Breaking News :

Saturday, December 21
.

மறக்க முடியுமா: பாடகி ஜென்ஸியின் என்வானிலே ஒரே வெண்ணிலா!


பெண்களும் பாடல்களும்னு சமீபத்தில் நீயா நானாவில் ஒரு எபிசோடு வந்துச்சு. இதுல 70, 80, 90, 2கேனு எல்லா தரப்பு பெண்களும் கலந்துக்கிட்டு அவங்களுக்குப் பிடிச்ச பாடல்களைப் பற்றி பேசுனாங்க. அதுல பேசுன காயத்ரினு ஒருத்தவங்க பாடகி ஜென்ஸியோட பாடல்களைப் பற்றியும் அவரது குரலைப் பற்றியும் பேசுன வீடியோ பயங்கர வைரலாச்சு.

அந்த வீடியோவைப் பார்க்கும் போது இப்போ இருக்குற தலைமுறையினருக்கு ஜென்ஸியை தெரியுமானு ஒரு கேள்வி வந்துச்சு. அவங்களுக்கு ஜென்ஸியோட பாடல்களைத் தெரிஞ்சிருக்கு; ஆனா ஜென்ஸி யார்னு தெரியலை. அதுனால, இந்த வீடியோவில் ஜென்ஸியைப் பற்றி தெரிஞ்சுக்கலாம்.

ஜென்ஸி தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானது 1978ஆம் ஆண்டில்தான். அப்போதுல இருந்து இப்போவரைக்கும் ஜென்ஸி ஆக்டிவ்வா சினிமாக்களில் பாடிட்டு இருந்திருந்தால், கண்டிப்பாக எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். ஆனா அவங்க தமிழில் பாடுனது வெறும் 4 வருஷங்கள் மட்டும்தான். ஆமாங்க, அந்த 4 வருஷத்துலதான் அவங்க பாடுன எல்லா ஹிட் பாடல்களும் இருக்கு. அவங்க தமிழில் மொத்தம் மூன்று இசையமைப்பாளர்களின் இசையில்தான் பாடியிருக்கார்.

தமிழில் மொத்தமாக பாடிய 29 பாடல்களில் 27 பாடல்கள் இளையராஜாவோட இசையில்தான் பாடியிருக்கார்.
அதைத்தாண்டி கங்கை அமரன் இசையில் ஒரு பாடல், சங்கர் கணேஷ் இசையில் ஒரு பாடல் பாடியிருக்கார். அந்தளவுக்கு ஜென்ஸியை தமிழில் அறிமுகப்படுத்தியதும் ராஜாதான்; அதிக வாய்ப்புகள் கொடுத்ததும் ராஜாதான்.

பாடல்கள் பாட வைப்பதைத் தாண்டியை ஜென்ஸியை வைத்து நிறைய ஹம்மிங் போர்ஷன் எடுப்பார். பாடல்களில் வரும் ஹம்மிங்கைத் தாண்டி கிழக்கே போகும் ரயில் படத்தில் படம் முழுக்க பின்னணி இசையில் வரும் எல்லா ஹம்மிங்கையும் ஜென்ஸிதான் கொடுத்திருப்பார்.

வெறும் 29 பாடல்கள் பாடிய ஒரு பாடகிக்கு ரசிகர்கள் இருக்காங்களானு உங்களுக்கு கேள்வி வரலாம். அவங்க பாடிய பாடல்களை தினமும் கேட்கிற தமிழ்நாட்டு மக்களும், தமிழ் பாடல்களை கேட்கிற பலரும் ஜென்ஸிக்கு ரசிகர்களாகத்தான் இன்னமும் இருக்கிறார்கள்.

இப்போ வரைக்கும் மதுரை, நாகர்கோவில் பகுதிகளில் இருந்து ஜென்ஸிக்கு ரசிகர்கள் கடிதம் எழுதுறாங்கன்னா பார்த்துகோங்க. ஜென்ஸிக்கு இந்தளவுக்கு ரசிகர்கள்; அதிலும் குறிப்பாக ரசிகைகள் இருக்கிறதுக்கு காரணம் என்னனா, அவங்க குரல்தான். அந்தக் குரலில் இருக்கும் ஒருவித சோகம்தான். அதுனாலதான் ஜென்ஸி பாடுன பல பாடல்களை தாங்களே பாடியதாக நினைத்து இன்றும் பாடிக்கொண்டிருக்கிறார், அவரது ரசிகைகள்.

