Breaking News :

Saturday, December 21
.

மன்மத லீலையும் பாகவதரின் மாயக்கவர்ச்சியும்..!


மன்மத லீலையும் பாகவதரின் மாயக்கவர்ச்சியும்..!

தனது பலத்தையும் பலவீனத்தையும் ஒருசேர அறிந்தவரே சினிமாவில் கோலோச்ச முடியும். திரைப்படத் துறையில் எப்பணி செய்பவருக்கும் இது பொருந்தும்.

இவ்விரண்டையும் கண்டறிய முடியாத பேசும்படத்தின் தொடக்க காலத்தில் சிலர் நட்சத்திர அந்தஸ்தின் உச்சத்தை அடைந்து வெகு சில ஆண்டுகளிலேயே அதலபாதாளத்துக்குச் சரிந்தனர். அதற்குச் சரியான உதாரணமாக இருப்பது ‘ஹரிதாஸ்’ படத்தின் அபார வெற்றி.

 
அன்று முதல் இன்று வரை மூன்றெழுத்துகளால் சினிமா ஆளுமைகள் அடையாளம் காண வித்திட்டவர் எம்கேடி எனும் எம்.கே.தியாகராஜ பாகவதர்.

மழுங்க ஷேவ் செய்யப்பட்ட முகம், கழுத்து வரை நீளும் சுருள் முடி, கூர்மையான கண்கள், வசீகரிக்கும் குரல் என்று அந்நாளைய நாடக நாயகர்களின் உச்சமாகத் திகழ்ந்தார் பாகவதர்.

பவளக்கொடி படத்தில் அறிமுகமானவருக்கு சிந்தாமணி, திருநீலகண்டர், அம்பிகாபதி, அசோக்குமார், சிவகவி என்று வரிசையாக வெற்றிப் படங்கள்.

இதன் தொடர்ச்சியாக, 1944ஆம் ஆண்டு ராயல் டாக்கீஸ் தயாரிப்பில் ‘ஹரிதாஸ்’ வெளியானது.

பக்த விஜயம் என்ற நூலில் இடம்பெற்ற ஒரு பகுதியை அடிப்படையாக வைத்து இப்படம் தயாரிக்கப்பட்டது.

அந்த காலகட்டத்தில் சுமார் 15 முதல் 17 ரீல்கள் கொண்ட படங்களே அதிகமும் வெளியாகின.

அதாவது, கிட்டத்தட்ட 3 மணி நேரத்துக்கும் மேலாகப் படங்களின் நீளம் இருக்கும். இந்த நிலையில், சுமார் 2 மணி நேரம் மட்டுமே ஓடும் வகையில் 12 ரீல்களுடன் வெளியானது ஹரிதாஸ்.

இப்படம் தயாரிக்கப்பட்ட காலகட்டத்தில், இரண்டாம் உலகப் போரின் காரணமாக வெளிநாட்டில் இருந்து பிலிம் ரோல் தருவிக்கக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதே இதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது.

இதனாலேயே பாகவதரின் முந்தைய வெற்றிப்படங்களைப் போல சுமார் 25,000 அடி நீளத்துக்கு ஹரிதாஸை தயாரிக்கத் திட்டமிட்ட நட்கர்னி, தனது ஆசையை மாற்றிக்கொண்டு சுமார் 11,000 அடியில் இப்படத்தின் கருவைச் சுருக்கினார்.

இப்படத்தின் கதை புராணத்தைப் பிரதிபலித்தாலும், தனிமனித ஒழுக்கத்தையும் பெற்றோரை மதித்தலையும் அடிப்படையாகக் கொண்டிருந்தது.

கிருஷ்ணனைத் தவறாமல் வணங்கும் ஒரு வேதியர். அவரது மனைவி. இவர்களது ஒரே மகன் ஹரிதாஸ். இவரது மனைவி பெயர் லட்சுமி. நிலச்சுவான்தார் அந்தஸ்தினால் உழைப்பின் மீது ஆர்வமின்றி பகட்டான வாழ்க்கை வாழ்கிறார் ஹரிதாஸ்.

