Breaking News :

Saturday, December 21
.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நினைவு நாள்: புட்டு பாட்டி கதை


அதிகாலை பொழுது, சென்னை யானைக்கவுனி பகுதியில் வாக்கிங் போய்க் கொண்டிருந்தார் எம்ஜிஆர்.

 

அது எம்.ஜி.ஆரின் ஆரம்ப காலம். இளமைக்காலத்தில் பெரும்பாலும் வறுமையில்தான் வாழ்ந்தார் எம்ஜிஆர்.

 

அப்போது அவர் குடியிருந்த இடம்தான் யானைகவுனி. 

 

எம்ஜிஆர் வழக்கமாக வாக்கிங் போகும் வழியில், சாலையோரம் அமர்ந்து, புட்டு சுட்டு விற்றுக் கொண்டிருப்பாராம் ஒரு பாட்டியம்மா. அந்த பாட்டியிடம் தனக்கும், தன்னுடன் இருந்த நண்பர்களுக்கும் புட்டு வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தார் எம்ஜிஆர்.

 

அப்படி ஒரு நாள் காலையில் வாக்கிங் போய்விட்டு, அந்த பாட்டியிடம் புட்டு வாங்கச்  சென்ற எம்.ஜி.ஆர்., தன் கையில் இருந்த காசை எண்ணிப் பார்த்து விட்டு கொஞ்சம் தயங்கி நின்றார். "பாட்டி, இன்றைக்கு புட்டு வேண்டாம். நாளைக்கு வாங்கிக்கறேன்."

 

பாட்டி நிமிர்ந்து எம்ஜிஆர் முகத்தை பார்த்தார். “ஏம்பா..?”  

 

தயக்கத்துடன் சொன்னார் எம்ஜிஆர் : “பாட்டி.. நான் எனக்கு மட்டும் வாங்க வரவில்லை. என்னோடு இருக்கும் மூணு பேருக்கும்  சேர்த்து வாங்க வேண்டும் என்றுதான் வந்தேன். ஆனால்..?”

 

“என்ன ஆனால் ?” என்று பாட்டி கேட்டாராம்.

 

“அவ்வளவு பேருக்கும் சேர்த்து வாங்கக் கூடிய அளவுக்கு இன்னைக்கு என் கையில் காசு இல்லை பாட்டி" என்று உண்மையைச் சொல்லி விட்டாராம்  எம்.ஜி.ஆர். 

.

எம்.ஜி.ஆர். முகத்தை உற்றுப் பார்த்த பாட்டி என்ன நினைத்தாரோ ?

“பரவாயில்லே! நாளைக்கு வரும் போது காசு குடுப்பா " என்று சொல்லி எல்லோருக்கும் சேர்த்து புட்டை பார்சல் செய்து எம்.ஜி.ஆர். கையில் கொடுத்தாராம்.

 

எம்.ஜி.ஆர். இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

 

பாட்டி கொடுத்த பார்சலை வாங்காமல் எம்.ஜி.ஆர். ஏதோ சிந்தித்துக் கொண்டிருக்க, சிரித்துக்  கொண்டே பாட்டி கேட்டாராம்: "என்னப்பா யோசிக்கிறே ?”

 

“ஒண்ணும் இல்ல, ஒருவேளை நாளைக்கு நான் காசு கொண்டு வராம உன்னை ஏமாத்திட்டா என்ன பண்ணுவே பாட்டி ?” 

 

பாட்டி பதட்டமில்லாமல் சிரித்துக் கொண்டே சொன்னாராம் : “காசு வந்தா வியாபாரத்துல சேரப் போவுது. வரலேன்னா உங்க எல்லோருக்கும் பசியைத் தீர்த்த புண்ணியம் வருது. அது தருமக் கணக்குல சேர்ந்துடும்.” 

 

பாட்டி சாதாரணமாகச் சொன்ன இந்த பதில் எம்ஜிஆரின் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது.

 

தன் வாழ்வில் தான் சந்தித்த ஒவ்வொரு மனிதரிடமிருந்தும், ஏதாவது ஒரு பாடத்தை கற்றுக் கொண்டு, தன் வாழ்வை மேம்படுத்திக் கொண்ட ஒரு மனிதன்... எம்ஜிஆரை தவிர வேறு எவரும் நிச்சயமாக இருக்க முடியாது.

 

எம்ஜிஆர் பிற்காலத்தில் செய்த எத்தனையோ தானதர்மங்களுக்கு, 

அந்தப் பாட்டிதான் காரணமாக இருந்திருப்பார் என்று எனக்கு தோன்றுகிறது.

 

சொன்னபடியே மறுநாள் தேடிச் சென்று அந்தப் பாட்டிக்கு கொடுக்க வேண்டிய காசைக் கொடுத்து விட்டாராம் எம்.ஜி.ஆர்.

 

பிற்காலத்தில் எம்.ஜி.ஆர். அந்தப் பாட்டி பற்றி விசாரித்து, உதவிகள் பல செய்ததாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்.

 

இந்தப் பூமியிலே அந்த  புட்டுப் பாட்டி எவ்வளவு காலம் வாழ்ந்தார் என்பது தெரியவில்லை.

 

ஆனால் எம்.ஜி.ஆரின் இறுதி மூச்சுவரை அந்த புட்டு பாட்டி, எம்.ஜி.ஆரின் இதயத்தில் வாழ்ந்திருப்பாள்.

அதில் எனக்கு சந்தேகமே இல்லை.

John Durai Asir Chelliah

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.