Breaking News :

Saturday, December 21
.

நடிகவேள் எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரைத் துப்பாக்கியால் சுட்ட நாள் இன்று


நடிகவேள் எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரைத் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் நிகழ்ந்து இன்றோடு 57 ஆண்டுகள் நிறைவு

 

ராமவாரம் தோட்டத்தில் 1967-ம் ஆண்டு ஜனவரி 12-ல் என்ன நடந்தது?

 

1967 பொதுத்தேர்தல் தமிழக வரலாற்றில் நீங்கா இடம்பிடித்துவிட்ட தேர்தல். அந்தத் தேர்தலில்தான் தமிழகத்தில் முதல்முறையாக அண்ணா தொடங்கிய தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் இல்லா அரசு தமிழகத்தில் அமைந்தது அதுவே முதல்முறை. அப்போது, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த எம்.ஜி.ஆர், தி.மு.க-வில் இணைந்து தீவிரமாகப் பணியாற்றி வந்தார். அந்த காலகட்டத்தில் சினிமாவிலும் அவர் பிஸியாக நடித்து வந்தார். 1966-ல் எம்.ஜி.ஆர் நடித்து நான் ஆணையிட்டால் தொடங்கி பெற்றால்தான் பிள்ளையா வரை 9 படங்கள் தயாராகின. பெற்றால்தான் பிள்ளையா படம் 1966 டிசம்பர் 6-ம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

 

1967 ஜனவரி 12-ல் தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் அவர் நடித்த தாய்க்குத் தலைமகன் படம் வெளியானது. படத்துக்குத் தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்புக் கிடைத்திருந்த நிலையில், அன்று மாலையே எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரைச் சுட்டதாக வெளியான தகவல் தமிழகம் முழுவதும் காட்டுத் தீ போல பரவியது. தமிழகம் முழுவதும் தியேட்டர்கள், கடைகள் அடைக்கப்பட்டன. ஒருவித பதற்ற சூழல் ஏற்பட்டது. எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் சிகிச்சைபெற்று வந்த மருத்துவமனையில் அண்ணா, கருணாநிதி தொடங்கி அரசியல் பிரபலங்கள் பலரும், சினிமா நட்சத்திரங்கள் முதல் ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் திரண்டனர். எம்.ஜி.ஆரைச் சுட்ட எம்.ஆர்.ராதா, துப்பாக்கியால் நெற்றியில் சுட்டு தற்கொலைக்கு முயன்றிருந்தார். இருவரும் அறுவைச் சிகிச்சைக்குப் பின் காப்பாற்றப்பட்டனர். அந்தத் தேர்தலில் பரங்கிமலை தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த எம்.ஜி.ஆர், மருத்துவமனையில் இருந்தவாறே வெற்றி பெற்றார்.

 

எம்.ஜி.ஆர் – சரோஜா தேவி நடிப்பில் வெளியான `பெற்றால்தான் பிள்ளையா’ படத்தை எம்.ஆர்.ராதாவின் நண்பர் வாசு தயாரித்திருந்தார். படத் தயாரிப்பின்போது அவருக்குப் பணக் கஷ்டம் ஏற்பட்டதாகவும், அப்போது எம்.ஆர். ராதா அவருக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுத்து உதவியதாகவும் தெரிகிறது. படத்தின் ரிலீஸுக்குப் பிறகு வாசுவிடம் எம்.ஆர்.ராதா பணம் கேட்டதாகவும், ஆனால் பட வெளியீட்டில் கைக்கு மீறி செலவாகிவிட்டதாக அவர் பதில் சொன்னதாகவும் சொல்லப்படுகிறது. படத்தின் ரிலீஸுக்கு முன்னர், கூடுதலாக சில காட்சிகளை எம்.ஜி.ஆர் சேர்க்கச் சொன்னதால் கூடுதல் செலவானதாகவும் வாசு எம்.ஆர்.ராதாவிடம் சொல்லியிருக்கிறார். இதுகுறித்து எம்.ஜி.ஆரிடம் பேசுவதற்காக ராமாவரம் தோட்டத்தில் இருந்த அவரின் வீட்டுக்கு எம்.ஆர்.ராதாவும் வாசுவும் போயிருக்கிறார்கள்.

