ஒல்லியான முகம், கலைந்த தலை, வாயில் பீடி, விளையாடும் சென்னைத்தமிழ், வெள்ளை பனியன், பச்சை பெல்ட், கைலி, கழுத்தில் கர்சீப் என தனக்கே உரிய அடையாளங்களோடு வந்து சினிமாவை கலகலக்கச் செய்யும் இந்த காமெடி புயல் தான் லூஸ் மோகன்.
குறிப்பாக கண்ணை சுருக்கிக் கொண்டு ஒருவிதமான இழுவை ராகத்துடன் இவர் பேசும் சென்னைத் தமிழைக் கேட்டாலே போதும். நமக்கு சிரிப்பு வந்து விடும். வேலைக்காரன், ரிக்ஷாக்காரன், வாட்ச்மேன், உடுக்கை அடித்து குறிசொல்பவன் என சாதாரண மனிதனின் வேலை தான் இவரது கதாபாத்திரங்கள்.
ஆயிரக்கணக்கான படங்கள், பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் தான் இவர்.
எம்ஜிஆர் திரைக்கு வந்த காலத்தில் தான் இவரும் நடிக்க ஆரம்பித்துள்ளார். அப்போது இவர் ஒரு படத்திற்கு நடிக்க சம்பளம் எவ்வளவு தெரியுமா? வெறும் 3 ரூபாய் தான். கடைசியாக இவர் நடித்தது எவ்வளவு என்றால் இன்னும் ஆச்சரியமாக இருக்கும். வெறும் 3000 ரூபாய் சம்பளத்திற்குத் தானாம்.
இவ்வளவுக்கும் 3 தலைமுறை காமெடி நடிகர்களுடன் நடித்து விட்டார். அப்படி இருந்தும் இவரது சம்பளம் மட்டும் ஏறவே இல்லை. பிறரை சிரிக்க வைத்துவிட்டு தான் சோகமாகவே வாழ்ந்து மறைந்துள்ளார் லூஸ்மோகன்.
நடுத்தரக்குடும்பத்தில் பிறந்தார். இவரது உண்மையான பெயர் ஆறுமுகம் மோகனசுந்தரம். வருமானம் குறைவாக இருந்ததால் தெருக்கூத்து மற்றும் நாடகங்களில் அவ்வப்போது நடித்து வந்தார்.
நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துள்ளார். 1931க்குப் பிறகு பேசும் படங்கள் வர ஆரம்பித்த காலத்தில் முதன் முதலாக லூஸ் அண்ட் டைட் என்ற காமெடி கலந்த நாடகத்தில் லூஸ் வேடத்தில் நடித்தார் ஆறுமுகம்.
ஆங்கில படங்களில் நடிக்கும் லாரல் அண்டு ஹார்டி ஆகிய இரட்டை காமெடியர்களின் படத்தைத் தழுவியது இந்த நாடகம். இந்தப்படத்தில் இருந்து ஆறுமுகத்தின் பெயர் லூஸ் ஆறுமுகமானது. சிவாஜி நடித்த நீலவானம் படத்தில் நடித்துள்ளார் ஆறுமுகம்.
தந்தையைப் பார்த்து வளர்ந்த லூஸ் மோகனுக்கு படிப்பில் நாட்டமில்லை. அவருடன் சேர்ந்து மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவரது முதல் படம் 1944ல் வெளியான பி.யு.சின்னப்பாவின் ஹரிச்சந்திரா படம்.
அப்போது லூஸ் மோகனுக்கு வயது 16. முதல் படத்திலேயே பெரிய நட்சத்திர நடிகருடன் நடித்தும் இவருக்கு தொடர்ந்து நடிக்க வாய்ப்பு வராமல் போனது. இதனால் தனது தந்தையுடனே சேர்ந்து நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
இருந்தாலும் சினிமா காதல் அவரை விட்டுப் போகவில்லை. விடாமல் முயற்சி செய்தார். 1970களில் அன்பளிப்பு, குழந்தைக்காக, அக்கரை பச்சை, கடவுள் மாமா, கட்டிலா தொட்டிலா, மதன மாளிகை உள்பட பல படங்களில் சிறு சிறு வேடங்களில் லூஸ் மோகன் நடிக்க ஆரம்பித்தார்.
ஆனாலும் இவர் எதிர்பார்த்த அளவில் பெரிய அங்கீகாரம் எதுவும் கிடைக்கவில்லை. அப்போது இவர் ஓலைக்குடிசையில் தான் வாழ்ந்துள்ளார். படப்பிடிப்பிற்காக முன்கூட்டியே செல்ல வேண்டும் என்று பஸ்சில் செல்வாராம். வரும்போது சம்பளத்தை மிச்சம் பிடிக்க வேண்டும் என்று நடந்தே வருவாராம்.
1979ல் தேவராஜ், மோகன் என்ற இரட்டை இயக்குனர்களின் இயக்கத்தில் வெளியான ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தில் தான் இவருக்கு கொஞ்சம் பெயர் கிடைத்தது. சிவக்குமார், தீபா, சிவச்சந்திரன் இவர்களுடன் இணைந்து பிராக்கெட் மோகன் என்ற கேரக்டரில் வந்து அசத்துவார் லூஸ்மோகன். அப்போது இவரது பெயர் பிராக்கட் மோகன் தான்.
மனைவி பச்சையம்மாள் 2004ல் இறந்து விட கடைசியில் முதுமைகாலத்தில் தனியாக இருந்து கஷ்டப்பட்டுள்ளார். தன்னால் நடிக்க முடியாமல் வறுமை வாட்ட பசியும் வாட்டியது. இதனால் தன் பிள்ளைகள் மேலே காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். மகன் இருந்தும் அனாதையாக உள்ளேன் என்றார்.
அவர் வாங்கிய சொத்துக்கள், பொருட்கள் அனைத்தையும் அவரது வாரிசுகளின் பெயரில் வாங்கியது தான் அவர் செய்த மிகப்பெரிய தவறு. அதனை எல்லாம் வாங்கி வைத்துக்கொண்டு இவரை துரத்தி விட்டனர் அவரது மகன் மகள்கள்.
அவருக்கு சாப்பாடு கூட தராத அளவிற்கு அவரை கொடுமை செய்துள்ளனர். பின்னர் 2012 செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி தந்து 84 வயதில் மரணம் அடைந்தார்.