ஒருமுறை வாலியின் வீட்டில் பாம்பு புகுந்த நிகழ்வு பரபரப்பானது. வனத்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் வீட்டிற்குள் நுழைந்து பாம்பை பிடிக்கும் முயற்சியில் இறங்கியபோது மீடியாவும் வந்துவிட்டது. பத்திரிகையாளர்களைப் பார்த்த வாலி.. "படமெடுக்கும் பாம்பை படமெடுக்க வந்திருக்கும் பத்திரிகையாளர்களே வருக வருக" என வரவேற்றாராம். வாலிக்கு மீன்குழம்பு என்றால் மிக இஷ்டம், ஐயங்கார் நீங்க மீன்குழம்பு சாப்பிடுகிறீர்களே என பத்திரிகையாளர் ஒருவர் கேட்டதற்கு... "நான் பிராமின்.... எனக்கு பிடிக்கும் மீன்" என பஞ்ச் அடித்திருக்கிறார். வாலியின் கற்பனை வளம், சொல்வளம், தமிழ்வளம் இவற்றைத் தாண்டி என்றும் இளமையோடு இருந்ததுதான் அவரின் மிகப்பெரிய ப்ளஸ். எம்ஜிஆருக்கும் சிவாஜிக்கும் பாட்டெழுதிய அதே விரல்கல்கள்தான் தனுஷுக்கும் எழுதியது.
சமகால இளைஞர்களின் நாடித்துடிப்பை தேடிப்பிடித்து சாதித்தவர் வாலி. வாலி = ஜாலி என சொல்லிமளவிற்கு கொண்டாட்டமாக இருந்த வாலி. அவர் இரண்டு தருணங்களில் மிகவும் வேதனைப்பட்டு கண்கலங்கினார் எனச் சொல்கிறார்கள். ஒன்று கண்ணதாசன் மறைவு, மற்றொன்று அவர் காதல் மனைவி ரமணத்திலகத்தின் மறைவு. கண்ணதாசனின் மறைவுக்கு "எழுதப்படிக்கத் தெரியாத எத்தனையோபேர்களில் எமனும் ஒருவன். ஒரு அழகிய கவிதைப் புத்தகத்தை கிழித்து போட்டுவிட்டான்" என்று இரங்கற்பா எழுதி கண்ணீர்விட்டார்.
.
கவிஞர் வாலி ஓர் நினைவு

.