 

பண விவகாரம் குறித்து பேசிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் எம்.ஆர்.ராதா, தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் எம்.ஜி.ஆரை நோக்கி சுட்டதாகத் தெரிகிறது. இதில், காதை உரசிக் கொண்டு சென்ற துப்பாக்கிக் குண்டு, எம்.ஜி.ஆரின் தொண்டையில் பாய்ந்திருக்கிறது. அதன்பின்னர், துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு எம்.ஆர்.ராதா தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இருவரும் சிகிச்சைக்குப் பின்னர் உயிர் பிழைந்தனர். தொடக்கத்தில் அறுவைச் சிகிச்சையின்போது எம்.ஜி.ஆரின் கழுத்தில் இருந்து குண்டு அகற்றப்படாத நிலையில், சிறிது நாட்களுக்குப் பின்னர் அது அகற்றப்பட்டது. இந்த சம்பவம் எம்.ஜி.ஆரின் குரலை நிரந்தரமாகப் பாதித்தது. அதற்கு முன்பான பத்தாண்டுகள் தமிழக முதல்வராக இருந்த காமராஜரின் தீவிர விசுவாசி எம்.ஆர்.ராதா. எம்.ஜி.ஆரால் காமராஜருக்கு ஆபத்து என்று கருதியதால், எம்.ஆர்.ராதை அவரைச் சுட்டதாகவும் ஒரு தகவல் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.

 

எம்.ஜி.ஆரைத் துப்பாக்கியால் சுட்டது, தற்கொலைக்கு முயன்றது, உரிமம் இல்லாத துப்பாக்கியை வைத்திருந்தது உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுகளை முன்வைத்து எம்.ஆர்.ராதா மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், 96 நாட்கள் நடந்த விசாரணையில் 69 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. 1967ம் ஆண்டு மே 22-ம் தேதி நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகி எம்.ஜி.ஆர் சாட்சியம் அளித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி லட்சுமணன், 1967ம் ஆண்டு நவம்பர் 4-ம் தேதி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் எம்.ஆர்.ராதாவுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீடு செய்ததில், உயர் நீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தது. அதன்பின்னர், எம்.ஆர்.ராதா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது, இதில் தண்டனைக் காலம் ஐந்து ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. நன்னடத்தை அடிப்படையில் நான்கரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து, பின்னர் எம்.ஆர்.ராதா விடுதலையானார். தன்னை சுட்ட பிறகும் எம்.ஆர்.ராதா மீது அவர் பகைமை பாராட்டவில்லை. ஆனால், அவரோடு நடிப்பதை நிறுத்திக் கொண்டார். 1979-ல் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், எம்.ஆர்.ராதா உயிரிழந்தார். 1972-ல் தி.மு.க-வில் இருந்து பிரிந்து வந்து அ.தி.மு.க-வைத் தொடங்கிய எம்.ஜி.ஆர், 1977-ல் தமிழக முதல்வரானார். அதன்பின்னர், தான் இறக்கும் வரையில் (1987) 10 ஆண்டுகள் முதல்வராகத் தொடர்ந்தார்.

 

எம்.ஜி.ஆரை ஏன் சுட்டேன்?

 

எம்.ஜி.ஆரைச் சுட்டது குறித்து சிறையில் இருந்து விடுதலையான பின்னர் மலேசியாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் எம்.ஆர்.ராதா பேசினார். “எம்.ஜி.ராமச்சந்திரனும் நானும் நண்பர்கள். அம்பது வருஷமா சிநேகிதம். ரெண்டு பேரும் தமாஷா சுட்டுக்கிட்டோம். ஏன் சுட்டுக்கக் கூடாதா? பொண்டாட்டியும் புருஷனும் அடிச்சுக்கலையா? அப்பனும் மவனும் வெட்டிக்கலையா? அதே மாதிரி ரெண்டு நண்பர்கள் அடிச்சிக்கிட்டோம். அவ்வளவுதான். கையில் கம்பிருந்தா கம்பை எடுத்து அடிச்சிக்குவோம். கத்தி இருந்தா, கத்தி எடுத்து அடிச்சிக்குவோம். ரிவால்வர் இருந்துச்சு… அந்த நேரத்துல. எடுத்து அடிச்சிக்கிட்டோம். அடிச்சதும் ‘டப்பு… டப்பு’ன்னது. நிறுத்திட்டோம்.

 

நாங்க என்ன ஒருத்தரை ஒருத்தர் கொன்னு போடணும்னா சுட்டுக்கிட்டோம்? ரிவால்வரில் எட்டு தோட்டா இருக்கு. அப்படி விரோதமா இருந்தா, எட்டு தோட்டாவையும் பயன்படுத்தி இருப்போம். ஒரு தோட்டாதான் ஆச்சு. வெடிக்குதா வெடிக்கலையானு பார்த்தோம். அது வெடிச்சிருச்சு. அதுக்கு நம்ம என்ன செய்றது… இதெல்லாம் புரியாம ரொம்பப் பேர் தவறாப் பேசுறாங்க! பெரியார் இறந்தபோது நாங்க இரண்டு பேரும் பக்கத்துல இருந்து பேசிக்கிட்டோம்.

 

 எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு என்னிடத்திலே நல்ல மரியாதை உண்டு’’ என்று எம்.ஆர்.ராதா பேசியிருந்தார்.t

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.