Breaking News :

Saturday, December 21
.

ஒன்னுக்கு ஒன்னு இலவசம் - புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் கே ஆர்


கே ஆர் வழங்கும் ஜி ஆர் எம் ஸ்டுடியோ தயாரிப்பில் ரவி முருகையா இயக்கத்தில் விதார்த், சரவணன், அருந்ததி நாயர் உள்ளிட்டோர் நடிக்கும் 'ஆயிரம் பொற்காசுகள்' திரைப்படத்தை பார்க்க ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம் 

திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர், விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர் என பல்வேறு தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் கே ஆர், பல புதுமையான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

அவரது வித்தியாசமான முயற்சிகளில் சில பின்வருமாறு: உலகப் புகழ் பெற்ற 'மை டியர் குட்டிச்சாத்தான்'. இந்தியாவின் முதல் 3டி திரைப்படமான இது மாபெரும் வெற்றி பெற்றது. குழந்தைகளுக்கான 3டி படமான 'ஸ்பை கிட்ஸ்' அனகிலிஃப் (Anaglif) தொழில்நுட்பத்தில் வெளியாகி பாராட்டுதல்களையும் வெற்றிகளையும் குவித்தது. 'எங்களையும் வாழ விடுங்கள்' திரைப்படம் விலங்குகளை பேச வைத்ததோடு விலங்குகளுக்காகவும் பேசியது. 'உலக நாயகன்' கமல்ஹாசன் நடித்த 'பேசும் படம்' வசனங்களே இல்லாமல் வாழ்த்துகளை அள்ளியது. மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை பறைசாற்றிய 'டான்சர்' உள்ளூர் முதல் சர்வதேச விருதுகளை பெற்றது. இந்த வரிசையில், கே ஆர் வழங்கும் ரவி முருகையா இயக்கத்தில் விதார்த், சரவணன், அருந்ததி நாயர் உள்ளிட்டோர் நடிக்கும் 'ஆயிரம் பொற்காசுகள்' திரைப்படத்தை புதுமையான முறையில் வெளியிட கே ஆர் தயாராகி வருகிறார்.

டிசம்பர் 22 அன்று தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் ரெட் ஜெயண்ட் செண்பகமூர்த்தி மூலமாக இப்படம் வெளியாக உள்ளது. கலகலப்பான நகைச்சுவை திரைப்படமான 'ஆயிரம் பொற்காசுகள்' படத்தின் ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம், முதல் நாள் முதல் காட்சிக்கு மட்டுமே இது பொருந்தும் என்று கே ஆர் அறிவித்துள்ளார். இலவச டிக்கெட்டுக்கான கட்டணத்தை விநியோகஸ்தரே ஏற்றுக்கொள்வார். 

இது குறித்து பேசிய அவர், "ஒரு படத்தின் தலையெழுத்தை நிர்ணயிப்பதே முதல் நாள் முதல் காட்சி தான். பெரிய படங்கள் வியாபார ரீதியில் வசூலை அள்ளும் நிலையில், சிறு பட்ஜெட் படங்கள் நல்ல கதையம்சத்துடன் இருந்தாலும் கடந்த ஒரு வருடத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள‌ன. ஒரே வாரத்தில் அதிகளவில் படங்கள் வெளியாவதும் இதற்கு ஒரு காரணம். சிறு பட்ஜெட் படங்களே எடுக்க வேண்டாம் என்று சிலர் கூறி வரும் நிலையில், இந்த சிக்கலுக்கு தீர்வு இதுவல்ல. ஏதாவது செய்து பார்வையாளர்களை எப்படி திரையரங்குகளை வர வைப்பது என்பது குறித்து நாம் யோசிக்க வேண்டும். அதற்கு ஒரு தீர்வாகத் தான் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளேன்," என்றார்,

தொடர்ந்து பேசிய கே ஆர், "பெரிய படங்கள் வந்து மாபெரும் வெற்றி பெறுவது ஒரு புறம் மகிழ்ச்சி என்றாலும் சிறு திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வெற்றி பெற்றால் தான் திரையுலகம் ஆரோக்கியமாக இருக்கும். இன்று பெரிய இடத்தில் உள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சிறிய படங்களின் மூலம் தங்களது பயணத்தை தொடங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சிறு பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படங்களை புதுமையான முறையில் ஊக்குவிக்க வேண்டும் என்ற எனது விருப்பத்தின் விளைவாக இந்த முடிவை எடுத்துள்ளேன்," என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்கு உரிமையாளர்களுடன் எனக்கு நல்ல நட்பு உள்ளதால் இந்த திட்டத்திற்கு அவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ரசிகர்களும் தங்களது மேலான ஆதரவை 'ஆயிரம் பொற்காசுகள்' திரைப்படத்திற்கு வழங்கி திரையரங்குகளில் இப்படத்தை கண்டு ரசித்து மகிழ்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் :ஆயிரம் பொற்காசுகள்' உருவாகியுள்ளது," என்று தெரிவித்தார். 

ஜார்ஜ் மரியான், வெற்றிவேல் ராஜா, ஹலோ கந்தசாமி, பவுன்ராஜ், பாரதி கண்ணன், செம்மலர் அன்னம், ஜிந்தா மற்றும் ராஜா ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜோகன் இசையமைக்க, பானு முருகன் ஒளிப்பதிவை கவனிக்க, ராம்-சதீஷ் படத்தொகுப்பை கையாள, அசோக் ராஜ் பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார். கலை இயக்கம்: பி சண்முகம், சண்டை பயிற்சி: ஃபயர் கார்த்திக், சவுண்ட் மிக்ஸிங்: ஏ எஸ் லட்சுமி நாராயணன், சவுண்ட் எஃபெக்ட்ஸ்: ஏ சதீஷ்குமார், பாடல் வரிகள்: நந்தலாலா, கபிலன், தனிக்கொடி, முத்துவேல், டப்பிங்: வெங்கட் சி, பலராம், ஜெமினி ஸ்டுடியோ, ஸ்டில்ஸ்: மோதிலால், டிசைன்ஸ்: சபிர், மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

கே ஆர் வழங்கும் ரவி முருகையா இயக்கத்தில் விதார்த், சரவணன், ஜார்ஜ் மரியான், அருந்ததி நாயர் உள்ளிட்டோர் நடிக்கும் 'ஆயிரம் பொற்காசுகள்' டிசம்பர் 22 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், முதல் நாள் முதல் காட்சியில் இத்திரைப்படத்தை பார்க்க விரும்புபவர்கள் ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசமாக வழங்கப்படும் என்ற புதுமையான திட்டத்தை முதல் முறையாக கே ஆர் வெளியிட்டுள்ளார்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.