ஜப்பான் நாட்டை சேர்ந்த இயக்குனர் Hirokazu Koreedaவின் முத்திரை பதித்த குடும்ப பாசமிக்க படம். இயற்கையான எண்ண பிரதிபலிப்புகள். திரைக்கதை வசனமும் அவரே பொறுப்பேற்றிருக்கிறார்.
சமுதாயத்தின் இருவேறு மட்டங்களில் வாழும் இரு குடும்பங்களும் காலத்தின் கட்டாயத்தால் நெருங்கவேண்டிய சூழ்நிலை. உணர்ச்சிமிக்க சூழ்நிலைகள் நம் மனதில் வேறூன்றி பதிந்து விடுகின்றன.
ரியோடா ஒரு கட்டிடக்கலை நிபுணர். தன் சுயமுயற்சியால் கடின உழைப்பால் வெற்றிநடை போடுகின்றான். அவன் மனைவி மிடோரி, ஆறு வயது மகன் கெய்டாவுடன் சமுதாயத்தின் மேல்தட்டில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும்போது, திடீரென்று ஒரு போன் அழைப்பு அவன் குடும்பம் எனும் கட்டிடத்தையே அசைத்து விடுகிறது. அவன் செய்வது அறியாது திகைக்கிறான். ஆம், அவன் மகனாக சீராட்டி வளர்க்கும் செல்லப்பிள்ளை கெய்டா அவன் மகன் இல்லை. இதுவே அவன் மகன் பிறந்த மருத்துவமனையில் இருந்து ஆறு வருடங்களுக்குப் பிறகு அவனுக்கு கிடைத்த அதிர்ச்சியூட்டும் செய்தி.
அவன் மனைவி தான் வளர்க்கும் பிள்ளையின் பிறப்பு பற்றி உண்மையை அறிந்தபின்பும், தன் பெற்ற பிள்ளையை அவர்கள் மகனாக வளர்க்கும் இன்னொரு குடும்பத்தைப் பற்றி அறிந்தபின்பும் பாசத்தால் கட்டுண்டு கிடக்கிறாள். கணவனோ, இரத்தப்பாசமா? வளர்த்தப் பாசமா? குழம்பிப் போகிறான். முடிவு எடுக்க முடியாமல் திணறுகிறான். வாழ்க்கையில் வென்று விட்டதாக நினைத்து வீறுநடைபோட்ட அவனுக்கு இது நிலைகுலைய வைக்கும் தருணம்.
தான் பெற்ற மகனை நினைத்து உருகுகிறான். வளர்த்த பாசம் அவனை வாட்டி வதைக்கிறது. அவனுடைய சொந்த மகன் ஒரு சராசரி மத்தியதர குடும்பத்தில் சற்று கடின வாழ்க்கைதான் வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஆனாலும் அந்த குடும்பத்தில் தாய் தந்தையருடன் ஆனந்தமாகவே இருக்கிறான்.
காலத்தின் கட்டாயத்தால் சமூக நீதியால் இரத்த சம்பந்தத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இரண்டு குடும்பங்களும் தங்கள் மகனாக கருதி ஆறு வருடங்களாக அன்பை பொழிந்து ஆறுதல் பெற்று சீராட்டி வளர்த்த பிள்ளைகளை ஏற்றுக் கொண்டாலும் பெற்றோர்கள் குழந்தைகளை பிரிய முடிவெடுத்து விட்டனர். ஆனால் பிள்ளைகளின் நிலை என்ன?
மகன் கெய்டாவோ தன் பெற்றோருடன் நடுத்தர வாழ்க்கையை தொடங்குகிறான். முதலில் தடுமாற்றம்தான். பல ஏமாற்றங்கள். தவிர்க்க முடியாத கோபங்கள். சிறுவன்தானே; பெற்றோர்களின் அன்பு மழையில் சிறிது சிறிதாக தெளிவடைகிறான். மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முயற்சிக்கிறான். ஆனாலும் பக்குவமாகாமல் உணர்ச்சி போட்டத்தில் சிக்கி தவிக்கிறான். ரியோடாவின் உண்மை மகனோ, அவன் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை மிகவும் யதார்த்தமானது. சற்று கரடுமுரடானது. செல்வ செழிப்பு அவனுக்கு புதியது; பகட்டும் ஆரம்பரமும் அவனுக்கு பழக்கமில்லாதது. புதிய வாழ்க்கையை அவன் அனுபவித்தாலும் அவன் பழகிய பாதையை விட்டு வெறியேற முடியவில்லை. சிறு சிறு அனுபவங்களையும், அவன் விட்டுக்கொடுக்க முடியவில்லை. அவன் தான் இதுவரை வளத்த பெற்றோருடன் கொண்ட யதார்த்தமான பிணைப்பு, ரியோடாவை அதிர வைக்கிறது. குழந்தைகம் புதிய வாழ்க்கையில் புதைந்து போகமுடியாமல் தவிக்கிறார்கள். கடந்து வந்த பாதை ஆழமாக பதிந்து விட்டது.
இரண்டு பெற்றோர்களும் உண்மையை உணர்ந்து கொள்கிறார்கள்/ அவரவர் வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் ஏராளம். ஆனாலும் உள்ள உணர்வுகள் ஒன்றுதான்.
ரத்தபாசம் வெற்றி பெற்றாலும், வளர்த்த பாசம் விட்டுக் கொடுப்பதற்கில்லை. குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்தான். இரு பெற்றோர்களுக்கும் இருவருமே குழந்தைகள்தான். பெற்றால்தான் பிள்ளையா? பாசம் எப்போதும் போவதில்லை. இரு குடும்பங்களும் இணைந்து இரு பிள்ளைகளும் தம் பெற்றோர்களுடன் அழகாக இணைகிறார்கள். மனித மனத்தின் உண்மையான உணர்வுகளுக்கு கிடைத்த உன்னதமான அன்பு பரிசு. இயக்குனரின் முயற்சிக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி.
2013ம் ஆண்டு கான்ஸ் திரைப்பட விழாவில் சிற்ந்த திரைப்படத்திற்கான பரிசு இப்படத்திற்கு கிடைக்கவில்லை என்பது மிகப்பெரிய ஏமாற்றமாகவே ரசிகர்களின் மத்தியில் உணரப்பட்டது.