Breaking News :

Saturday, December 21
.

புதிய ஓடிடி தளமான ‘ஓடிடி பிளஸ்’ஸை துவங்கி வைத்த இயக்குநர் சீனுராமசாமி


தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வரும் நிலையில், பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் ஒரு சில காட்சிகளுடன் மூன்று நாட்களிலேயே அவற்றுக்கு முடிவுரை எழுதப்படுகின்றன. இதனால் பல நல்ல படைப்புகள் ரசிகர்களின் கவனத்திற்கு வராமலேயே போய் விடுகின்றன. 

இதற்கு ஒரு தீர்வாக வந்தவை தான் ஓடிடி தளங்கள். இவற்றின் மூலம் தங்கள் மொழி மட்டுமல்லாது வேறு மொழிகளிலும் ஒருவரது படைப்பு மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெரும் வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் தற்போது முன்னணி ஓடிடி தளங்களை மிகப்பெரிய படங்களே ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. இங்கும் சின்ன பட்ஜெட்டில் உருவாகும் நல்ல படைப்புகளுக்கு இடம் கிடைப்பதில் மீண்டும் சிக்கல் துவங்கியுள்ளது. 

இதற்கு ஒரு புதிய தீர்வாக உருவாக்கப்பட்டுள்ளது தான் ‘ஓடிடி பிளஸ்’ என்கிற புதிய ஓடிடி தளம். அதே சமயம் இதன் பெயருக்கு ஏற்றபடி தன்னுள் இன்னும் சில ஓடிடி தளங்களை ஒன்றிணைத்து இந்த ‘ஓடிடி பிளஸ்’ உருவாக்கப்பட்டுள்ளது. இதன் இயக்குநர்களாக எம்.ஆர் சீனிவாசன், சுதாகர் மற்றும் கேபிள் சங்கர் ஆகியோர் பொறுப்பு வகிக்கின்றனர்.

 

இந்த ‘ஓடிடி பிளஸ்’ துவக்க விழாவும் இதில் ஒளிபரப்பாகின்ற ‘ஃபெமினிஸ்ட்’ என்கிற வெப் சீரிஸின் முதல் பாகம் மற்றும் ‘சென்டென்ஸ்’ என்கிற குறும்படம் ஆகியவற்றின் திரையிடலும் நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபிள் நடைபெற்றது. மேலும் அடுத்தடுத்து இந்த ‘ஓடிடி பிளஸ்’-ல் இடம் பெற இருக்கும் படைப்புகளின் ட்ரெய்லர்களும் திரையிடப்பட்டன.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனுராமசாமி கலந்து கொண்டார். 

மேலும் சமீப காலங்களில் சின்ன பட்ஜெட்டில் வெளியாகி அதே சமயம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற படைப்புகளை கொடுத்த இயக்குநர்கள் ஜான் கிளாடி (பைரி), மணிவர்மன் (ஒரு நொடி), ரா.வெங்கட் (கிடா), பாலாஜி வேணுகோபால் (லக்கி மேன்), கண்ணுசாமி ராஜேந்திரன் (வட்டார வழக்கு), யஷ்வந்த் கிஷோர் (கண்ணகி), விக்னேஷ் கார்த்திக் (ஹாட்ஸ்பாட்), சரத் ஜோதி மற்றும் எழுத்தாளர்கள் வசந்த் பாலகிருஷ்ணன், ஜெயச்சந்திர ஹாஸ்மி (கூஸ் முனுசாமி வீரப்பன் வெப்சீரிஸ்) ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டதுடன் இயக்குநர் சீனுராமசாமி கையால் நினைவு பரிசும் புத்தகமும் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். 

 

இந்த நிகழ்வில் இயக்குநர் சீனுராமசாமி பேசும்போது, “இந்த ஓடிடி பிளஸ் தளம் எதிர்காலத்தில் உருவாகும் புதிய படைப்பாளர்களுக்கு நல்லதொரு வரப்பிரசாதமாக இருக்கும்” என்று கூறினார். இதில் கலந்துகொண்ட இயக்குநர்கள் அனைவருமே இப்படி தங்களது படைப்பை பெருமைப்படுத்தும் விதமாக தங்களுக்கும் அங்கீகாரம் அளித்து பாராட்டி நினைவு பரிசு வழங்கியதற்காக தங்களது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தனர்..

 

இந்த நிகழ்வில் திரையிடப்பட்ட, கேபிள் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ஃபெமினிஸ்ட்’ வெப் சீரிஸ் முதல் பாகத்திற்கு பார்வையாளர்களிடமும் பத்திரிக்கையாளர்களிடமும் மிகப்பெரிய பாராட்டுக்கள் கிடைத்தன.

 

‘ஓடிடி பிளஸ்’ இயக்குநர்களில் ஒருவரான கேபிள் சங்கர் பேசும்போது, “ஓடிடி தளங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்த ‘ஓடிடி பிளஸ்’-ல் தற்போது ஐந்து ஓடிடி தளங்கள் இணைந்துள்ளன. இனிவரும் நாட்களில் பல ஓடிடி தளங்களையும் ஒரே தளத்தில் கொண்டு வருவது தான் இந்த ‘ஓடிடி பிளஸ்’-ன் நோக்கம். 

 

குறைந்தபட்சமாக மாதத்திற்கு ரூபாய் 29 கட்டணத்திலிருந்து ரூ 99, ரூ 199 என அதிகபட்சமாக 299 ரூபாய் வரை ஒரே கட்டணத்தில் அதாவது ஒரு நாளைக்கு ஒரு ரூபாய்க்கும் குறைவான கட்டணத்தில் அனைத்து ஓடிடி தளங்களிலும் உள்ள படைப்புகளை ரசிகர்கள் பார்த்து ரசிக்க முடியும்.

இதில் தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது அதையும் தாண்டி பல மொழிகளில் வெளியான மற்றும் இனிமேல் வெளியாக இருக்கின்ற  திரைப்படங்கள், வெப்சீரிஸ்கள் மற்றும் குறும்படங்கள் என அனைத்தும் இதில் இடம்பெற இருக்கின்றன. 

 

அந்த வகையில் இயக்குனர் கீரா இயக்கத்தில் வெளியான 'வீமன்' என்கிற படம் நேரடியாக ஓடிடி பிளஸ்சில் வெளியாகிறது. அதுமட்டுமல்ல ‘பிகினி சமையல்’ என்கிற கவர்ச்சிகரமான ரியாலிட்டி ஷோ ஒன்று ஏழு எபிசோடுகளாக ஆங்கிலத்தில் வர இருக்கிறது” என்று கூறினார்.

தற்போது ‘ஃபெமினிஸ்ட்’ வெப் சீரிஸ், ‘சென்டன்ஸ்’ குறும்படம், ‘ஜெனி’ ஹாரர் திரைப்படம் மற்றும் ‘மது’ என்கிற 45 நிமிட படம் ஆகியவை ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதில் ‘மது’ என்கிற படம் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்ட இரண்டு நாட்களில் பத்தாயிரம் நிமிடங்களை தாண்டி ரசிகர்களால் பார்க்கப்பட்டுள்ளது. ‘ஃபெமினிஸ்ட்’ வெப் சீரிஸ் முதல் பாகம் ஸ்ட்ரீமிங் ஆன முதல் நாளிலேயே 5000 நிமிடங்களை எட்டியுள்ளது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.