கண்ணில் கண்ட பெண்கள் மீதெல்லாம் காதல் கொள்ளும் அவரை ஒரு நபர் தன் வலையில் சிக்க வைக்கத் திட்டமிடுகிறார். ரம்பா தேவி எனும் நாட்டிய மங்கையின் அழகில் ஹரிதாஸ் மயங்கும்படி செய்கிறார்.

மனைவி லட்சுமியை ஏமாற்றும் நோக்கில் தன் பெற்றோரின் மனதைப் புண்படுத்துகிறார் ஹரிதாஸ்.

ஒருகட்டத்தில் அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். லட்சுமியின் கண்களில் சிக்காதவாறு ரம்பாவின் அருகாமையே கதி என்றிருக்கிறார்.

ஒருநாள் மது போதையில் ஹரிதாஸின் சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்ட ரம்பா தேவி, அவரை வீட்டில் இருந்து வெளியேற்றுகிறார். ஒரு முனிவரிடம் வம்பில் ஈடுபட முயலும்போது, வாழ்வின் அடிப்படை பெற்றோர்களை மதித்தல் என்று புரிந்து கொள்கிறார்.

சொத்து சுகங்களை இழந்தாலும், ஒரு மனிதனின் இனிய வாழ்வுக்குத் தேவையான அடிப்படையான விஷயங்கள் ஹரிதாஸை வந்தடைகின்றன என்பதோடு படம் சுபமாக முடிவடைகிறது.

இப்படத்தின் இயக்குனர் சுந்தர் ராவ் நட்கர்னி மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் என்பதால், படத்தின் முடிவில் ‘ஓம்’ என்ற இந்தி எழுத்துகளோடு படம் முடிவடையும்.

வணக்கம், சுபம், தி எண்ட் என்று ஆங்கில எழுத்துகளோடு திரைப்படங்கள் முற்றுப் பெறுவதில் இருந்து மாறுபட்டிருந்தது ஹரிதாஸ்.

ஹீரோ பில்டப் என்று இன்று புழக்கத்தில் இருக்கும் வார்த்தைக்கு அன்றே அர்த்தம் தந்தவர் எம்கேடி. குதிரையின் கால்கள், முகம், அதன் ஓட்டம் என்று காட்டியபிறகே, அதில் அமர்ந்திருக்கும் எம்கேடியின் அறிமுகம் படத்தில் காட்டப்படுகிறது.

பின்னணியில் குழல் வாத்தியம் ராஜ இசை எழுப்ப, தொடர்ந்து ‘வாழ்விலோர் திருநாள்’ என்று பாடியவாறே குதிரையில் வலம் வரும் பாகவதரைக் கண்டதும் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் தியேட்டர் கூரை வரை குதித்திருக்கக் கூடும்.

அவரது பாத்திரம் மன்மத லீலை புரியக்கூடியது என்பது திரைக்கதையின் தொடக்கத்திலேயே உணர்த்தப்படுகிறது.

அடுத்தடுத்த காட்சிகளிலேயே டி.ஆர்.ராஜகுமாரி, என்.சி.வசந்தகோகிலம் ஆகியோரின் பாத்திரங்கள் திரைக்கதையில் காட்டப்படுகின்றன.

பெண் பித்துப் பிடித்த கேஸனோவா ரக பாத்திரங்களை நாடாத நாயகர்களே திரையுலகில் இருக்க முடியாது.

ரசிகர்களிடம் உத்தரவாதமான வெற்றியைப் பெறவும், பெண்களின் அபிமானத்தைப் பெறுவதற்கும் நடிகர்கள் இதனை ஒரு உத்தியாகப் பயன்படுத்துவதுண்டு. (எம்ஜிஆர் இதிலிருந்து விதிவிலக்கானவர்) அந்த வகையில் எம்கேடி நடித்த ஹரிதாஸ் பாத்திரம் ஒரு முன்னோடி.

எம்கேடியின் பலங்களில் அவரது தோற்றமும் குரலும் முதலிடம் பிடிக்கும். ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ’, ‘கிருஷ்ணா முகுந்தா முராரே’, ‘அன்னையும் தந்தையும் தானே வாழ்வின் அண்டசராசரம் கண்ட தெய்வம்’ போன்ற பாடல்கள் படத்தின் அடையாளங்களாக மாறின.

