சங்கீதம் தெரியாமல் ‘சங்கராபரண’த்திற்குள் வந்த எஸ்.பி.பி!
இந்திய சினிமாவின் மறக்க முடியாத இசைக் காவியம், ‘சங்கராபரணம்’. இந்தப் படம் வெளியான நேரத்தில், மொழி புரியாமலேயே படத்தையும் பாடல்களையும் ரசித்தவர்கள் ஏராளம்.
தெலுங்கில் 1980 ஆம் ஆண்டு உருவான இந்தப் படம், தமிழில் டப் செய்யப்படாமலேயே ஆரம்பத்தில் வெளியானது. சங்கீதப் பிரியர்கள் மட்டுமின்றி அனைவரையும் கட்டிப்போட்ட இந்தப் படத்தில் சோமையாஜூலு, மஞ்சு பார்கவி, ராஜலட்சுமி, துளசி, சந்திரமோகன் உட்பட நடித்த அனைவருமே அந்தக் கேரக்டர்களாகவே வாழ்ந்திருப்பார்கள்.
கே.விஸ்வநாத்தின் ஆரவாரமில்லாத இயக்கமும் பாலு மகேந்திராவின் இயல்பான ஒளிப்பதிவும் படத்தைத் தாங்கிப் பிடித்தன. அதோடு படத்துக்கு உயிர்கொடுத்தது கே.வி.மகாதேவனின் உயிர்பிழியும் இசை.
இந்தப் படத்தில் மொத்தம் பத்து பாடல்கள். அதில் ஒன்பது பாடல்களைப் பாடியிருந்தார் எஸ்.பி.பி. நான்கு தேசிய விருதுகளைப் பெற்ற இந்தப் படத்தில் பாடலுக்காக விருது பெற்றார் எஸ்.பி.பி. அவருக்கு முதல் தேசிய விருதைப் பெற்று தந்த படம் இது.
இந்தப் படத்தின் பாடல்களை முதலில் பாட இருந்தவர், கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா. இது இந்திய கிளாசிக் இசையை அடிப்படையாகக் கொண்ட படம் என்று தெரிந்தும் இந்தப் படத்தில் பாடுவதற்கு பாலமுரளி கிருஷ்ணா ஆர்வம் காட்டவில்லை. இதையடுத்துதான், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தைப் பாட வைக்க முடிவு செய்தனர்.
அவர், அப்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் என பறந்து கொண்டிருந்தார். இருந்தாலும் முறையாக சங்கீதம் கற்றவர் இல்லை என்பதால் தயங்கினார் எஸ்.பி.பி.
ஆனால் அவர் தந்தையிடம் கதையைச் சொல்லி எஸ்.பி.பி தான் பாட வேண்டும் என்று சொன்னாராம் இசை அமைப்பாளர் கே.வி.மகாதேவன். “அவன் சரியாக பாடவில்லை என்றால் கன்னத்தில் அறைந்து பாட வையுங்கள்” என்றாராம் அவர் தந்தை. இதை எஸ்.பி.பி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
இசை அமைப்பாளர் கே.வி.மகாதேவனும் சிலரும் எஸ்.பி.பிக்கு சில மாதம் கர்நாடக சங்கீகத்தை கற்றுக் கொடுத்தனர். அதைக் கற்று, இந்தப் படத்தின் பாடல்களை பாடினார் எஸ்.பி.பி. பாடல்கள், பட்டி தொட்டி எங்கும் ஹிட். அவர் பாடல்களுக்கு மரியாதையும் பாராட்டுகளும் குவிந்தபோது அதைக் கடுமையாக விமர்சித்தார் பாலமுரளி கிருஷ்ணா.
ஆனால், அதே பாலமுரளி கிருஷ்ணா, பிறகு “என்னை போல எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தால் பாட முடியும். ஆனால், எஸ்.பி.பி மாதிரி என்னால் பாட முடியாது” என்று பாராட்டி இருக்கிறார்.
இந்தப் படத்துக்கு சோமையாஜுலுவை இயக்குனர் கே.விஸ்நாத்திடம் அறிமுகம் செய்தது எஸ்.பி.பிதான். “சோமையாஜுலு ‘ராரா கிருஷ்ணா’ என்கிற தெலுங்குப் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்துக்கு நான் இசையமைத்திருந்தேன். பிறகு நான் அவரை இந்தப் படத்துக்காக அறிமுகம் செய்தேன்” என்று கூறியிருக்கிறார் எஸ்.பி.பி!