நான் அப்பாவி என்றும் தன்னை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்றும் சிறையில் உள்ள பிரபல யூடியூபர் டி.டி.எஃப்.வாசன் ஜாமீன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளார்.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாலு செட்டி சமுத்திரம் அருகே பைக்கில் வந்த பிரபல யூடியூபர் டி.டி.எஃப்.வாசனின் பைக் விபத்துக்குள்ளானது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. இதைத் தொடர்ந்து அவர் மீது ஐந்து சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
உடனடியாக கைது செய்யப்பட்ட அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவர் தனக்கு விபத்து காரணமாக கை மற்றும் முதுகில் வலிக்கிறது என்று அழவே, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட தினத்தில் மனு செய்திருந்தார். இரண்டு முறையும் அவர் மனு நிராகரிக்கப்பட்டது. மேலும் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த புதிய ஜாமீன் மனுவை அவரது வழக்கறிஞர் திரும்பப் பெற்றுள்ளார். அதற்கு பதில் சென்னை உயர் நீதிமன்றத்தில் டி.டி.எஃப்.வாசன் சார்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் "நான் எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை. நடந்தது எதிர்பாராத விபத்து. நான் ஒரு அப்பாவி. எனவே, தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் எந்த ஒரு நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுவேன்" என்று கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் விபத்து காரணமாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் கருணை அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. வாசனின் நீதிமன்ற காவல் அக்டோபர் 16ம் தேதி நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.