கர்நாடக இசையில் புகழ்பெற்ற என்.சி.வசந்தகோகிலம் பாகவதரின் மனைவியாக நடித்தது கவன ஈர்ப்புக்கான காரணங்களில் ஒன்றானது. ‘எனது மனம் துள்ளி விளையாடுதே’, ‘எனதுயிர் நாதர்’, ‘கதிரவன் உதயம்’ ஆகிய பாடல்கள் அவரது குரலில் ஒலித்தன.

எனது மனம் துள்ளி விளையாடுதே பாடலில் வசந்தகோகிலம் கண்ணாடியைப் பார்த்து பாடுவார். அப்போது கண்ணாடியில் அவரது பிம்பம் வேறுமாதிரியாகத் தெரிவதும், காட்சிக் கோணம் மாறாமலேயே வேறொரு உடையணிந்து அவர் வருவதும் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.

அந்தக் கால ரசிகர்கள் தங்கள் மனங்களில் கவர்ச்சிக்கன்னியாக டி.ஆர்.ராஜகுமாரியை வரித்துக் கொள்வதற்கு இப்படம் அடித்தளமிட்டது. ‘எந்நாளும் இந்த இன்பம்’ பாடலில் அவரும் எம்கேடியும் டூயட் பாடியது மிகப் பிரபலம்.

மன்மதலீலை பாடல் தொடங்கும்போது டி.ஆர்.ராஜகுமாரி தரும் பறக்கும் முத்தத்தைக் கைப்பற்றுவதற்காகவே படம் பார்த்தவர்கள் பலர். இந்தப் பாடலுடன் தியேட்டரை விட்டு ஒரு கூட்டமே வெளியேறும் என்றும் கூறப்பட்டதுண்டு.

பின்னாளில் படங்களில் நடித்து ஓய்ந்ததும், இந்த கனவுக்கன்னி அந்தஸ்தின் காரணமாகவே தனது இறுதிக்காலம் வரை அவர் மக்களின் பார்வையில் இருந்து மறைந்து வாழ்ந்தார்.

ராஜகுமாரியின் உதவியாளராக வரும் புளிமூட்டை ராமசாமி படத்தின் பல காட்சிகளில் இடம்பெற்றது ஆச்சரியம்.

இரண்டு மணி நேரத்தில் 13 பாடல்கள் இடம்பெற்ற இப்படத்தின் வசனக் காட்சிகளில் அவருக்கும் முக்கியத்துவம் இருந்தது.

என்.எஸ்.கிருஷ்ணன் – டி.ஏ.மதுரம் ஜோடியின் நகைச்சுவை இடம்பெறாத படங்களே அந்த காலத்தில் குறைவு.

இப்படத்தில் பாகவதருடன் சேர்ந்து என்.எஸ்.கே. திரையில் தோன்ற மாட்டார். ‘நடனம் இன்னும் ஆடணும்’ பாடல் மற்றும் ஓரிரண்டு காட்சிகளில் மட்டுமே இருவரும் வந்து செல்வர்.

சிவாஜியுடன் ‘பராசக்தி, அந்த நாள்’ படங்களில் ஜோடியாக நடித்து, ‘எங்க வீட்டுப் பிள்ளை’யில் எம்ஜிஆரின் சகோதரியாக நடித்து, பின்னாளில் ரஜினி, கமல் உட்பட எத்தனையோ நாயகர்களின் தாயாக நடித்த பண்டரிபாய் இப்படத்தில்தான் அறிமுகமானார்.

கோயம்புத்தூரில் அமைந்திருந்த சென்ட்ரல் ஸ்டூடியோவில் இப்படம் தயாரிக்கப்பட்டது. மிகக்குறைவான பிலிம் ரீல்களை பயன்படுத்தினாலும், நன்கு திட்டமிட்டு எடுத்த காட்சிகளை மிகச்சரியாகத் தொகுத்து தனது திறமையைப் பறைசாற்றினார் சுந்தர்ராவ் நட்கர்னி.

முடிந்தவரை எல்லா காட்சிகளிலும் ஏதோ ஒரு ஷாட் ட்ராலியைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டிருப்பது இயக்குனரின் சினிமா காதலைக் காட்டுகிறது.

