்றம்  செய்து அசத்தினார் ஜெயலலிதா. 'சோ'வின் நாடகமான ‘யாருக்கும் வெட்கமில்லை’ படமாக்கப்பட்டபோது ஜெயலலிதா அதில் நடித்தார். மிக வித்தியாசமான பாத்திரம் அது. அவருடைய உயரிய ஆற்றல் வெளிப்பட்ட படம் ‘சூரியகாந்தி’. கணவனுக்கு மனைவியிடம் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை குறித்த படம். ஜெயலலிதா சொந்தக் குரலில் பாடிய பாடல் இடம் பெற்ற இந்தப் படத்தின் நூறாவது நாள் விழா தந்தை பெரியார் தலைமையில் நடந்தது.
ஜெயலலிதாவின் 100 வது படமான “திருமாங்கல்யம்” 1977_ல் வெளிவந்தது. அதன்பின் படங்களில் நடிப்பதைப் படிப்படியாக அவர்  குறைத்துக்கொண்டார். 1960, 70 -களில் அசைக்க முடியாத நாயகியாக திகழ்ந்த ஜெயலலிதா, சுமார் 16 ஆண்டுகளில் 112 படங்களில் நடித்து முடித்தார். 1970-களின் தொடக்கத்தில் இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக புகழ் பெற்று வலம் வந்தவர் ஜெயலலிதா.1980-இல் வெளிவந்த “நதியைத்தேடி வந்த கடல்” என்ற திரைப்படம்தான் அவர் நடித்து கடைசியாக வெளிவந்த படம்.
மிகச் சிறந்த பாடகியாகவும் ஜெயலலிதா விளங்கினார். 'அடிமைப் பெண்' படத்தின் 'அம்மா என்றால் அன்பு' என்று இவர் பாடிய பாடல் பிரபலம். 'ஓ..மேரி தில்ரூபா' என்று டி.எம்.எஸ் அவர்களுடன் .. அவர் பாடிய பாடல் இன்றும் பிரபலம். அது போல 'வைரம்' படத்தில் எஸ்.பி.பி யுடன் இவர் பாடிய 'இரு மாங்கனி போல் இதழோரம்' பாடல் மிகப் பிரபலம். 
-
**********************************
கலைசெல்வி ஜெயலலிதா அவர்கள் சம்பந்தபட்ட திரை உலக பதிவுகளுக்கு மட்டுமே அனுமதி.
அவரது சொந்த வாழ்க்கை --அரசியல் வாழ்க்கை பற்றிய பதிவுகள்--கமண்ட்டுகளுக்கு அனுமதி இல்லை. 
பதிவுகளிலும் கமண்ட்-( பின்னூட்டங்கள்)-(COMMENT) கண்ணியமானதாகவும் நாகரீகமாகவும் இருத்தல் அவசியம்.
சர்ச்சைக்குரிய கமெண்டுகள் , பதிவுகள் , நீக்கப்படும் . 
 
***********************
ஜெயலலிதா நடித்த முக்கிய தமிழ்த் திரைப்படங்கள் 
வெண்ணிற ஆடை
ஆயிரத்தில் ஒருவன்
தனிப்பிறவி
சந்திரோதயம்
குமரிப்பெண்
யார் நீ?
நீ
மோட்டார் சுந்தரம்பிள்ளை
நான்
அரச கட்டளை.
காவல்காரன்
மூன்றெழுத்து 
முத்துச் சிப்பி
தெய்வ மகன்.
மாட்டுக்கார வேலன்
அடிமைப்பெண்
அனாதை ஆனந்தன்
எங்கிருந்தோ வந்தாள் 
சவாலே சமாளி
ரகசிய போலீஸ் 115
கலாட்டா கல்யாணம்
சூர்யகாந்தி
பட்டிக்காடா பட்டணமா
ராஜா
அவன்தான் மனிதன்
பாட்டும் பரதமும்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.