ஜென்ஸி பாடுன பாடல்களில் இப்போவரைக்கும் ரசிகர்கள் மறக்காமல் இருக்கிற பாடல்கள் என்னென்னனு பார்க்கலாமா… முள்ளும் மலரும் படத்துல அடி பெண்ணே, பிரியா படத்துல என்னுயிர் நீதானே, புதிய வார்ப்புகள் படத்துல தம்தன தம்தன தாளம் வரும்; இதயம் போகுதே, நிறம் மாறாத பூக்கள் படத்துல ஆயிரம் மலர்களே, பகலில் ஒரு நிலவு படத்துல தோட்டம் கொண்ட ராசாவே, ஜானி படத்துல என் வானிலே, உல்லாச பறவைகள் படத்துல தெய்வீக ராகம், அலைகள் ஓய்வதில்லை படத்துல காதல் ஓவியம்னு ஜென்ஸி நம் மனதில் விதைத்த பாடல்கள் ஏராளம்.

கேரளாவில் ஒரு இசை குடும்பத்தில் பிறந்தவங்கதான் ஜென்ஸி. சின்ன வயசுல இருந்தே இசையை கத்துக்க ஆரம்பிச்சவங்க 10 வயதில் இருந்தே மேடைகளில் பாட ஆரம்பிச்சாங்க. அப்படி ஒரு மேடை கச்சேரியில் பாடகர் யேசுதாஸோடு ஜென்ஸி பாடும் போது அவங்களோட குரல் பிடித்துப்போக, தொடர்ந்து யேசுதாஸோடு கச்சேரிகளில் பாடுனாங்க.

இந்தப் பொண்ணோட திறமை கச்சேரிகளோடு நின்னுடக்கூடாதுனு ஜென்ஸியைப் பற்றி இளையராஜாவிடம் சொல்லியிருக்கிறார் யேசுதாஸ். பொதுவாக யாரையும் சிபாரிசு செய்யாத யேசுதாஸ் ஒரு பொண்ணுக்காக சிபாரிசு செய்கிறாரே என இதை சீரியஸாக எடுத்துக்கொண்ட இளையராஜா, நாளைக்கே என்னை வந்து பார்க்கச்சொல்லுங்க என்றிருக்கிறார். ஜென்ஸியும் அடுத்த நாளே இளையராஜாவை சந்தித்து சில பாடல்கள் பாடி காட்டியிருக்கிறார்.

அவருக்கும் குரல் பிடித்துப்போக அன்று மாலையே திரிபுரசிந்தரி எனும் படத்தில் எஸ்.ஜானகியோடு சேர்ந்து பாட வைத்திருக்கிறார். அதன் பிறகு தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்த இளையராஜா, ஜென்ஸி ஒவ்வொரு முறையும் ரெக்கார்டிங்கிற்காக கேரளாவில் இருந்து சென்னை வருகிறார் என்பதால் ‘சென்னையிலேயே ஒரு வீடு எடுத்து தங்கினால், நிறைய பாடல்கள் பாடலாம். வேறு இசையமைப்பாளர்களும் வாய்ப்பு கொடுப்பார்கள்’ என சொல்லியிருக்கிறார்.

ஆனால், ஜென்ஸிக்கு கேரளா அரசு பள்ளியில் பாட்டு டீச்சர் வேலை கிடைத்ததால் அவரால் சென்னைக்கு வர முடியலை. இதற்கிடையில் அவருக்கு வேலை கிடைத்ததால் இனிமேல் படங்களில் பாட மாட்டார் என ஒரு தவறான செய்தியும் சென்னையில் சுற்றியிருக்கிறது. இந்த செய்திக்கு பின்னால் பெரிய அரசியலும் இருக்கலாம். ஆனால், இந்த செய்தி உண்மையா இல்லையா என்பது தெரியாமல் அவருக்கு வாய்ப்பு கொடுப்பது நிறுத்தப்பட்டிருக்கிறது.

ஜென்ஸியும் தமிழில் நமக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு நமது பாடல்கள் எல்லாம் ஃபேவரைட் என்பது தெரியாமலேயே வாய்ப்பு வராததால் அவரது வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டார். இப்படித்தான் அவருக்கும் தமிழ் சினிமா இசைக்குமான தொடர்பு கட்டாகி இருக்கிறது. ஆனால், எது எப்படியே அவர் பாடிய அந்த 29 பாடல்களே நமக்கு போதும் இன்னும் பல வருடங்களுக்கு கேட்டு, கேட்டு ரசிக்க.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.