தியாகராஜ பாகவதரின் படங்களில் பாடல்கள் எழுதி, ராகங்களை வரையறுக்கும் சுதந்திரத்தைப் பெற்றிருந்தார் பாபநாசம் சிவன். இந்தப் படத்திலும் அவரது கைவண்ணத்திலேயே பாடல்கள் அமையப் பெற்றன.

1944 அக்டோபர் 16ஆம் தேதியன்று ஒரு தீபாவளித் திருநாளில் ஹரிதாஸ் வெளியானது. அதற்கடுத்த ஆண்டுகளில் வந்த இரண்டு தீபாவளிகளைக் கடந்தும், சென்னை பிராட்வே சன் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடியது இத்திரைப்படம்.

133 வாரங்கள் ஓடிய ஹரிதாஸின் சாதனை பின்னாளில் சென்னை சாந்தி தியேட்டரில் ஓடிய ‘சந்திரமுகி’யால் முறியடிக்கப்பட்டது. இந்த படம் தந்த வெற்றி மதுரையில் ராயல் எனும் நூற்பாலையை நிறுவினர் இப்படத்தின் தயாரிப்பாளர்கள்.

அசோக்குமார், சிவகவி வெற்றிகளால் உச்சம் தொட்ட பாகவதர், ஹரிதாஸ் தந்த வெற்றியால் சுமார் 12-க்கும் மேற்பட்ட படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், அந்த மகிழ்ச்சி நெடுநாள் நீடிக்கவில்லை.

1 லட்சம் ரூபாய் சம்பளம் பாகவதருக்கு என்று செய்திகள் வெளியான நிலையில், லட்சுமிகாந்தன் கொலை வழக்கு அதற்குப் பாதகமாக அமைந்தது.

1945-ஆம் ஆண்டு இந்த வழக்கில் என்.எஸ்.கிருஷ்ணனும் தியாகராஜ பாகவதரும் கைது செய்யப்பட்டனர். இந்துநேசன் பத்திரிகை ஆசிரியர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில்  குற்றம் சாட்டப்பட்டனர். இதனால் 4 ஆண்டுகள் இருவரும் சிறைவாசம் அனுபவித்தனர்.

பத்திரிகைகளும் மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த வழக்கு லண்டன் வரை சென்று, அதன்பின்னர் எம்கேடியும் என்.எஸ்.கேயும் நிரபராதிகள் என்று தீர்ப்பு வெளியானது.

வெளியுலகைத் திரும்பக் காண முடிந்த பாகவதரால் திரையுலகில் மீண்டும் வெற்றிகளைச் சுவைக்க முடியவில்லை. அவரது சொந்தத் தயாரிப்பில் வெளியான ராஜமுக்தி, சியாமளா, அமரகவி, புதுவாழ்வு, சிவகாமி என்று அடுத்தடுத்த படங்களின் தோல்வியினால் துவண்டு போனார்.

அவரது பாடல் கச்சேரிகளும் கூட மக்கள் ஆதரவைப் பெறவில்லை. மாபெரும் வெற்றிகளைச் சுவைத்தவரால் இதனைத் தாங்க முடியவில்லை. 1959ஆம் ஆண்டு உடல்நலம் குன்றி இறந்துபோனார் பாகவதர்.

ஹரிதாஸ் தந்த வெற்றியை அனுபவிக்க முடியாமல் சிறையில் தியாகராஜ பாகவதர் இருந்த காலகட்டத்தில், அவருக்குப் பதிலாக வேறு சில நாயகர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் படத்தயாரிப்பாளர்கள் இறங்கினர்.

எம்.கே.ராதா, டி.ஆர்.மகாலிங்கம், ஹொன்னப்ப பாகவதர், எம்.ஜி.ராம்சந்தர் என்று பல நாயகர்கள் திரைத்துறையில் நுழைந்தனர். பின்னணி பாடும் பழக்கம் வளரத் தொடங்கியதால் கதாநாயகர்கள் பாட வேண்டுமென்ற கட்டாயம் இல்லாமல் போனது.

சமூகப்படங்களின் எழுச்சியும், இளங்கோவனுக்குப் பிறகு வசனங்களின் மூலமாக நாயகர்களைக் கட்டமைக்கும் முயற்சியும் பெருகின.

