வேண்டாம் என்ற ரஜினிகாந்த்... சமாதானம் செய்த இளையராஜா : இன்றுவரை போற்றப்படும் அந்த பாடல்
ரஜினிகாந்தின் பல படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா. இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு இருக்கும் நிலையில், சில சமயங்களில் கருத்து வேறுபாடுகளும் வந்துள்ளது.
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்திருப்பவர் ரஜினிகாந்த். தனக்கென தனி பாணியை வகுத்து நடிப்பில் அசத்தி வரும் இவர், தற்போது 72 வயதை கடந்துள்ள நிலையில், இன்று தனது படங்களுக்காக கடின உழைப்பை கொடுத்து வருகிறார். அதேபோல் அவருக்கான ரசிகர்கள் கூட்டமும் தொடர்ந்து ரஜினிகாந்த் படத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.
அதேபோல் ரஜினிகாந்தின் பல படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா. இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு இருக்கும் நிலையில், சில சமையங்களில் கருத்து வேறுபாடுகளும் வந்துள்ளது. அந்த வகையில் 1992-ம் ஆண்டு வெளியான மன்னன் படத்தில் ரஜினிகாந்த் வேண்டாம் என்று சொன்ன ஒரு பாடல், தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற பாடலாக இன்றும் நிலைத்திருகிறது
1986-ம் ஆண்டு கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் நடிப்பில் வெளியான படம் அகுரஹ அரளிது. இந்த படத்தை பி.வாசு இயக்கத்தில் மன்னன் என்ற பெயரில் தமிழில் சிவாஜி புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க ரஜினிகாந்த் நாயகனாக நடித்திருந்தார். விஜயசாந்தி, குஷ்பு, விசு, மனோரமா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படத்திற்கு, இளையராஜா இசையமைத்திருந்தார். படத்தில் அனைத்து பாடல்களையும் வாலி எழுதியிருந்தார்.
இந்த படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக அம்மா என்று அழைக்காத என்ற பாடல் அம்மாவை போற்றும் பாடலாக இன்றுவரை நிலைத்திருக்கிறது. ஆனால் இந்த பாடலுக்கான சூழ்நிலை படத்தில் இல்லாத நிலையில், இந்த சூழ்நிலையை உருவாக்கி அதில் இந்த பாடலை வைக்க சொன்னவர் இளையராஜா. அதன்படி இயக்குனர் பி.வாசுவும் அதை செய்துள்ளார்.
ஆனால் இந்த பாடலை கேட்ட ரஜினிகாந்த், இந்த பாடல் மெதுவாக உள்ளது படத்தில் வரவேற்பை பெறுமா என்று தெரியவில்லை. அதனால் இந்த பாடல் வேண்டாம் என்று கூறியுள்ளார். ஆனால் விடாத இளையராஜா இந்த பாடல் கண்டிப்பாக வெற்றிபெறும் என்று அவரை சமாதானப்படுத்தி படத்தில் வைத்துள்ளனர். ஆனால் ரஜினி வேண்டாம் என்று சொன்ன அந்த பாட்டு இன்றுவரை காலத்தால் அழியாத ஒரு பாடலாக நிலைத்திருக்கிறது.