வனமெல்லாம் செண்பகப்பூ மற்றும் ஆகாயத்தாமரை அருகில் வந்ததோ ஆகியப் பாடல்கள் அடங்கிய ’நாடோடி பாட்டுக்காரன்’ திரைப்படம் வெளியாகி 32 ஆண்டுகள் நிறைவுபெற்றது. இந்நிலையில் இப்படம் பற்றிப்பேச பல்வேறு சுவாரஸ்யத் தகவல்கள் உள்ளன. வாருங்கள் பார்ப்போம்.
நவரச நாயகன் கார்த்திக், மோகினி, ஜெய்சங்கர், பீலி சிவம், எம்.என். நம்பியார், தியாகு, சின்னி ஜெயந்த், செந்தில் ஆகியோர் நடித்து வெளியான திரைப்படம், நாடோடி பாட்டுக்காரன். இப்படத்தை என்.கே.விஸ்வநாதன் இயக்கியும், இசையினை இளையராஜாவும் செய்திருந்தனர். பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகின. தெலுங்கிலும் இப்படம் டப் செய்யப்பட்டு ரிலீஸானது.
நாடோடி பாட்டுக்காரன் திரைப்படத்தின் கதை என்ன?
வேலையில்லாத பட்டாதரி இளைஞர், சுந்தரம். தனக்கு இருக்கும் பாட்டுத் திறமையைப் பயன்படுத்தி, இசைக்குழு ஒன்றில் சேர்ந்து பாட்டுப் பாடி, சம்பாதித்து வருகிறார். அந்த இசைக்குழுவில் தேவர் அய்யா, பெரிய மதுரை, சீடன், வடிவேலு, அண்ணாமலை ஆகியோர் பணிபுரிகின்றனர். சுந்தரம் இந்த இசைக்குழுவில் சேர்ந்ததும் அவருக்கு நண்பர்கள் ஆகிவிடுகின்றனர். ஒவ்வொரு ஊருக்கும் நாடோடிகளாக சென்று, இந்த இசைக்குழுவினர் பாடி வருவாய் ஈட்டி வருகின்றனர்.
அப்போது ஒரு கிராமத்தில் இசைக்குழு நுழையும்போது, அங்கு கொள்ளையடிக்கும் கொள்ளையர்களை எதிர்கொள்கிறது. இசைக்குழுவினர் அவர்களை எதிர்த்து சண்டையிட்டு, கொள்ளைக் கூட்டத்தினை போலீஸில் பிடித்துக்கொடுத்தனர்.
உடனே, அந்த இசைக்குழு சுற்றுவட்டார கிராமங்களில் பிரபலம் ஆகிறது. அதன்பின், அந்த கிராமத்து நாட்டாமை சிவத்தையாவின் மகள் கீதாவுக்கும், கொள்ளையர்களை விரட்ட காரணமாய் இருந்த பாட்டுக்காரன் சுந்தரம் மீது காதல் வருகிறது. சுந்தரமும் கீதாவின் காதலை ஏற்றுக்கொள்கிறான். இருவரும் காதலிக்கின்றனர். ஒரு கட்டத்தில் இவ்விசயம், கீதாவின் குடும்பத்துக்குத் தெரியவந்து கடும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். அதன்பின் என்ன நடக்கிறது என்பதே படத்தின் இறுதி பரபரப்பான நிமிடங்கள்.
இப்படத்தில் சுந்தரமாக நவரச நாயகன் கார்த்திக்கும், கீதாவாக மோகினியும், சிவத்தையாவாக ஜெய்சங்கரும், தேவர் அய்யாவாக எம்.என். நம்பியாரும் நடித்துள்ளனர். மேலும், உயரம் எனும் கதாபாத்திரத்தில் செந்திலும், சக்கரை கதாபாத்திரத்தில் எஸ்.எஸ்.சந்திரனும், சீடன் கேரக்டரில் சார்லியும், வடிவேலு கதாபாத்திரத்தில் சின்னி ஜெயந்தும், பெரியமதுரை கேரக்டரில் தியாகுவும், டி.எஸ்.பியாக செந்தாமரையும், சின்ன பாண்டியாக ஓ.ஏ.கே.சுந்தரும், சுந்தரத்தின் தாயாராக அன்னபூர்ணாவும் நடித்துள்ளனர்.
தவிர, விவேக், பீலிசிவம், குள்ளமணி, வி.கோபாலகிருஷ்ணன், காந்திமதி, எஸ்.என்.பார்வதி ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தில் எட்டு பாடல்கள் உள்ளன. இப்படத்துக்குண்டான பாடல்களை வாலி, முத்துலிங்கம், பிறைசூடன், கங்கை அமரன், பரிணாமன், நா.காமராசன் ஆகியோர் எழுதியுள்ளனர். இப்படத்துக்கு இசையினை இளையராஜா செய்திருந்தார். ’வாங்க வாங்க மாப்பிள்ளையே வாழப்பிறந்த ஆம்பளையே’ என்னும் பாடலை, பிறைசூடன் எழுதியிருந்தார். ’வனமெல்லாம் செண்பகப்பூ வான் எல்லாம் குங்குமப் பூ’என்னும் பாடலை கங்கை அமரன் எழுதியிருந்தார். ’ஆகாயத் தாமரை அருகில் வந்ததே நாடோடி பாடலில் உருகி நின்றதே’ என்னும் பாடலை வாலி எழுதியுள்ளார்.
’காதலுக்கு கண்கள் இல்லை மானே’ என்னும் பாடலை முத்துலிங்கம் எழுதியிருந்தார். ’மண்ணையும் பொன்னையும் கொடுத்தது யாரு’ என்னும் பாடலை வாலி எழுதியுள்ளார்.’தென் பாண்டிச்சீமை தமிழ் கொடுத்த தாயே’ என்னும் பாடலை கங்கை அமரன் எழுதியிருந்தார். ’சித்திரத்துத் தேரே வா’ என்னும் பாடலை நா.காமராசன் எழுதியுள்ளார்.இப்படத்தின் சில பாடல்கள் இன்றும் பலரது ஃபேவரைட்.
நன்றி: தேன்மொழி