80,90களில் ஐட்டம் டான்ஸ் மூலமாக இளசுகளை கட்டிப்போட்டவர் நடிகை டிஸ்கோ சாந்தி. பழம்பெரும் நடிகரான ஆனந்தன் என்பவரின் மகள்தான் டிஸ்கோ சாந்தி. வீரத்திருமகன் படத்தில் நடித்த ஆனந்தன் தான் இவர். அப்பேர்ப்பட்ட நடிகரின் வாரிசாக இருந்து எப்படி இந்த ஐட்டம் நடனத்திற்குள் வந்தார் என்பதுதான் அனைவருக்கும் ஆச்சரியமான விஷயம்.
ஒரு காலகட்டத்தில் ஆனந்தன் தன்னுடைய செல்வாக்கு எல்லாவற்றையும் இழந்திருந்த நிலையில் தன்னுடைய குடும்பத்தை கட்டிக் காக்கும் பொறுப்பை டிஸ்கோ சாந்தி முழுவதுமாக ஏற்றுக் கொண்டார். ஒரு பக்கம் தன்னுடைய தங்கை இன்னொரு பக்கம் சகோதரர்கள் என இவருடைய குடும்பம் மிகப்பெரியது. அதனால் ஒட்டுமொத்த குடும்பத்தையும் காக்கும் பொறுப்பு டிஸ்கோ சாந்திக்கு வந்தது.
அதனால் தான் ஐட்டம் நடனத்தை தேர்வு செய்தார். எப்படி 80களில் சில்க் ஸ்மிதா ஒரு கனவு கன்னியாக இருந்தாரோ அதேபோல் ஒரு அந்தஸ்தை பெற்றார் டிஸ்கோ சாந்தி. தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழி சினிமாக்களிலும் இவருடைய நடனத்திற்கு என்று பல ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்த காலமும் உண்டு.
திருமண வயதை எட்டினாலும் தன்னுடைய வாழ்க்கையை பற்றி பொருட்படுத்தாமல் தன் தங்கைக்கும் தன் சகோதரர்களுக்கும் திருமணம் செய்து வைத்து அழகு பார்த்தவர் டிஸ்கோ சாந்தி. தன்னுடைய தங்கையும் நடிகையுமான லலிதா குமாரி பிரகாஷ்ராஜை காதலித்து திருமணம் செய்தார். பிற்காலத்தில் அவர்கள் திருமணம் கருத்து வேறுபாட்டால் பிரிந்தது. அதன் பிறகு டிஸ்கோ சாந்தி தெலுங்கில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த நடிகர் ஸ்ரீ ஹரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஸ்ரீ ஹரி சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வில்லனாக குணச்சித்திர நடிகராக அதன் பிறகு ஹீரோவாக நடித்து தெலுங்கில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறினார். அதற்கு பக்கபலமாக இருந்தவர் டிஸ்கோ சாந்தி. அவர்களுக்கு மூன்று பிள்ளைகள். அதில் ஒரு குழந்தை சிறு வயதிலேயே இறந்து போய்விட்டது.
அதன் பிறகு அவருடைய காதல் கணவரான ஸ்ரீஹரியும் உடல்நிலை காரணமாக இறந்து போனார்.
தன் கணவரின் பிரிவை தாங்க முடியாமல் மிகவும் மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார் டிஸ்கோ சாந்தி.
இருந்தாலும் மீதமுள்ள தன் இரண்டு பிள்ளைகளுக்காக தன் வலிகளை எல்லாம் தாங்கிக் கொண்டு அந்தப் பிள்ளைகளுக்காகவே வாழ்ந்து வந்தார். இப்போது தன் மகன்களில் ஒருவரை ஹீரோவாகவும் மற்றொருவரை இயக்குனராகவும் ஆக்க வேண்டும் என்ற முயற்சியில் டிஸ்கோ சாந்தி இருந்து வருகிறார்.
அது மட்டுமல்லாமல் தனக்கு வரும் சம்பளத்தை முழுவதுமாக தனக்கே வைத்துக் கொள்ளாமல் பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர் டிஸ்கோ சாந்தி. தான் வாங்கும் சம்பளத்தில் திடீரென யாராவது உதவி எனக் கேட்டு வந்தால் அதை அப்படியே கொடுக்கும் மனப்பாங்கு கொண்டவர்.
இப்படி பல பேருக்கு உதவிகளை செய்து வந்திருக்கிறார் டிஸ்கோ சாந்தி.ஐட்டம் டான்ஸ் ஆடக் கூடியவர் என்றால் அவரின் கேரக்டரை தவறாக சித்தரித்து பேசும் இந்த உலகத்தில் அதை எல்லாம் சுக்கு நூறாக உடைத்து ஜெயித்துக் காட்டியவர் டிஸ்கோ சாந்தி.
நன்றி: தமிழச்சி கயல்விழி