1955ஆம் ஆண்டுக்குப் பிறகு எம்ஜிஆரும் சிவாஜியும் தமிழ்த் திரையின் இரு பெரும் சக்திகளாகினர். அவர்களுக்குத் தங்களது பலமும் பலவீனமும் நன்கு தெரிந்திருந்தன.

எதை வெளிப்படுத்துவது, எதை வெளிக்காட்டாமல் இருப்பது, புகழ்பெற்ற திரைப்படங்களைப் பிரதியெடுக்கத் துடிக்கும் தயாரிப்பாளர்களைக் கையாள்வது போன்றவற்றையும் புரிந்து கொண்டனர்.

எம்.கே.தியாகராஜ பாகவதரும் பி.யு.சின்னப்பாவும் தங்களது தொடர் வெற்றிகளைக் கொண்டாடிய அளவுக்குத் தோல்விகளை எதிர்கொள்ளும் வழிகளை அறிந்திருக்கவில்லை. தொடர் மோதலில் ஈடுபட்ட தங்களது ரசிகர்களைக் கைக்கொள்ளும் வித்தையைச் செயல்படுத்தவில்லை.

அதனால், இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் புகழின் உச்சத்தைத் தொட்டவர்கள் அது முடிவடைவதற்குள் தங்களது சரிவைத் தேடிக்கொண்டனர்.

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர்ஸ்டார் என்று கொண்டாடப்பட்ட பாகவதர் தங்கத்தட்டில் சாப்பிட்டதாகச் சொல்வதை அவருடைய உறவினர்களே உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். பிறகு அவரே பார்வையிழந்து இறுதிக்காலத்தில் சிரமப்பட வேண்டியிருந்தது.

இருந்தும் தன்னுடைய நாயக பிம்பத்தைக் கலைக்கக் கடைசிவரை பாகவதரும் தயாராக இல்லை. குணச்சித்திர படங்களில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை.

கூடவே, 1947க்குப் பிறகு இந்தியாவில் அமைந்த சுதேசி அரசும் அதன் கொள்கைகளும் அதனால் ஏற்பட்ட சமூக மாற்றங்களும் திரைப்படங்களின் உள்ளடக்கத்தை மாற்ற வழிவகை செய்தது.

கண்ணுக்குத் தெரியாத காரணங்களால் மக்களிடம் ஏற்பட்ட மனமாற்றம் பாகவதருக்குப் பொருளாதார வீழ்ச்சியை உண்டாக்கியது.

மாயக்கண்ணனாகக் கொண்டாடப்பட்டவர், காலத்தின் ஓட்டத்தில் தமிழ்ச் சமூகத்தில் எந்த ஓசையும் எழுப்பாமல் மறைந்துபோனார்.

இது அத்தனையையும் மீறி, ஒரு தலைமுறையினரால் கொண்டாடப்பட்ட கலைஞன் என்றவகையில், தியாகராஜ பாகவதர் நடித்த ஹரிதாஸ் முக்கியத்துவம் வாய்ந்த படைப்பாகும்.

மிக இலகுவான கதை, இனிமையான பாடல்கள், தகுந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் உதவியுடன் அற்புதமான வெற்றிப் படத்தை உருவாக்க முடியும் என்பதற்கு ‘ஹரிதாஸ்’ சிறந்த உதாரணம்.

அதேநேரத்தில் எந்தவகையிலும் பிரதியெடுக்க முடியாதவாறு மிக எளிமையானது என்ற சிறப்பையும் பெற்றது.

படத்தின் பெயர்: ஹரிதாஸ், தயாரிப்பு: ராயல் டாக்கீஸ் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ், திரைக்கதை, படத்தொகுப்பு, இயக்கம்: சுந்தர் ராவ் நட்கர்னி, வசனம்: இளங்கோவன், பாடல்கள்: பாபநாசம் சிவன், இசை: ஜி.ராமநாதன், பாபநாசம் சிவன், கேமிரா: ஆதி இரானி, டி.முத்துசாமி

நடிப்பு: தியாகராஜ பாகவதர்,டி.ஆர். ராஜகுமாரி, வசந்தகோகிலம், என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம் மற்றும் பலர்.

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.